செவ்வாய், 29 ஜனவரி, 2013

எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் ராஜினாமா

கர்நாடக ஜனதா கட்சி தலைவர் எடியூரப்பாவுக்கு ஆதரவாக உள்ள 13 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் பூபையாவிடம் தங்கள் ராஜினாமா கடிதங்களை முறைப்படி கொடுத்தனர். ராஜினாமா செய்த 13 எம்.எல்.ஏக்களில் 2 அமைச்சர்களும் அடங்குவர். இவர்களது ராஜினாமாவால் கர்நாடக பாரதீய ஜனதா அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
பா.ஜ.க. வில் இருந்து வெளியேறி கர்நாடக ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை துவங்கிய எடியூரப்பாவுக்கு ஆதரவாக உள்ள 13 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்தனர். இவர்கள் நேற்று முன்தினம் ராஜினாமா செய்வதாக இருந்தது. ஆனால் கர்நாடக சட்டசபை சபாநாயகர் கே.ஜி. பூபையா வெளியூர் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு தான் பெங்களூர் திரும்பினார். இதனால் செவ்வாய்கிழமை காலை ராஜினாமா செய்வது என்று அவர்கள் முடிவு செய்திருந்தனர்.

அதன்படி 13 எம்.எல்.ஏ.க்களும் நேற்று காலை சபாநாயகர் பூபையாவை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை முறைப்படி அவரிடம் அளித்தனர். முன்னதாக பூபையா ஒவ்வொரு எம்.எல்.ஏ.வையும் தனித்தனியாக சந்தித்து உங்களை ராஜினாமா செய்ய யாராவது வற்புறுத்தினார்களா? உங்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதா என்று விசாரித்தார். அதன் பிறகே ராஜினாமா கடிதங்களை பெற்றுக் கொண்டார். ஆனால் ராஜினாமா கடிதங்களை பூபையா ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து பாராளுமன்ற லோக்சபா சபாநாயகர் மீராகுமாரிடம் இருந்து விளக்கம் கேட்ட பிறகே ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளாராம்.  ஆனால் 13 பேரில் 2 பேரின் ராஜினாமா மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. முன்னதாக ராஜினாமா செய்யும் 13 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி 3 எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம்  சபாநாயகர் பூபையாவிடம் கோரிக்கை விடுத்தனர். அதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்வதா, ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதா என்று யோசித்த சபாநாயகர், இது குறித்து ஒரு முடிவு எடுக்க டெல்லி செல்லவிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. டெல்லியில் அவர் யாரை சந்தித்து விளக்கம் கேட்கப் போகிறார் என்று தெரியவில்லை.
கர்நாடக மாநில முதல்வராக இருந்தவர் எடியூரப்பா. ஆனால் இவர் மீது சட்டவிரோத சுரங்க தொழில் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இந்த குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக தெரியவந்ததை அடுத்து இவர் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக பதவியேற்றார். இவரை எப்படியாவது பதவியில் இருந்து நீக்கி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டார் எடியூரப்பா. ஆனால் பா.ஜ.க. மேலிடம் அதற்கு சம்மதிக்கவில்லை. தனக்கு முக்கியமான பதவி அளிக்கப்படும் என்றும் அவர் எதிர்பார்த்தாராம். ஆனால் எந்த ஒரு பதவியையும் தர பா.ஜ.க மேலிடம் மறுத்து விட்டதையடுத்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பா.ஜ.க.வில் இருந்த எடியூரப்பா அந்த கட்சியில் இருந்து விலகி கடந்த டிசம்பர் மாதம் புதிய கட்சியை தொடங்கினார்.
கர்நாடக ஜனதா கட்சி என்று தனது கட்சிக்கு பெயர் சூட்டினார். இவரது கட்சிக்கு ஆதரவாகத்தான் 13 எம்.எல்.ஏ.க்களும் தற்போது ராஜினாமா செய்திருக்கிறார்கள். இதனால்தான் தற்போது ஷெட்டர் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் ஜெகதீஷ் ஷெட்டர் டெல்லி சென்று பா.ஜ.க புதிய தலைவர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களை சந்தித்த ராஜ்நாத்சிங், கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏதும் இல்லை என்றும் அந்த அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் என்றும் நம்பிக்கையோடு கூறியிருந்தார்.
எம்.எல்.ஏ.க்கள் விலகவில்லை என்று ஷெட்டரும் கூறியிருந்தார். ஆனால் இவரது கருத்தை பொய்யாக்கும் வகையில் நேற்று 13 பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் தாங்கள் சொன்னபடி ராஜினாமா செய்து விட்டார்கள். இனிமேல் கர்நாடகத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.thinaboomi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக