திங்கள், 21 ஜனவரி, 2013

அமெரிக்காவில் 2வது முறையாக அதிபராக முறைப்படி பதவியேற்றார் ஒபாமா

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக 2வது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பாரக் ஒபாமா இன்று பிற்பகல் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நாளை பொது மக்கள் முன்னிலையில் மீண்டும் ஒபாமா பதவியேற்பு விழா நடக்கிறது. அமெரிக்காவில் 4 ஆண்டுக்கு ஒரு முறை அதிபர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படுகிறது. ஒருவர் 2 முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்க முடியும். ஜனநாயக கட்சி சார்பில் அதிபராக இருந்த ஒபாமா கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் 2வது முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி தோல்வி அடைந்தார்.
அமெரிக்க சட்டப்படி அதிபர் பதவி காலம் ஜனவரி 20ம் தேதி (இன்று) பிற்பகல் 12 மணிக்கு முடிகிறது. இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமா, இன்று பிற்பகல் முறைப்படி 2வது முறையாக அதிபர் பதவியேற்றார். வெள்ளை மாளிகையில் நடந்த எளிமையான விழாவில், ஒபாமா பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் மட்டும் பங்கேற்றனர். துணை அதிபராக ஜோ பிடன் பதவியேற்றார். இவர்களுக்கு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், நாளை பொதுமக்கள் முன்னிலையில் ஒபாமா மீண்டும் அதிபர் பதவியேற்பார் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக