செவ்வாய், 8 ஜனவரி, 2013

2 கோடி ரூபா லஞ்சம்..மேல்மருவத்தூர் பங்காரு அடிகள் நிர்வாகிகள் சி.பி.ஐ கைது

மேல்மருவத்தூர் நிர்வாகிகள் லஞ்சம் கொடுத்த போது கைது! பெண் நிர்வாகி தப்பியோட்டம்!
Viruvirupu
லஞ்சம் கொடுக்க முயன்றபோது, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி நிர்வாகிகள் இருவர் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதிபராசக்தி பெண் நிர்வாகி ஒருவர் தப்பியோடி, தலைமறைவாகி விட்டார்.
அடிப்படை வசதிகள் அற்றதாக அனுமதி நிராகரிக்கப்பட்ட ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரிக்கு குறுக்கு வழியில் அனுமதி பெற லஞ்சம் கொடுக்க முயன்ற போதே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி நிர்வாகிகள் வசமாக சிக்கினர்.
மொத்தம் 2 கோடி ரூபா லஞ்சத் தொகை பேசப்பட்டு, முதல் தவணையாக ரூ. 25 லட்சத்துடன் ரெடியாக வந்திருந்தார்கள் இவர்கள்.
மேல்மருத்தூர் ஆதிபராசக்தி அமைப்பின் உரிமையாளர், பங்காரு அடிகள். இவர் தம்மை ஆதிபராசக்தியாக பிரகடனம் செய்துகொண்டு, அருள் வழங்கி வருகிறார். பங்காரு அடிகளுக்கு ஆதிபராசக்தி தொழிலைவிட வேறு பல தொழில்களும் உள்ளன. பல்வேறு கல்லூரிகளை நடத்துவதும் அந்த தொழில்களில் அடக்கம்.
இவற்றில் ஒன்றுதான், இந்த ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லூரி.
இந்த பல் மருத்துவ கல்லூரியில் உயர்படிப்புக்கு அனுமதி கோரி ஆதிபராசக்தி நிர்வாகத்தினர் மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் கல்லூரியில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்பதால் மருத்துவ கவுன்சில் அனுமதி தரவில்லை. இதைத் தொடர்ந்து குறுக்கு வழியில் அனுமதி பெற முடிவு செய்தனர். 
பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினர் டாக்டர் முருகேசன் என்பவருடன் பேரம் பேசப்பட்டது. ரூ.2 கோடியில் பேரம் படிந்தது. அதில் முதல் தவணையாக ரூ.25 லட்சம் சென்னை ராயப்பேட்டையில் வைத்து கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
இந்தத் தகவல் சி.பி.ஐ.-க்கு தெரிய வந்திருந்தது.
ஆதிபராசக்தி நிர்வாகிகள் பயபக்தியுடன் பணத்தை எடுத்து டாக்டர் முருகேசனிடம் நீட்டிய போது, அநீதி கண்டு அந்த பகவான் வரவில்லை, சாட்சாத் சி.பி.ஐ.யே வந்துவிட்டது!

அந்த இடத்தில் வைத்து, சாமியின் நிர்வாகிகள் இருவரையும், லஞ்சம் வாங்கிய ஆசாமியையும் லபக் செய்தார்கள்.
இவர்களுடன், இலவச இணைப்பாக, அடிகளாரின் சீடரான முன்னாள் எம்.எல்.ஏ. பழனி என்பவரும் வந்திருந்தார். அவருக்கும் திருக்காப்பு போடப்பட்டது. கைது செய்யப்பட்டுள்ள ஆதிபராசக்தி நிர்வாகிகள் இருவரது பெயர்கள், கருணாநிதி, ராமபத்திரன்.
இதற்கிடையே, இந்த டீலை பேசி முடித்து பராசக்தியையும், பல் மருத்துவ கவுன்சில் சக்தியையும் ஒன்றிணைத்த சக்தி மற்றொருவர் என்பது தெரியவந்தது.
அவர், ஆதிபராசக்தி பெண் நிர்வாகி ஸ்ரீலேகா.
சி.பி.ஐ. அதிகாரிகள் அவரைத் தேடிச் செல்ல, அவர் தப்பியோடி, தலைமறைவாகி விட்டார். இவரை இப்போது சி.பி.ஐ. தேடிவருகிறது.
மெயின் பராசக்தி பங்காரு அடிகளிடம் விசாரணை நடக்குமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.
இதில் மிகப்பெரிய ஆச்சரியங்கள் இரண்டு.
முதலாவது, பங்காரு சாமியின் சக்தி எந்தளவு வரை பாயும் என்பது தெரிந்தும், சாமியின் ஆட்களை சி.பி.ஐ. கைது செய்திருப்பது. இரண்டாவது, சி.பி.ஐ. வரப்போவது, பங்காரு சாமியின் ஞான திருஷ்டியில் தெரியாமல் போனது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக