புதன், 23 ஜனவரி, 2013

காவிரிக்காக புதுசு புதுசா வழக்கு ! எதற்கு ?

‘காவிரி நீர் இல்லாமல் தஞ்சாவூர் டெல்டா பகுதிகளில் குறுவை/சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கே காரணம்’ என்று உச்சநீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றை தொடர உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசு உச்ச நீதி மன்ற தீர்ப்புகளையும் காவிரி நடுவர் மன்ற முடிவையும், பிரதமர் தலைமையிலான காவிரி நதி ஆணைய உத்தரவுகளையும் மதிக்காமல் திமிராக நடந்து கொள்கிறது.
  • 2012 செப்டம்பர் 19ம் தேதி காவிரி நதி ஆணையத்தின் தலைவரான பிரதமர் மன்மோகன் சிங் ‘செப்டம்பர் 21 முதல் தினமும் தமிழ்நாட்டுடனான பிலிகுண்டு எல்லையில் விநாடிக்கு 9000 கன அடி விட வேண்டும்’ என்று உத்தரவிட்டார். அதை கர்நாடகா மதிக்கவில்லை.
  • தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
  • செப்டம்பர் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசை கண்டித்து நதி நீர் ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்துமாறு கூறியது.10 நாட்கள் மட்டும் விநாடிக்கு 5,000 கன அடி நீர் விட்ட கர்நாடகா அரசு உச்ச நீதி மன்ற உத்தரவையும், பிரதமர் உத்தரவையும் மீறி அக்டோபர் 8ம் தேதி நீர் விடுவதை நிறுத்தியது.
  • அக்டோபர் 9ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடர உத்தரவிட்டார்.
  • அக்டோபர் 17ம் தேதி தமிழ்நாடு அரசு தண்ணீர் விடும்படி கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரும் ஒரு புதிய வழக்கை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்தது.
  • நவம்பர் 15ம் தேதி காவிரி கண்காணிப்பு குழு நவம்பர் 16க்கும் 30க்கும் இடையே தமிழ்நாட்டுக்கு 4.81 டிஎம்சி தண்ணீர் விடும்படி உத்தரவிட்டது. கர்நாடக அரசு அதை மதிக்கவில்லை
  • நவம்பர் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் கர்நாடகாவுடன் பேச்சு வார்த்தை நடத்தச் சொல்லி தனது பொறுப்பைத் தட்டிக் கழித்தும் மறு பேச்சு பேசாமல் பெங்களூருவுக்குப் போய் கர்நாடக முதல்வர் ஷெட்டாரிடம் பேசினார், ஜெயலலிதா.எதிர்பார்த்தபடியே ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று கர்நாடக அரசு கூறி விட்டது.
  • டிசம்பர் 6ம் தேதி உச்ச நீதிமன்றம் விநாடிக்கு 10,000 கனமீட்டர் நீரை தமிழ்நாட்டுக்கு விடும்படி உத்தரவிட்டதுமூன்று நாட்கள் மட்டும் தண்ணீர் விட்ட கர்நாடக அரசு அதன் பிறகு அணைகளை மூடி விட்டது.
  • டிசம்பர் மாதம் காவிரி நடுவர் குழுவின் இறுதித் தீர்ப்பை அரசு இதழில் வெளியிடும்படி உத்தரவிட்டது. மத்திய அரசு அதை இன்று வரை மதிக்கவில்லை.
  • உடனடியாக 12 டி.எம்.சி. தண்ணீரை விடுவிக்குமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதன் மீதான விசாரணை வரும் 28-ம் தேதி நடக்கவுள்ளது. கர்நாடகா அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.
உச்ச நீதி மன்ற தீர்ப்புகளையும், காவிரி நதி நீர் ஆணையத்தின் முடிவுகளையும், காவிரி நதி கண்காணிப்பு ஆணையத்தில் பிரதமரின் உத்தரவுகளையும் மதிக்காத கர்நாடக அரசின் மீது, இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்காக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த ஆண்டு மட்டும் டில்லிக்கும், பெங்களூருவுக்கும் ஜெயலலிதாவும் தமிழ்நாடு அரசும் நடந்த நடைகளின் வண்டிச் சத்தமே பல கோடி ரூபாய்களை தாண்டும். கூடவே உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கட்டணத்தையும் சேர்த்து கர்நாடகாவுடனான லாவணிக்கு தமிழ்நாடு அரசு பல கோடி ரூபாய்களை வீணாக்கியிருக்கிறது. இருப்பினும் அரசியல் சட்ட அமைப்புகளை பகிரங்கமாக மீறும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசுக்கோ உச்ச நீதிமன்றத்துக்கோ வக்கில்லை.
jayalalitha-cartoonஇவ்வளவுக்கும் பிறகு இன்னும் ஒரு சிவில் வழக்கை பதிவு செய்யப் போவதாக சொல்கிறது ஜெயலலிதா தலைமையிலான அரசு. வாடிக் கொண்டிருந்த பயிர்களை காப்பாற்றுவதற்கான உத்தரவுகளை செயல்படுத்த முடியாத பல் இல்லாத புலியான உச்ச நீதிமன்றத்திடம் அதனால் ஏற்பட்ட இழப்புகளுக்காக நஷ்ட ஈடு பெற்றுத் தருவதற்கான வழக்கைத் தொடர்கிறார் ஜெயலலிதா. துக்ளக் சோவும், சுப்ரமணிய சாமியும், குருமூர்த்தியும், இந்து பத்திரிகைக்கு லெட்டர்-டு-த-எடிட்டர் எழுதும் அம்பிகளும் யோசிக்கும் அளவிலேயே செயல்படும் ஜெயலலிதாவின் இந்து தேசிய பாசிச புத்தியில் விவசாயிகளின் உண்மையான நலனுக்கான நடவடிக்கைகள் எதுவும் தோன்றி விடப் போவதில்லை என்பது நிதர்சனம்.
சொத்துக் குவிப்பு தொடர்பான சிவில் வழக்கில் வாய்தா மேல் வாய்தா கேட்டு சாட்சியங்களை ஆரம்பத்திலிருந்து விசாரிக்க வேண்டும் என்று காமெடி செய்து வரும் அதே பாசிஸ்டுதான் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு மூலம் தமிழ்நாட்டுக்கு நீதி வாங்கித் தரப் போவதாக போக்கு காட்டுகிறார். ஜெயலலிதாவுக்கும் வழக்கறிஞர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பயணப் படியும், பஞ்சப்படியும், கட்டணமுமாக ஆதாயம் கிடைப்பதற்கு வேண்டுமென்றால் அது வழி செய்யலாமே தவிர வாழ்வாதாரங்களை இழந்து துன்புறும் விவசாயிகளுக்கு எந்த நிவாரணத்தையும் தந்து விடப் போவதில்லை.
உண்மையில் தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனில் அக்கறை உள்ள மாநில முதலமைச்சராக இருந்தால் மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும்.
கர்நாடக அரசு உச்ச நீதி மன்ற, காவிரி நதி நீர் ஆணைய உத்தரவுகளை முழுமையாக பின்பற்றாதது வரை தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய/மாநில அரசு அமைப்புகளிலிருந்து மத்திய அரசுக்கு வரிப் பணம் அனுப்பப்படாது; தமிழ்நாட்டிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படாது; தமிழ்நாட்டில் மத்திய அரசின் அமைப்புகள் செயல்படுவதற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்காது; என்று அறிவித்து செயல்படுத்துவதற்கான துணிச்சல் ஜெயலலிதாவுக்கு இருக்கிறதா?
ஒருவேளை அப்படிச் செய்தால் இந்திய அரசுக்கு கண்டிப்பாக ஒரு நெருக்கடி வரும். அப்போது அவர்கள் கர்நாடகத்தை வழிக்குக் கொண்டு வரும் வழிகளை யோசிப்பார்கள். இல்லையென்றால் மத்திய அரசு புறக்கணிப்பை இன்னும் வீச்சாகக் கொண்டு செல்லலாம். அப்படி செய்தால் பாசிச ஜெயா தனது அரசைக் கூட இழக்க நேரிடலாம். ஆனால் தமிழகத்தின் போராட்டத்தை இது இன்னும் உயர்ந்த தளத்தில் கொண்டு செல்லும். என்றாலும் பாசிச ஜெயாவுக்கு அத்தகைய துணிச்சலோ, உறுதியோ, மக்கள் பால் நாட்டமோ கிடையவே கிடையாது.
கர்நாடகா அரசியல்வாதிகள் தம் மாநிலத்தின் அநியாய உரிமைகளுக்காக எடுக்கும் துணிச்சலான முடிவுகளுக்கு பதிலடியான முடிவுகளை எடுக்காத கோழைகள்தான் தமிழ்நாட்டு முதலமைச்சரும் அரசும். உச்ச நீதிமன்றத்துக்கும் காவிரி நதி ஆணையத்துக்கும் மனு எழுதுவதாக ஜெயலலிதா நடத்தும் நாடகங்கள், மத்திய அரசையும் நீதிமன்றங்களையும் பொறுத்த வரை அவர் ஒரு காகிதப் புலி மட்டுமே என்பதையே காட்டுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக