புதன், 30 ஜனவரி, 2013

நிராகரித்தார் நீதிபதி.,,கமலுக்கு சாதகமான தீர்ப்பை நாளை காலை 10.30 வரை பிற்போட அரசு கோரிக்கை!

Viruvirupu
விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீக்கக் கோரி கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தாக்கல் செய்துள்ள வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. கமல்ஹாசன், மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸூக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளார், நீதிபதி.
தமிழக அரசுக்கு ஏற்பட்ட தோல்வியாகவே தீர்ப்பு பார்க்கப்படுகிறது. அதையடுத்து, அரசு வக்கீல் நீதிபதியிடம் அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸூக்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பை, நாளை காலை 10.30 மணிவரை நிறுத்தி வைக்குமாறு, தமிழக அரசிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு வக்கீல், இந்த கோரிக்கையை நீதிபதியிடம் தெரிவித்தார். நாளை காலை 10 மணிக்கு மேன்முறையீடு செய்ய இருப்பதாகவும், அரசு வக்கீல் தெரிவித்தார்.
ஆனால், அரசின் கோரிக்கையை நிராகரித்தார், நீதிபதி.
“படத்தை வெளியிடுவதானாலும், நாளைதான் வெளியிடுவார்கள். நீங்கள் மேன்முறையீடு செய்து கொள்ளலாமே” என்று தெரிவித்தார் நீதிபதி.
மீண்டும் தமது கோரிக்கையை வலியுறுத்திய அரசு வக்கீல், “இல்லை.. தற்போது தடை கிடையாது என்பதால், அவர்கள் (ராஜ்கமல் பிலிம்ஸ்) நாளை காலை 6 மணிக்கு வேண்டுமானால் படத்தை ரிலீஸ் பண்ண முடியும். அதனால், நாளை காலை 10.30 மணிவரை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும்” என கோரினார்.
இந்தக் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்தார், நீதிபதி.
சென்னை ஹைகோர்ட்டில் இந்த வழக்கின் தீர்ப்புக்காக காத்திருந்த இஸ்லாமிய சமூக பிரதிநிதிகள், ஒன்றாக கிளம்பிச் சென்றார்கள். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுப்பதற்காக கிளம்பிச் சென்றார்கள் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக