தனக்கு வயதாகி விட்ட காரணத்தால் இனி சலூன் நடத்த இயலாது என ஊரிலுள்ள பெரிய மனிதர்களிடம் தெரிவித்தார் சிதம்பரம். அவரது மகனை அத்தொழிலில் ஈடுபடுத்துமாறு ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். அவரது மகன் மறுத்து விடவே முதியவரையே மீண்டும் வேலையை துவங்குமாறு வலியுறுத்தி உள்ளனர். தன்னால் இயலவில்லை, வயதாகி விட்டது என அவர் கூறியவுடன் ஊரைக் காலி செய்யுமாறும், ஊரில் சவரத் தொழிலாளி ஒருவர் இருப்பதால் தாங்கள் வர முடியாது என பிற சவரத் தொழிலாளிகள் தயங்குவதாகவும் தெரிவித்தனர். இதனை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே ஊர் விலக்கம் செய்யப்பட்டார் சிதம்பரம்.
சிதம்பரம் இதற்கு பரிகாரம் தேட காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை அணுகியுள்ளார். ஆத்திரமடைந்த ஆதிக்க சாதி மக்கள் அவரது வீட்டையும், அங்குள்ள பொருட்களையும் அடித்து உடைத்து நாசப்படுத்தி உள்ளனர். அவர் தெரிவித்த புகாரை அரசு தரப்பில் ஏற்கவில்லை. ஊர் மக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக ஊரார் தரப்பில் சிதம்பரம் குடும்பத்தினர் மீது கொடுக்கப்பட்ட புகார்களை ஏற்று காவல் துறையினர் அவரை கூப்பிட்டு மிரட்டி அனுப்பி உள்ளனர்.
தற்போது நிவாரணம் மற்றும் வாழ்வாதார உதவி கேட்டு 80 வயது முதியவர் உண்ணாவிரதம் துவங்கி உள்ளார். படித்து முன்னேறினாலும் குலத்தொழிலை விடுவது என்பது ஆதிக்க சாதிகளுக்கு அவ்வளவு உவப்பாக இருப்பதில்லை தான். தமிழகத்தின் சவரத் தொழிலாளிகள் பல கிராமங்களில் சாதிக்கு ஒருவராக இருக்கின்றனர். ஆண்டுக் கூலியாக ரூ.100 மட்டுமே ஒரு கிராமம் தரும். அத்துடன் எல்லா வீடுகளிலும் உள்ள பழைய சோற்றை வீடு வீடாக வந்து பிச்சை கேட்பது போல கூவி வாங்க வேண்டும். சவரத் தொழிலில் வந்துள்ள ஆதிக்க சாதியின் ஆண்டைகள் உடம்பின் எந்தப் பகுதியில் மழிக்க சொன்னாலும் செய்ய வேண்டும். பரவும் தீராத வியாதிகளை உடையவர்களாக இருந்தாலும் அசூசையடையாமல் தொழிலை செய்ய வேண்டும்.
திருமண வீடுகளில் துவங்கி கருமாதி வரை இவர்களுக்கு அடிமை வேலைகள் சற்று அதிகம் தான். ஊரின் புறம்போக்கு நிலத்தில் குடிசை போட அனுமதி தரும் இந்த ஆதிக்க சாதிகள் வயதான காளை மாடுகளை இனி உழவுக்கு ஆகாது எனத் தெரிந்தால் அடி மாட்டுக்கு அனுப்புவது போல வயது முதிர்ந்த நாவிதர்களை விரட்டி விடத் துவங்குகின்றன•
எண்பதுகளில் எங்கள் ஊர் நாவிதரின் மகன் பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணி விட்டு, சத்துணவுத் திட்ட அமைப்பாளராக வேலைக்கு சேர்ந்தார். எப்போது வெள்ளை வேட்டி, சட்டை என வலம் வரும் அவரை என் ஊரின் ஆதிக்க சாதி ஆண்களுக்கு அவ்வளவாக பிடிக்காது. போதாத குறைக்கு சம வயதுள்ள ஆதிக்க சாதி ஆண்களில் படித்தவர்களை அவர் பெயர் சொல்லியும் கூப்பிடுவார். இளைஞர்களிடையே அவருக்கு நல்ல நட்பு வட்டம் உண்டு. ஏற்கெனவே நாடார் சாதியைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவர் சமைத்த காரணத்தால் சத்துணவே வேண்டாம் என ஆதிக்க சாதி ஏழைகள் கூட ஒதுங்கிக் கொண்டனர். இந்த நிலையில் தனது மனைவியை சமைக்க அழைத்து வந்தார் நாவிதர் மகன். பாதி ஊர் பள்ளிப் பக்கம் வருவதையே நிறுத்திக் கொண்டது.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவரது மகளுக்கு திருமணம் நடந்தது. மருமகன் பக்கத்து சிறு நகரத்தில் சலூன் கடை ஒன்று வைத்திருந்தார். மகனை ஆங்கில மீடியத்தில் படிக்க வைத்தார். செலவு கட்டுபடியாகாத காரணத்தால் ஊரில் பகுதி நேரமாக ஒரு சலூன் கடை ஆரம்பித்தார். குடும்ப பொருளாதார நிலைமையால் தந்தைக்கு கிடைத்து வந்த ஆண்டுக் கூலி போல அல்லாமல் அன்றாடக் கூலியாக பணம் கிடைத்த சூழ்நிலைமையால் இத்தொழிலை 50 வயதுக்கு மேற் கற்க ஆரம்பித்தார். சிறு வயதில் அவரிடம் டியூசன் எல்லாம் படித்திருக்கிறேன். என்னால் அவர் மீண்டும் கத்திரிக்கோல் பிடிப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது மகனது படிப்பும் அதோடு முடிந்தது. இப்போது அந்த இளைஞன் தன் தாத்தாவோடு இருந்து தொழில் கற்றுக் கொள்கிறான். பிணம் எரிக்க சுடுகாடு செல்கிறான். ஊரில் நாய் கூட சீந்தாத இடத்தில் ஊர் மனிதர்கள் ஒதுக்கியதாக சொல்லிக் கொள்ளும் அவரது குடிசை போட்ட இடத்தில் அந்த முதிய நாவிதர் தனது பேரனுக்கு விருப்பமில்லாவிட்டாலும் தொழிலைக் கற்றுத் தருகிறார்.
அந்த முதியவர் தன் மகனுக்கு ஐம்பதுகளிலேயே வைத்த பெயர் ராமசாமி. ஊரின் ஆதிக்க சாதிகள் மறந்தும் அந்தப் பெயரை உச்சரித்து அவரை சாமியாக்க துணியார். முற்போக்கு பேசி ஊரில் நாங்கள் திரிந்து கொண்டிருந்த காலம் அது. ஒருமுறை தேநீர்க்கடையில் நண்பனொருவனை போடா மயிராண்டி என்று திட்டி விட்டேன். திரும்பிப் பார்த்தால் அந்த வயது முதிர்ந்த நாவிதர். எல்லோரும் போன பின்பு, நீங்களே இப்படி சொல்லலாமா என மிக அமைதியாக கேட்டார். அதை அப்போதைக்கு ஒரு விமர்சனம் என்ற முறையில் ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்டேன். ஆனால், ஏன்டா இப்படி சொன்னே! அறிவு கெட்ட முண்டம் என அவர் என் காதைப் பிடித்து திருகி, அதட்டும் காலம் எப்போது வரும்?!
________________
- வசந்தன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக