வியாழன், 24 ஜனவரி, 2013

ஆப்கன் போரை வீடியோகேமுடன் ஒப்பிடும் இளவரசர் ஹாரி ! இப்போ யார் பயங்கரவாதி ?

லண்டன்-: ஆப்கன் போரை வீடியோகேமுடன் ஒப்பிட்டு பேசியிருக்கும் இங்கிலாந்து இளவரசர் ஹாரி மனநலம் பாதித்தவராக இருக்கலாம் என்று தலிபான் இயக்கம்  கூறியுள்ளது. அவரது பேச்சுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது. ஆப்கனில் தலிபான், அல் கய்தா தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. இந்த படையில் பிரான்ஸ்,  இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் படைகளும் இடம்பெற்றுள்ளன. இங்கிலாந்து ராணுவத்தில் பயிற்சி பெற்ற இளவரசர் ஹாரியும் (28), ஆப்கனில் நடக்கும்  போரில் பங்கேற்றார். இவர் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - மறைந்த இளவரசி டயானா தம்பதியின் இளைய மகன். இங்கிலாந்து ராணுவ ஹெலிகாப்டர்  பைலட்டாக 20 வாரம் பணியாற்றிய ஹாரி, பணி முடிந்து லண்டன் திரும்புகிறார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘ஆப்கனில் உள்ள நேட்டோ தரைப்படைகளுக்கு உதவியாக ஹெலிகாப்டர்களில் சென்று தலிபான்களின் முகாம்கள்  மீது நான் தாக்குதல் நடத்தினேன். என்னைப் போல பல வீரர்களும் போரில் திறம்பட செயல்பட்டார்கள். பிளேஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ் போன்ற வீடியோகேம்  போல ஆப்கன் போர் இருந்தது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு தலிபான் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தலிபான் இயக்க செய்தி தொடர்பாளர் ஸபியுல்லா முஜாகித் கூறியிருப்பதாவது: ஆப்கனில் பல ஆண்டுகளாக நடந்துவரும் போரை வீடியோகேமுடன் ஒப்பிட்டிருக்கிறார் ஹாரி. ஆப்கன் போருக்கு இங்கிலாந்து அரசு எவ்வளவு செலவு செய்திருக்கிறது, இதனால் அவர்களது பொருளாதாரம் எவ்வளவு தடுமாறியிருக்கிறது, எத்தனை பேரை பலிகொடுத்திருக்கிறார்கள்.. இதெல்லாம் ஹாரிக்கு  வீடியோகேம் போல தெரிகிறதா? போரை கேமுடன் ஒப்பிடுவதே கேவலம். அதையும் ஒரு இளவரசர் செய்திருப்பது மிகமிக கேவலம். அவர் மனநலம்  பாதிக்கப்பட்டவர் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆப்கனின் ஹெல் மாண்ட் பகுதிக்கு அவர் வந்திருக்கலாம். ஆனால், குறிப்பிடத்தக்க சாதனை எதையும் செய்யாத அவர் பலரை கொன்றதாக மிகைப்படுத்தி  சொல்கிறார். யுத்த களத்துக்கு அவரை வரவிடாமல் அவரது பாதுகாவலர்கள் மிக பத்திரமாக பாதுகாத்து வந்திருக்கிறார்கள். ஒரு தூதரக அதிகாரி போல  ஆப்கனுக்கு ஹாரி வந்து போனாரே தவிர, ராணுவ வீரனாக வரவில்லை. இவ்வாறு முஜாகித் போனில் கூறியதாக ‘த டெலிகிராப்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக