திங்கள், 10 டிசம்பர், 2012

Walmart Tesco முதல் மாநிலம் தில்லி

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்ததையடுத்து பன்னாட்டு நிறுவனங்களான வால்மார்ட், டெஸ்கோ ஆகியவற்றை வரவேற்கும் முதலாவது மாநிலமாக தில்லி திகழவுள்ளது.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து இந்தியாவில் அன்னிய முதலீட்டை மேற்கொள்ள ஆர்வம் காட்டும் நிறுவனங்களை வரவேற்கும் வாய்ப்புகளை மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு தொடங்கியுள்ளது.
முதலாவதாக தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

தில்லியில் ஏற்கெனவே சில்லறை வணிகத்தில் கால் பதிக்க அமெரிக்க நிறுவனங்களான வால்மார்ட், டெஸ்கோ ஆகியவை விருப்பம் தெரிவித்துள்ளன. அந்த நிறுவனங்களுக்கு முறைப்படி தில்லியில் தொழில் தொடங்குவதற்கான அனுமதியை தில்லி அரசு அளிக்கவுள்ளது.
இது தொடர்பாக அடுத்த சில நாள்களில் நடைபெறவுள்ள தில்லி சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரில், வால்மார்ட், டெஸ்கோ ஆகியவற்றை சில்லறை வணிகத்தில் அனுமதிக்கும் மசோதாவை தில்லி அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தில்லி முதல்வரின் பார்லிமென்டரி செயலர் முகேஷ் சர்மா ""சட்ட மசோதா நிறைவேறியதும் வால்மார்ட், டெஸ்கோ ஆகிய இரு நிறுவனங்களும் தில்லியில் தொழில் தொடங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபடும்'' என்று கூறினார்.
இது தொடர்பாக தில்லி அரசின் உயரதிகாரி கூறியது:
""சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்க வேளாண் உற்பத்தி விநியோகக் குழு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து அவர்களின் உற்பத்திப் பொருள்களைக் கொள்முதல் செய்ய முடியும்.
தற்போதைய நிலையில், சில்லறை வணிகர்களிடம் விவசாயிகள் நேரடியாகத் தங்கள் பொருள்களை விற்பனை செய்ய முடியாது.
அவர்கள் மொத்த வியாபாரியிடம்தான் தங்கள் பொருள்களை விற்க முடியும்.
தில்லியைப் பொருத்தவரை ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி, பழச் சந்தையாகக் கருதப்படும் ஆசாத்பூர்தான் தலைநகருக்கு அத்தியாவசியப் பொருகள்களை விற்கும் சந்தையாகத் திகழ்கிறது.
அதன் கட்டுப்பாடு முழுவதும் இடைத்தரகர்களிடம் உள்ளது. இத்தகைய தன்னிச்சை போக்கு பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் மாறும்'' என்று அந்த அதிகாரி கூறினார்.
தில்லியில் 2013-ம் ஆண்டு முதல் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுடன் தொடங்கும் நிறுவனங்கள் செயல்படும் வகையில் மாநில அரசு திட்டங்களை இயற்றி வருகிறது.
இந்த நிறுவனங்கள் அமைவதற்காக மேற்கு தில்லியில் உள்ள திக்ரி குத் பகுதியில் 72 ஏக்கர் பரப்பளவில் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு பன்னாட்டு நிறுவனங்களின் நவீன வசதிகளுடன் கூடிய மொத்தவிலை விற்பனையகங்கள் அமைக்கப்படும் என்று தெரிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக