செவ்வாய், 29 ஜனவரி, 2013

தியேட்டரில் வகுப்பெடுத்த பாரதிராஜா காடுவெட்டிக்கும் ராமதாசுக்கும் எதிராக பேசாதது ஏன்?

பாரதிராஜா விடலைகளை உசுப்பேத்தும் தனுஷ், அல்டிமேட், ஆக்சன் கிங், இளையதளபதி, சின்னதளபதி, காதல், திருமணம் அனைத்தையுமே விஜய் டி.விக்கு வியாபாரமாக்கிய சினேகா-பிரசன்னா இப்படி காதலை பல பரிமாணத்தில் தமிழகத்துக்கு கலக்கி கொடுத்த பெரிய பட்டியலே.. நாட்டில் காதலை முன்வைத்து ஒரு அநியாயம் நடக்கும்போது வாயை மூடிக்கொள்வது, நமக்கேன் வம்பு! என்ற பிழைப்புவாத கண்ணோட்டம் மட்டும் காரணமல்ல, திரைத்துறைக்குள்ளும் தினவெடுத்து திரியும் சொந்தசாதி அரிப்பும்தான்! vinavu,com
தாழ்த்தப்பட்டோரின்  ஊரையும் கொளுத்திவிட்டு, உடைமைகளையும் பறித்துவிட்டு, சந்தடி சாக்கில் வந்தவரை ஆதாயம் என வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்கவேண்டும், அதன் பல்லைப் பிடுங்க வேண்டும் என ஆதிக்கசாதி வெறியர்கள் அய்ந்து நட்சத்திர விடுதியில் ரூம் போட்டு சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். சினிமாகாரர்களையே விஞ்சும் வகையில் ‘நாடகக் காதல்’ எனப் புது ட்ரீட்மென்ட்டோடு பாமக ராமதாஸ் போன்றோர் பிலிம் காட்டவும் இறங்கிவிட்டார்கள். “டேய்! எவனாவது சாதி மாறி காதலிச்சா வெட்டுங்கடா!” என காடுவெட்டியும், கந்துவட்டியும் உருட்டுக் கட்டையோடு உலா வருகையில், “ஒரு பொண்ணும் நீயும் லவ் பண்ணா… அவள கடத்தி தருவேன், உனக்கே மண முடிப்பேன்..” என்று ‘போடா!போடியில்!’ ஸ்டெப்பு போட்ட எந்த சிம்புவும் சந்து பக்கம் கூட காணோம்! மொத்த கோடம்பாக்கத்து கும்பலுக்கும் இது பொருந்தும்.
காதலுக்கு விதவிதமாக ‘சீன்’ சொன்னவர்கள், பார்த்து காதல், பார்க்காமலே காதல் என்று காதலிலே கரைகண்டவர்கள், காதலுக்கு மெட்டு போட்டே கட்டை தேய்ந்த விற்பன்னர்கள், காதலுக்கென்றே பிறந்து வளர்ந்ததுபோல காட்டிக் கொள்ளும் கவிஞர்கள், இப்படி ஊரை உசுப்பேத்தியே காதலை வைத்து கல்லா கட்டியவர்கள் எல்லாம், ஒரு காதல் திருமணத்தை சாக்கு வைத்து வன்னிய சாதிவெறியோடு செட்டு போடாமலேயே சேரியை கொளுத்தும்போது, எட்டிப்பார்க்கவும் இல்லை, எதிர்த்துப் பேசவுமில்லை என்றால் இந்த கோடம்பாக்கத்து காரியவாதிகளை ஆதிக்க சாதிவெறிக்கு அடிக்கொள்ளிகள் என்று ஏன் சொல்லக்கூடாது?
காதலுக்கு கண்ணில்லாமல் போகலாம், ஆனால் சாதி, வர்க்கம், மதம், ஆணாதிக்கம் எல்லாம் இருக்கிறது, எதார்த்தத்தில் இவைகளைக் கடந்து இரு தனிநபர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே தீர்மானித்துக் கொள்ள விரும்பும்போது, தடுக்கும் ஆதிக்க வெறியர்களை தட்டிக் கேட்டு, சமுதாயத்தை நாகரிகப்படுத்துவதுதான் சமூக அக்கறையுள்ளவர்களின் வேலை.
காதல் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு வெட்டுங்கடா! என்ற கும்பலும், காதல் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிங்கடா! படத்தை ஹவுஸ்புல்லா ஓட்டுங்கடா! என்ற கும்பலும் சமூக அக்கறைக்கும், நாகரிகத்துக்கும் சம்பந்தமில்லாதவர்கள் என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது தருமபுரி தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள்.
இனியாவது காதல் இளவரசன் பட்டத்தை வெட்கத்துடன் துறப்பாரா?
இவ்வளவு காலம் ‘காதலை’ வைத்து வயிறு வளர்த்தோமே என்ற கூச்சநாச்சம் கொஞ்சமாவது இருந்தால், காதல் பிரச்சனையை சாக்குவைத்து ஆதிக்க சாதிவெறியை கிளப்பி வெறியாடும் அயோக்கியர்களுக்கு எதிராக ஒரு கண்டனம், இல்லை ஒரு ‘கனிவான’ அறிக்கை கூட வெளியிடாமல், எந்த ஜோடியாவது சாகட்டும், நாம் அடுத்த காதல் ‘சிச்சுவேசனை’ ‘டெவலப்’ பண்ணி காசை பார்ப்போம் என்று தன்பாட்டுக்கு காதலை வைத்து பிழைப்பு நடத்தும் இந்த கும்பல்தான், காதலை வைத்து காசு பறிப்பவர்களே ஒழிய தலித் காதலர்கள் அல்ல, என்ற உண்மையை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும். எது எதுக்கோ ‘விஸ்வரூபம்’ எடுக்கும் காதல் ‘இளவரசன்’ பழைய பட்டத்துக்கு ஏற்ற மாதிரி பாய்ந்து புரள வேண்டாம், ‘கலைஞானி’ அளவுக்காவது கத்தக்கூடாதா? உள்ளூரில் ஒன்று நடக்கும்போது வாயைத்திறக்காத இவர் குறைந்த பட்சம் காதல் இளவரசன் பட்டத்தையாவது வெட்கத்துடன் துறப்பாரா? கன்னட இனவெறியன் ராஜ்குமாரை விடுவிக்க வீரப்பனுக்கு வேண்டுகோள் விடுத்த, சூப்பர்ஸ்டார் காதலர்களை வாழ வைக்க காடுவெட்டிக்கு ஒரு ‘வாய்ஸாவது’ கொடுக்கக்கூடாதா? நத்தம் காலனி பற்றி எரியும்போது வாயைத் திறக்காமல், சத்தம் போட்டு ‘தீ..தீ..’ என்று காதலியோடு பாட்டுப்பாடி ‘டூப்பு’
போட்டால் போதுமா? படிக்கப் போகும் பெண்ணை விரட்டி, விரட்டி காதலித்து “எங்கள எல்லாம் பாத்தா புடிக்காது! பார்க்க பார்க்கத்தான் புடிக்கும்!” என்று விடலைகளை உசுப்பேத்தும் தனுஷ், அல்டிமேட், ஆக்சன் கிங், இளையதளபதி, சின்னதளபதி, காதல், திருமணம் அனைத்தையுமே விஜய் டி.விக்கு வியாபாரமாக்கிய சினேகா-பிரசன்னா இப்படி காதலை பல பரிமாணத்தில் தமிழகத்துக்கு கலக்கி கொடுத்த பெரிய பட்டியலே.. நாட்டில் காதலை முன்வைத்து ஒரு அநியாயம் நடக்கும்போது வாயை மூடிக்கொள்வது, நமக்கேன் வம்பு! என்ற பிழைப்புவாத கண்ணோட்டம் மட்டும் காரணமல்ல, திரைத்துறைக்குள்ளும் தினவெடுத்து திரியும் சொந்தசாதி அரிப்பும்தான்!
மனிதனிடமுள்ள எல்ல நற்குணங்களையும் காதல்தான் வெளிக்கொண்டு வரும்! ஆதலினால் காதல் செய்யுங்கள்! என்று மூன்று மணிநேரம் நம்மை தியேட்டரில் வைத்து வகுப்பெடுத்த இந்த ‘படைப்பாளி’ கும்பல், சாதிவெறி, காதலர்களை படுத்தும்போது உங்கள் நல்ல குணம் எந்த டிஸ்கஸனில் ‘புல்’ ஆகி இருந்தது? நாட்டில் எது நடந்தாலும் அதை வேடிக்கை பார்த்து, அதிலும் வியாபாரத்திற்கு ஒரு ‘ஒன்லைன்’ கிடைக்குமா? என்பதுதான் கோடம்பாக்கத்தின் ஒரிஜினல் கேரக்டர். சினிமாவில் பதினெட்டுபட்டியைக் கூட்டி மரத்தடியில் ‘கலப்புத் திருமணத்திற்கு’ ஆதரவு கொடுத்து ‘இதுதாண்டா இந்த நாட்டாமையோட தீர்ப்பு!” என்று சொடக்கு போடும் சரத்குமாரும், காமெடி ட்ராக்கில் கலக்கும் ’தேவர்’ கருணாஸூம் பச்சையான சாதிவெறி ரகமென்றால், மத்த பார்ட்டிகள் அவர்களுக்கே உரிய இயக்குநர் இமயம், இயக்குநர் சிகரம் என்று தனி ஆங்கிளில் சாதி பார்ப்பவர்கள்தான்.
காதலர்களுக்காக காடுவெட்டி குருவுக்கும், ராமதாசுக்கும் எதிராக பாரதிராஜா பேசாதது ஏன்?
‘என் இனிய தமிழ் மக்களே’ என்று நம்மை சினிமா டிக்கெட் வாங்க கூப்பிடும் கிராமத்து பாரதிராஜா… காதலர்களுக்காக காடுவெட்டி குருவுக்கும், ராமதாசுக்கும் எதிராக பேசாதது ஏன்? ‘சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்!’ நாடு முழுக்க ‘வீராசாமிகள்’ கேட்கிறார்கள்! பதில் சொல்லுங்கள்! தமிழர் தாய்நிலத்தை பறித்த சிங்கள வெறியர்களையும், சிங்களச்சிகளையும் பழிக்குப் பழி வாங்க வேண்டுமென மேடை போட்டு கொட்டி முழக்கும் செந்தமிழன் சீமான்… வன்னிய சாதிவெறிக்கு தீக்கிரையான நாய்க்கன் கொட்டாய் சேரிகளுக்காக, வன்னிய ராசபக்சே ராமதாசை ஜாடையாகக் கூட கண்டிக்காத மர்மமென்ன? ஒருவேளை உங்கள் தமிழ்த்தேசத்தில் சேரிகள் சேர்த்தியில்லையோ?
வார்த்தைக்கு வார்த்தை “நான் தமிழன். தமிழ் மக்களின் வாழ்க்கையைச் சொல்லுகின்ற சினிமா தமிழ்நாட்டில் இல்லை!, நான் விவசாயி. தானே புயலால் பாதிக்கப்பட்ட முந்திரி விவசாயிகளின் அவலத்தை ஆவணப்படமாக எடுத்து போராடுகிறேன்!” என்று வழக்காடிய தங்கர்பச்சான் இந்நேரம் சொந்த சாதி ஆதிக்க வெறிக்கு எதிராக உடுக்கெடுத்து “பாவிகளா! சேரிகளை கொளுத்தி சாதிக்கு படையல் போடும் உங்கள் சங்கை மிதிப்பேன்!” என்று ஆடியிருக்க வேண்டாமா? சக மனிதனை வாழவிடாத வன்னிய சாதிவெறியின் கேவலத்தை முதலில் உங்கள் பாட்டாளி சொந்தங்களுக்கு படம்பிடித்துக் காட்டுங்கள்! ஒட்டுமொத்த தமிழர்களுக்கான உலகத்தரத்தை பிறகு பார்க்கலாம்! இவர்கள் மட்டுமல்ல, கோடம்பாக்கத்துக்குள்ளேயே குட்டி அக்ரஹாரங்களும், மேலத்தெருவும், கீழத்தெருவும், காலனிகளும் ‘மெயின்டெய்ன்’ ஆகும்போது, இவர்களின் சமூக உணர்வு சாதியெல்லை தாண்டாதது ஆச்சரியமில்லை. சொந்த காலையே கழுவாத இந்த சுரணையற்றதுகள்தான் சமூகத்தை குளிப்பாட்டி கலையாக்கப் போகிறார்களாம்!
இதில் கவிஞர்கள் தனிரகம். வட்டார வழக்கில் அசத்துவதாக சொல்லி “ஏடி.. கள்ளச்சி.. தெரியலயா” என்று காதல் பாட்டில் ‘கள்ளப்பாட்டு’ எழுதும், சமூகப் பேரவை என்ற பெயரில் சாதிக் குழுக்குறி கொண்டாடும் கவிப்பேரரசு, ‘தமிழுக்குச் சோறு போட்டு’ சாதிக்கு குழம்பு ஊத்தும் பேர்வழி. எல்லா சாதிக்கும் காதலை கவுச்சியாகப் பாட்டெழுதினாலும், தன் வாயை மட்டும் ‘அவா’ பாஷையை கழுவாமல் வைத்திருக்கும் வாலி, சசிகலா நடராசனும் சாதிக்கூட்டணியில் கோதிக்கொண்டு “உன்னக் கொன்னா கூட தப்பேயில்ல’ என்று காதலாய் கசிந்துருகும் சினேகன், காதலை வார்த்தைகளில் வாழவைக்கும் ‘கவிப்பேரலை’ நா. முத்துக்குமார், வித்தகக்கவி விஜய், இன்னும் பல வெங்காயக் கவியெல்லாம், “சாதிமாறி காதலித்தால் வெட்டுவோம்” என்று சவால்விடும் போதும்! வடநாட்டு டான்சருக்கு குத்துப் பாட்டெழுத தெம்பிருக்கும் இந்தக் கவிராயர்களால், வன்னிய சாதிவெறி காடுவெட்டி குருவுக்கு ஒரு குத்துமதிப்பு அளவுக்காவது கண்டனம் தெரிவிக்க சாதியக் கட்டுமானம் இடம் கொடுக்கவில்லை போலும்.
இப்படி சினிமா கலைஞர்கள் மட்டுமல்ல, சினிமாவுக்கு துண்டு போட்டு நோட்டம் பார்க்கும் இலக்கியக் கும்பல்களுக்குள்ளும் ஆதிக்க சாதிவெறிக்கெதிரான ‘ஆளுமை’ பீறிடவில்லை. “வெட்கத்தைக் கேட்டால்.. என்ன தருவாய்” என்று குமுதத்தில் காதலுக்காகவே சீழ் வடிந்த தபூ சங்கரால், இராமதாசிடம் போய் காதலைக் கேட்டால் என்ன தருவாய் என்று கேட்க நேரமில்லை போலும். காதலுக்காகவே நேரம் ஒதுக்கி சிந்தித்த இந்தக் கழிசடைகள் கிடக்கட்டும். பின்தொடரும் நிழலில் கம்யூனிச அபாயத்தை எச்சரிக்கும் ‘தரமான’ படைப்பாளி, காடுவெட்டிக் குருவைப் பின்தொடர்ந்து போய் எச்சரிக்கத் தயாரா? இதுதவிர தமிழ்ப்படைப்பாளிகள் எழுத்தாளர்கள் சங்கம் என்று பெயர் வைத்துக் கொண்டு சமூக உணர்வைக் கொப்பளிக்கும் பிரபஞ்சன் வகையறாக்கள் வரை ராமதாசுக்கு எதிராக பொருள் பொதிந்த ஒரு கொட்டாவியைக் கூட விடக் காணோம்! இவர்கள் மட்டுமல்ல, காதலை கலை இலக்கியம் என பல வடிவங்களில் கடை விரித்த எந்தக் கும்பலும் காதலர்களை வழிமறிக்கும் சாதிவெறிக்கு எதிராக தெருப்பக்கம் காணோம். காதலர்கள் மேல் சாதிவெறி தீ வைக்கும்போது களத்தில் வந்து போராடாமல், எதையும் ‘வித்தியாசமாக’ வேடிக்கை பார்க்கும் இந்த வியாபாரிகள்தான் கலை வளர்க்கும் விற்பன்னர்களாம்! என்ன ‘இவற்றினைப்’ பார்க்கவே பயங்கரமாயில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக