செவ்வாய், 25 டிசம்பர், 2012

பொது கட்டடங்களில் CCTV Camera கட்டாயம்: தமிழக அரசு

க்கள் பயன்பாட்டுக்குரிய கட்டடங்கள் அனைத்திலும், "சி.சி.டிவி' கேமரா பொருத்த வேண்டும்' என, புதிய அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.பொதுமக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் கட்டடங்களில், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, "சி.சி.டிவி' எனப்படும், "க்ளோஸ்டு சர்க்யூட் டெலிவிஷன் யூனிட்ஸ்' பொருத்துவதற்கு, தமிழக அரசின் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, புதிய அரசாணை பிறப்பித்து உள்ளது."தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள் - 2012' என, இதற்கு பெயரிடப்பட்டு உள்ளது. எந்தெந்த கட்டடங்கள், மக்கள் பயன்பாட்டுக்கு உரியவை எனவும், இதில் விளக்கப்பட்டு உள்ளது.அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகள் மற்றும் இது போன்ற கல்வி மையங்கள், இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளன.அவற்றின் விவரம்:நூறு பேருக்கு அதிகமானவர்கள் தங்கியுள்ள விடுதி, மருத்துவமனை, நர்சிங் ஹோம், கிளினிக், மகப்பேறு மருத்துவமனை அல்லது, 500 ச.மீ., பரப்புளவுக்கு அதிகமான மருத்துவ மையங்கள், லாட்ஜ்கள்.தங்கும் இல்லங்கள் மற்றும் ஸ்டார் ஓட்டல், திருமண மண்டபம், சினிமா தியேட்டர், கேளிக்கை பூங்கா, நீச்சல் குளம், மனமகிழ் மன்றம், அசெம்பிளி ஹால், கலையரங்கம்.ஸ்கேட்டிங் ரிங், மியூசியம், கண்காட்சி அரங்கம், ஜிம்னாசியம், நடன அரங்கம், ஸ்டேடியம் மற்றும் "பார்', வர்த்தகப் பொருட்களை காட்சிப்படுத்தும் அல்லது விற்கும் சந்தை.மொத்தம் அல்லது சில்லரை விற்பனை செய்யும், 500 ச.மீ., பரப்பளவுக்கு அதிகமான கடைகள், வங்கி, ஏ.டி.எம்., சென்டர், இன்சூரன்ஸ் நிறுவனம், நகைக்கடை, உணவகங்களை உள்ளடக்கிய ஷாப்பிங் மால் அல்லது வணிக வளாகம், பெட்ரோல் பங்க்குகள், 100 பேருக்கும் அதிகமானவர்கள் பணியாற்றும் தொழிற்கூடம் அல்லது உற்பத்தி மையம்.தகவல் தொழில்நுட்ப சேவை செய்யும் மையங்கள், ரேடியோ மற்றும் டெலிவிஷன் ஸ்டேஷன், ஒரே நேரத்தில், 500 பேருக்கும் அதிகமானவர்கள் பங்கேற்கும் வழிபாட்டு மையம், அரசியல் அல்லது சமூக அமைப்பு மையம்.நூறு பேருக்கும் அதிகமானவர்கள் பணியாற்றும் அல்லது 500 ச.மீ.,க்கு அதிகமான பரப்பளவுள்ள மத்திய, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள், அரசு சார்பு அலுவலகங்கள், பேருந்து நிலையம் மற்றும் பேருந்து முனையம் ஆகியவையும் மக்கள் பயன்பாட்டுக்குரிய இடங்கள் என, இந்த அரசாணையில் அடையாளம் காண்பிக்கப்பட்டு உள்ளன.

விளக்கம்:

ஒவ்வொரு, 300 ச.மீ., பரப்பளவுக்கும் ஒன்று, என்ற விகிதத்தில் இது அமைக்கப்பட வேண்டும்; பொதுமக்கள் நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில், நுழைவாயில், வெளியில் செல்லும் பாதை, வரவேற்பு அறை என, அனைத்து முக்கிய இடங்களிலும், இதைப் பொருத்த வேண்டுமென்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.தற்போதுள்ள கட்டடங்களில், அரசாணை அமலுக்கு வந்த, டிச., 14ம் தேதியிலிருந்து, ஆறு மாதங்களுக்குள் இதைப் பொருத்த வேண்டுமென கால அவகாசமும் தரப்பட்டுள்ளது.

இடை நீக்கம்:
கட்டடத்தின் உரிமையாளர் அல்லது அதைப் பயன்படுத்துபவர், இதைப் பொருத்த வேண்டும். கொடுத்த கால அவகாசத்துக்குள் இதை அமைக்காவிட்டால், தொழில் மற்றும் வர்த்தக உரிமங்களை ரத்து செய்யலாம் அல்லது தற்காலிக இடை நீக்கம் செய்யலாம் என்றும் அரசாணை தெரிவித்து உள்ளது.இதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு, மாநகராட்சி, நகராட்சி கமிஷனர் அல்லது பேரூராட்சி செயல் அலுவலருக்கு உரியது.

- நமது நிருபர் - தினமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக