வியாழன், 10 ஜனவரி, 2013

டெல்லி பலாத்காரம் 2 மணி நேர திற்கு பின்புதான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்

எல்லோர் முகத்திலும் கரி...By ப. இசக்கி
ஓரே ஒரு ஆள், எல்லோர் முகத்திலும் கரியைப் பூசிவிட்டார். ஆம், தில்லியில் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் சகோதரர் சில உண்மைகளை அம்பலப்படுத்தி விட்டார். அவர் கூறியது, அவரது சொந்தக் கற்பனையோ, சுயநலக் கருத்தோ அல்ல.தொலைக்காட்சியில் முகம் தெரியவும், வாக்கு வேட்டைக்கும் நீலிக்கண்ணீர் வடிக்க அவர் அரசியல்வாதியும் அல்ல. அவர் ஒரு சாதாரண பிரஜை. பலாத்காரம் செய்யப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனது சகோதரி இறப்பதற்கு முன்பு தன்னிடம் கூறிய உண்மையைத்தான் அவர் இப்போது போட்டு உடைத்திருக்கிறார்."அந்த (பலாத்கார) சம்பவத்திற்குப் பிறகு அருகில் இருந்தவர்களிடமும், அந்த வழியாகச் சென்றவர்களிடமும் தனக்கு உதவி செய்யுமாறு என் தங்கை கேட்டிருக்கிறார். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை. சம்பவம் நடைபெற்ற சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகுதான் எனது தங்கை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த இடைப்பட்ட நேரத்தில் அவருடைய உடலிலிருந்து ரத்தம் ஏராளமாக வெளியேறியிருந்தது.விபத்து, தாக்குதல் என எதிர்பாராமல் பாதிக்கப்படுபவர்களுக்குத் தயக்கம் இல்லாமல் உடனடியாகப் பொதுமக்கள் உதவிசெய்ய முன்வர வேண்டும். இந்த விஷயத்தில் பொதுமக்களின் மனோபாவம் மாற வேண்டும்'' என்று கூறியிருக்கிறார். இது நம் ஒவ்வொருவரின் முகத்திலும் அறைந்ததுபோல இல்லையா?


மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு குற்றுயிரும், குலை உயிருமாக நடுரோட்டில் உடலில் ஆடையின்றி, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது அதைப் பார்த்துவிட்டு "ஐயோ பாவம், யாரோ ஒருத்தி அடிபட்டுக் கிடக்கிறாள்' என முகத்தைத் திருப்பிக்கொண்டு வேகமாக அந்த இடத்தைக் கடந்து சென்றவர்கள் எத்தனை பேர்? அவர்களில் யாராவது ஒருவர் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்குமே?

இப்போதாவது நாம் சிந்திக்க வேண்டும். செயலாற்ற வேண்டிய நேரத்தில் விட்டுவிட்டு அதன் பிறகு கூச்சல் போடுவதால் யாருக்கு என்ன பயன்?

நாம் எந்த தார்மிக அடிப்படையில் சாலைக்கு வந்து கூச்சல் போட்டோம்? அதற்கு நமக்கு என்ன அருகதை உண்டு என்று ஒன்றுக்கு பத்து முறை எண்ணிப் பார்க்க வேண்டிய தருணம் இது.

நடந்த சம்பவம் மன்னிக்க முடியாத குற்றம். அதற்குக் கடும் தண்டனை அளிக்க வேண்டியது கட்டாயம். ஆனால், அந்த உயிரைக் காப்பாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தும் உதவாமல் இருந்துவிட்டவர்கள் எத்தனை பேர்?

தில்லி சம்பவம் மட்டுமல்லாது இப்படிப்பட்ட வேறு பல சம்பவங்களை நேரில் பார்த்துவிட்டு உதவாமல்சென்ற நம் ஒவ்வொருவருக்கும் உள்ள குற்ற உணர்வுக்கு யார் தண்டனை தருவது?

இது தில்லி மாணவி விஷயத்தில் மட்டுமல்ல. விபத்தோ, தாக்குதலோ நேரிடும் எல்லா இடங்களிலும் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவோரை விட வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்வோர்தான் அதிகம். அவர்களுக்கு உதவி செய்யப்போய் நாம் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாதே என்ற அதீத முன்னெச்சரிக்கை நம்மைச் செயல்படவிடாமல் தடுக்கிறது. போலீஸ், கோர்ட் என்று அலைய முடியுமா என்று ஒரு சமாதானத்தை கூறிக் கொண்டு ஒதுங்கிப் போகிறோம்.

விபத்து மற்றும் தாக்குதலில் ரத்த காயம் ஏற்பட்டவர்களுக்கு அடுத்த அரை மணி நேரம்தான் முக்கியமானது. அதை மருத்துவத் துறையினர் "கோல்டன் ஹவர்' என்பார்கள்.

அந்த நேரத்திற்குள்ளாக பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் அனுமதித்து ரத்தம் வெளியேறுவதைத் தடுத்து உரிய சிகிச்சை அளித்தால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு.

எதுவுமே நமக்கோ அல்லது நமது ரத்த உறவுக்கோ நடக்காத வரையில் அதன் பாதிப்பு நம்மைச் சுடுவதில்லை. நாம் நேரடியாக அனுபவப்படும்போதுதான் எல்லா வலியும் தெரியும்.

சரி, இனிமேலாவது விபத்து அல்லது தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நம்மால் இயன்ற அளவு உதவ வேண்டும் என்ற மனநிலையை வளர்த்துக் கொள்வோம்.

மனம் மாறுவோம். அதுவே, தில்லி மாணவிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். - தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக