மொழிப்போர் / அத்தியாயம் 14
சின்னச்சாமியின் மரணம் கனன்று கொண்டிருந்த இந்தி எதிர்ப்பு நெருப்பை வேகமாக விசிறிவிட்டது. மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என்று பல தரப்பினரும் போராட்டக் களத்துக்கு வந்தனர். இந்தி ஆட்சிமொழியாக மாறவிருக்கும் 26 ஜனவரி 1965 நெருங்க நெருங்க போராட்டத்தின் வேகம் கூடியது. எங்கு பார்த்தாலும் போராட்டம், கோஷம், கறுப்புக்கொடி, கண்டனக்குரல்.
இன்றைய அத்தியாவசியப் பிரச்னை சோற்றுப் பிரச்னைதானே தவிர மொழிப்பிரச்னை அல்ல என்றார் காமராஜர். உடனடியாக எதிர்வினை ஆற்றினார் அண்ணா. சோற்றுப்பிரச்னைதான் பிரதானம் என்றால் எதற்காக பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இந்தித் திணிப்பு விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும்; பேசாமல் தமிழையும் ஆட்சிமொழியாக அறிவித்துவிட்டு, சோற்றுப் பிரச்னையைத் தீர்க்கும் விஷயத்தில் கவனம் செலுத்தலாமே என்றார் அண்ணா.
8 ஜனவரி 1965 அன்று கூடிய திமுக செயற்குழு, ஜனவரி 26 அன்று குடியரசு நாளை துக்க நாளாக அனுசரிக்க முடிவுசெய்தது. சுதந்தர தினத்தை இன்ப நாளாகக் கொண்டாடிய அண்ணா, குடியரசு தினத்தைத் துக்கநாளாக அனுசரிப்பது துரோகச் செயல் இல்லையா? என்று கேள்வி எழுப்பினர் காங்கிரஸ் தலைவர்கள். குடியரசு தினம் முக்கியத்துவம் வாய்ந்த தினம்தான். அந்த நாளில் இந்தி எதிர்ப்பை ஒத்திவைத்தால் என்ன செய்வீர்கள்? இந்திதான் ஆட்சிமொழி என்பதை திமுகவும் தென்னக மக்களும் ஏற்றுக் கொண்டார்கள் என்று மூலைக்கு மூலை பொய்ப் பிரசாரம் செய்வீர்கள். அதைத் தடுக்கவே குடியரசு நாளை அமைதியான முறையில் துக்கநாளாக அனுசரிக்கிறோம் என்றார் அண்ணா!
கடந்த காலங்களில் இந்தியின் காவலராக அடையாளம் காணப்பட்ட ராஜாஜி, தற்போது இந்தியை எதிர்க்கத் தயாராகி இருந்தார். நல்ல நாட்டுப் பற்றுள்ள, நுண்ணறிவுள்ள இந்தியக் குடிமக்கள் மூன்று கோடி பேரை கோபம் கொண்ட பிரிவினைக்காரர்களாக மாற்றும் சட்டமே ஆட்சிமொழி சட்டம் என்று தன்னுடைய சுயராஜ்யா இதழில் எழுதிய ராஜாஜி, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் திமுகவுக்கு நேசக்கரம் நீட்டினார்.
திமுகவின் துக்கள்நாள் அறிவிப்பு குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் பக்தவத்சலம், திமுக குடியரசு தினத்தை அமைதியான முறையில் துக்கநாளாகக் கொண்டாடினாலும் அதனைப் பார்த்துக் கொண்டு அரசாங்கம் சும்மா இருக்காது. திருமண வீட்டில் யாராவது அழுதுகொண்டிருந்தால் அதைத் திருமண வீட்டார் அனுமதிக்கமாட்டார்கள். அழுதுகொண்டிருப்பவர்களை வெளியே பிடித்துத் தள்ளி விடுவார்கள். திமுகவினர் தமது வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றுவதை அரசாங்கம் அனுமதிக்காது. கலவரமே ஏற்பட்டாலும் திமுகவினருக்கு அரசு பாதுகாப்பு தராது. பொதுமக்களே அவர்களுடைய அடாத செயலைத் தடுத்து நிறுத்திவிடுவார்கள் என்றார்.
போராட்டத்தில் இறங்குவது குறித்து சென்னை, மதுரை, தஞ்சை, திருச்சி, கோவை என்று பல இடங்களில் மாணவர்கள் கூடிப்பேசினர். இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்த கீழப்பழுவூர் சின்னச்சாமியின் முதலாம் ஆண்டு நினைவுநாள் 25 ஜனவரி 1965 அன்று போராட்டத்தைத் தொடங்க முடிவுசெய்தனர் மாணவர்கள். போராட்டங்கள் குறித்த தகவல்கள் கல்லூரி மாணவர்களுக்குக் கடிதம் மூலமாக அனுப்பப்பட்டன. சில மாணவர்கள் கல்லூரிகளுக்கு நேரில் சென்று ஆதரவு திரட்டினர்.
25 ஜனவரி 1965 அன்று போராட்டம் தொடங்கியது. மதுரையைச் சேர்ந்த கா. காளிமுத்துவும் நா. காமராசனும் இந்திய அரசியல் சட்டத்தின் பதினேழாவது பிரிவின் நகல்களை எரித்தனர். பின்னர் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கண்டன ஊர்வலத்தில் கலந்துகொண்ட மற்ற மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். இடையில் காங்கிரஸ் கட்சியினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
மதுரையில் மட்டுமல்ல, கோவை, திருச்சி, மேலூர், மாயவரம், தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், விருதுநகர், திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மாணவர் போராட்டங்கள் ஆக்கிரமித்தன. மாணவர்கள் தலைவர்கள் முதலமைச்சர் பக்தவத்சலத்தைச் சந்தித்துப் பேச விரும்பினர். ஆனால் அதற்கு மறுத்துவிட்டார் பக்தவத்சலம்.
26 ஜனவரி 1965 அன்று அதிகாலை நான்கு மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்ற இளைஞர் இந்தித் திணிப்பைக் கண்டித்துத் தீக்குளித்துவிட்டார் என்ற செய்தி பதற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர் விருகம்பாக்கம் அரங்கநாதன் தீக்குளித்தார். இந்தித் திணிப்பை எதிர்த்து தற்கொலைச் சம்பவங்கள் தொடர்ந்தன. அய்யம்பாளையம் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, மயிலாடுதுறை சாரங்கபாணி, விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து, சிவகங்கை ராஜேந்திரன், பீளமேடு தண்டபாணி என்று தமிழுக்காகத் தம்மைப் பலிகொடுத்தவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது.
ஜனவரி 26 அன்றுதான் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் முந்தைய நாளில் இருந்தே திமுகவின் முக்கியத் தலைவர்கள் பலரையும் கைது செய்தது பக்தவத்சலம் அரசு. ஆனாலும் போராட்டம் தடைபடவில்லை. திமுகவினர் தமது வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர். சட்டையில் கறுப்பு பேட்ஜ் அணிந்தனர்.
திமுகவினர் ஒருபக்கம் போராட்டம் நடத்திக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மாணவர்களின் போராட்டமும் தொடர்ந்துகொண்டிருந்தது. மாணவர் போராட்டங்களுக்கும் தீக்குளிப்புகளுக்கும் பின்னணியில் திமுகவினரின் கரங்கள் இருக்கின்றன என்றார் சாஸ்திரி. போராட்டத் தேதிக்கு முன்பே திமுகவின் முக்கியத் தலைவர்களையும் தொண்டர்களையும் கைது செய்துவிட்ட சூழலில் மாணவர்களை திமுக தூண்டுகிறது என்பது குற்றச்சாட்டு அல்ல; குழப்பம் விளைவிக்கும் முயற்சி என்றார் அண்ணா.
3 பிப்ரவரி 1965 அன்று தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் குழு உருவாக்கப்பட்டது. கட்சி சார்புள்ள மாணவர்கள் பலர் அமைப்புக்குள் இருந்தபோதும் எந்தவித கட்சி சாயமும் இல்லாத ரவிச்சந்திரன் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனடியாகப் போராட்டத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. பிறகு மாணவர் அமைப்பின் சார்பில் முதலமைச்சர் பக்தவத்சலத்தைச் சந்திக்கச் சென்றனர்.
ஜனவரி மாத இறுதியில் மாணவர்களை சந்திக்க மறுத்த முதலமைச்சர் இப்போது கொஞ்சம் இறங்கி வந்திருந்தார். அப்போதே சந்தித்திருந்தால் எத்தனையோ உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கமுடியும். சேதங்களைத் தடுத்திருக்க முடியும். முதல்வர் – மாணவர் சந்திப்பு நடந்தது. ஆனால் அப்படியொரு சந்திப்பே நடந்திருக்க வேண்டாம் என்ற அளவுக்கு மாணவர் தலைவர்களை அவமதித்து அனுப்பினார் முதலவர். போதாக்குறைக்கு, இந்தித் திணிப்பை வாபஸ்பெற முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார் பிரதமர் சாஸ்திரி.
அதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. ரயில் மறியல் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம், இந்தி எழுத்துகள் அழிப்பு, கடையடைப்பு என்று போராட்டம் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தது. மாணவர்களின் போராட்டத்தை அடக்கும் நோக்கத்துடன் ஏராளமான மாணவர்களைக் கைது செய்தனர். ராணுவம் வரவழைக்கப்பட்டது. தேவைப்பட்டால் துப்பாக்கிச்சூடு நடத்தவும் தயாராக இருங்கள் என்று காவல்துறையினருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக ஒரு செய்தி அண்ணாவை வந்தடைந்தது.
நிலைமை எல்லை மீறுகிறது என்று தெரிந்ததும் மாணவர்களை அழைத்துப் பேசினார் அண்ணா. ஒரு போராட்டத்துக்குத் தேவையான அனைத்து உத்திகளையும் நீங்கள் பயன்படுத்திவிட்டீர்கள்; உங்கள் ஆயுதக் கிடங்குகளில் இருக்கும் பெரும்பாலான ஆயுதங்கள் தீர்ந்துவிட்டன; எனினும், தமிழுக்கு இழைக்கப்படும் அநீதியை உலகறியச் செய்வதில் மாணவர் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது. போதும். போராட்டம் போதும். நேரடி நடவடிக்கையை உடனே நிறுத்துங்கள். இதுதான் அண்ணா கொடுத்த யோசனை.
அண்ணாவின் தலையீட்டுக்குப் பிறகும் மாணவர்கள் அமைதியடையவில்லை. போராட்டம் தொடர்ந்தது. விளைவு, துப்பாக்கியைத் தூக்கினர் காவலர்கள். ஏழு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருபத்தைந்து பேர் கொல்லப்பட்டனர். இது அரசாங்கம் சொன்ன கணக்கு. ஆனால் அசல் கணக்கு இன்னும் அதிகம் என்றனர் மாணவர் தலைவர்கள்.
திடீர் திருப்பமாக இந்தித் திணிப்பைக் கண்டித்தும் ஆங்கில நீட்டிப்பு குறித்த உத்தரவாதத்தைக் கோரியும் 11 பிப்ரவரி 1965 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சி. சுப்ரமணியமும் ஓ.வி. அளகேசனும் தமது பதவியை ராஜினாமா செய்தனர். பின்னர் இருவருமே ராஜினாமா கடிதங்களை வாபஸ் பெற்றனர்.
16 பிப்ரவரி 1965. திடீரென திமுக பொருளாளர் கருணாநிதி இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்த மாணவர்களைத் தூண்டிவிட்டவர் கருணாநிதி என்பதுதான் அரசு முன்வைத்த குற்றச்சாட்டு. ஆனால் இந்தித் திணிப்பை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்தவர்களைப் பார்த்து முதலமைச்சர் பக்தவத்சலம் திருப்திப்படுவதாக முரசொலியில் கார்ட்டூன் வெளியிட்டதுதான் கைதுக்குக் காரணம் என்பது கருணாநிதியின் வாதம்.
கொந்தளிப்பு அதிகரித்திருந்த சூழலில் 22 பிப்ரவரி 1965 அன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூடியது. ஆட்சி மொழிச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றனர் இந்திரா, பிஜூ பட்நாயக், எஸ்.கே. பாட்டீல் உள்ளிட்டோர். ஆனால் திருத்தத்துக்கான தேவையே எழவில்லை என்றனர் மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன் ராம் போன்றோர். சிக்கல் நீடித்தது. பிறகு முதல்வர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர் சாஸ்திரி. பிரச்னை பற்றி ஆராய்ச்சி செய்ய துணைக்குழு அமைத்ததோடு கடமையை முடித்துக் கொண்டது அந்த மாநாடு.
காங்கிரஸ் கட்சி கூட்டிய செயற்குழு செயலற்றுப் போயிருந்தது; முதலமைச்சர்கள் நடத்திய மாநாட்டிலும் முடிவுகள் எட்டப்படவில்லை. எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்துப் போயிருந்தன. அதிருப்திகள் சூழ்ந்த நிலையில் முதலமைச்சர் பக்தவத்சலத்தைச் சந்தித்துப் பேசினார் மாணவர் தலைவர் ரவிச்சந்திரன். இந்தி பேசாத மாநிலங்களின் சம்மதம் இல்லாமல் ஆட்சி மொழி விஷயத்தில் மத்திய அரசு எந்தவித முடிவையும் எடுக்காது; ஆங்கிலம் இணை ஆட்சிமொழியாக நீடிக்கும் என்ற நேருவின் உத்தரவாதம் காப்பாற்றப்படும் என்று பிரதமர் சாஸ்திரி உறுதி கொடுத்துள்ளார். அதை நிறைவேற்ற என்னால் ஆனதைச் செய்வேன் என்று உத்தரவாதம் கொடுத்தார் முதலமைச்சர் பக்தவத்சலம்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு மிரட்டல் விடுக்கவும் பக்தவத்சலம் தவறவில்லை. ‘இனியும் மாணவர்கள் கூடிநின்று கிளர்ச்சி செய்தால் விமானத்தில் இருந்து துப்பாக்கியால் சுடச்சொல்வேன்!’ அதன் தொடர்ச்சியாக மாணவர் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவித்தார் மாணவர் போராட்டக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன். அந்த முடிவை பல மாணவர்கள் ஏற்கவில்லை. மத்திய அரசு, இந்தித் திணிப்பு விஷயத்தில் மாணவர்களுக்கு மன நிறைவு தரக்கூடிய தீர்வைக் கொடுக்கும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்த அந்த மாணவர்கள், ரவிச்சந்திரனுக்குப் பதிலாக விருதுநகர் பெ. சீனிவாசனைத் தலைவராக்கினர்.
மாணவர்களின் போராட்டம் தொடர்ந்ததால் துப்பாக்கிச்சுடுகளும் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்தன. மொழிப்பிரச்னையைப் பெரியவர்களிடம் விட்டுவிடுங்கள்; கல்வியில் கவனம் செலுத்துங்கள் என்று மீண்டும் கோரிக்கை விடுத்தார் அண்ணா. பத்திரிகைகள், பெற்றோர் ஆகியோரின் ஆதரவு குறைவதை உணர்ந்துகொண்ட மாணவர்கள் 14 மார்ச் 1965 அன்று இந்தித் திணிப்புக்கு எதிரான மாணவர் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அளவுக்கு மீறிய அடக்குமுறை காரணமாகப் போராட்டங்கள் நசுக்கப்பட்டன என்றாலும் மனத்துக்குள் எரிந்துகொண்டிருந்த போராட்ட நெருப்பை அரசாங்கத்தால் அணைக்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து நடந்த பொதுத்தேர்தலில் அந்த நெருப்பு தனது பலத்தை நிரூபித்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி அப்புறப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்றுவரை சுமார் நாற்பது ஆண்டுகளாக ஆட்சியின் அருகில்கூட வராமல் இருக்கிறது காங்கிரஸ் கட்சி.
(முடிந்தது)
ஆர். முத்துக்குமார் எழுதிய ‘மொழிப்போர்‘ தனிப் புத்தகமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. நான்கு கட்டங்களாக நடைபெற்ற மொழிப்போராட்டமும், தொடர்ந்து அவ்வப்போது எழுந்த இந்தித் திணிப்பு முயற்சிகளும் மிக விரிவாக இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. போராட்டத்தை தமிழகம் எதிர்கொண்ட விதம், எதிரான விமரிசனங்கள், ஆய்வுகள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ள இந்தப் புத்தகம் விரைவில் வெளியாகவிருக்கிறது. மொழிப்போர் குறித்து கல்கி கிருஷ்ணமூர்த்தி தொடங்கி டி.என். சேஷன் வரை பலரும் முன்வைத்த விமரிசனங்களும் அவற்றுக்கான எதிர்வினைகளும் இந்நூலில் பதிவாகியுள்ளன. சமீபத்தில் எழுந்த பாடப்புத்தகச் சர்ச்சை குறித்த விவாதங்களும் இடம்பெறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக