நேபாள விமான நிலையத்தில் இளம்பெண் பலாத்காரம்: பிரதமர் வீட்டின் எதிரே பெண்கள் போராட்டம்
நேபாள
விமான நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளால்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து,
அந்நாட்டு பிரதமர் இல்லத்துக்கு வெளியே பெண்கள் இயக்கத்தினர்
இரண்டு நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சவூதி
அரேபியாவில் வேலைபார்த்து வந்த, நேபாளத்தின் வடக்குப் பகுதி
நகரமான போஜ்பூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், நவம்பர் 21-ஆம் தேதி
விமானத்தில் நாடு திரும்பினார். திரிபுவன் சர்வதேச விமான
நிலையத்தில் வந்திறங்கிய அந்த இளம் பெண்ணை, விமான நிலைய பாதுகாப்பு
அதிகாரிகள் சோம்நாத் கனால், பர்ஷுராம் பாஸ்னெட் ஆகியோர்
உடமைகளை சோதனை போட வேண்டும் என்று கூறி, தனி அறைக்கு அழைத்துச்
சென்றனர். அங்கு வைத்து அவரிடமிருந்த ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்தை
பறித்துக் கொண்டனர். பின்னர் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம்
செய்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி, உள்துறை
அமைச்சகத்தில் அந்தப் பெண் புகார் செய்தார். ஏற்கெனவே, மூத்த
போலீஸ் அதிகாரி ஒருவரின் நெருங்கிய உறவினர் வீட்டில் வேலைபார்த்து
வந்த 31 வயது பெண் ஒருவர், கடந்த 15-ஆம் தேதி மர்மமான முறையில்
இறந்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று
கூறப்படுகிறது. இந்த இரண்டு சம்பவத்துக்கும் நீதி கோரி, அங்குள்ள பெண்கள் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், காத்மாண்டில் உள்ள பிரதமர் இல்லத்துக்கு வெளியே அமர்ந்து, வெள்ளிக்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் பத்திரிகையாளர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். சனிக்கிழமை கையெழுத்து இயக்கமும் தொடங்கப்பட்டது. இதனிடையே, வெள்ளிக்கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பலாத்கார பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு ரூ.1லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும், அந்த இரு சம்பவங்களுக்கும் கவலை தெரிவித்த பிரதமர் பாபுராம் பட்டாராய், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்
thenee.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக