புதன், 5 டிசம்பர், 2012

குஜராத், இமாச்சலில் நேரடி மானிய திட்டத்தை நிறுத்தி வைங்க : தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடில்லி : "குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இந்த மாநிலங்களில், நேரடி மானிய திட்டத்தை, தற்போது அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு திட்டங்களுக்காக, அரசு வழங்கும் மானிய தொகையை, "ஆதார்' அடையாள அட்டை திட்டம் மூலமாக, நேரடியாக, சம்பந்தப்பட்ட பயனாளிகளின், வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது.முதல் கட்டமாக, 51 மாவட்டங்களில், இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், குஜராத்தை சேர்ந்த, நான்கு மாவட்டங்களும் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த, இரண்டு மாவட்டங்களும் அடங்கும்.http://www.dinamalar.com/
இதற்கு, பா.ஜ., தரப்பில், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. "குஜராத், இமாச்சல் மாநிலங்களில், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, சட்ட விரோதம்' என, தேர்தல் ஆணையத்திடம், பா.ஜ., தலைவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது.

இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, "கடந்த, பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே, நேரடி மானிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டது. எனவே, இது புதிய திட்டம் அல்ல' என, தெரிவித்ததோடு, இது தொடர்பான, மத்திய திட்ட கமிஷனின் அறிக்கையையும், அனுப்பி வைத்திருந்தது.இந்த விவகாரம் குறித்து, தலைமை தேர்தல் ஆணையர், வி.எஸ்.சம்பத் தலைமையிலான, மூன்று உறுப்பினர்களை உடைய, தேர்தல் ஆணையம், நேற்று விவாதித்தது.

நீண்ட விவாதத்துக்கு பின், மத்திய அமைச்சரவை செயலகத்துக்கு, தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:குஜராத்தில், இன்னும் சட்டசபை தேர்தல் நடக்கவில்லை. இமாச்சல் பிரதேசத்தில், தேர்தல் முடிந்து விட்டாலும், அங்கு ஓட்டு எண்ணப்படவில்லை. வரும், 20ம் தேதி தான், ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. எனவே, இரண்டு மாநிலங்களிலும், ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்.இந்த சூழ்நிலையில், நேரடி மானிய திட்டத்தை, அறிவித்திருப்பதை, மத்திய அரசு தவிர்த்திருக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்தபின் தான், இந்த இரண்டு மாநிலங்களிலும், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.இந்த உத்தரவை, அரசின் கொள்கை முடிவில் தலையிடும் விஷயமாக கருதக் கூடாது. அரசின் அறிவிப்புகள், தேர்தல் நடவடிக்கைகளில், பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் மட்டுமே, தேர்தல் ஆணையம் தலையிடுகிறது. எனவே, நேரடி மானிய திட்டத்தை, குஜராத், இமாச்சல் மாநிலங்களில், நடைமுறைப்படுத்துவதை, தள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்களை கண்டிக்கவில்லை காங்., எம்.பி., நிம்மதி:

இந்த விவகாரம் குறித்து, காங்கிரஸ் செய்தி தொடார்பாளர், பி.சி.சாக்கோ கூறியதாவது:நேரடி மானிய திட்ட விஷயத்தில், தலைமை தேர்தல் ஆணையம், காங்கிரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக, சிலர் கூறுகின்றனர். தேர்தல் ஆணையம், எங்களை கண்டிக்கவில்லை. மத்திய அரசுக்கு எதிரான கருத்து எதையும், தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை. "திட்டத்தை செயல்படுத்துவதை, தள்ளி வைக்கலாம்' என்று தான் கூறியுள்ளது. இது, கண்டனமாகாது. அரசின் முடிவு குறித்து, தேர்தல் ஆணையம், கேள்வி எழுப்ப முடியாது. இந்த விஷயத்தில், மத்திய அரசு, எந்த தவறும் செய்யவில்லை.இவ்வாறு சாக்கோ கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக