வியாழன், 6 டிசம்பர், 2012

பௌத்த, சமண மதத்திற்கு ஆதரவான களப்பிரர்கள் இந்த மண்ணுக்கே உரியவர்கள்

களப்பிரர் காலத்தை ‘இருண்ட காலம்’ எனத் தமிழ் ஆய்வுலகம் வரையறுத்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் அக்கருத்தை மறுத்து எழு தப்பட்டது ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ எனும் இந்நூல். கிடைக்கும் இலக்கியத் தரவுகளின் அடிப்படையில் தமிழ்ப் பண்பாடு தழைத்தோங்கிய காலகட்டம் அது என மயிலை சீனி இந்நூலில் நிறுவுகிறார். இந்நூலின் முதற்பதிப்பு வெளிவந்து கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் ஒடிவிட்டது. இடைப்பட்ட காலங்களில் களப்பிரர் காலம் குறித்து நமது புரிதல் அதிகரிக்கத்தக்க அளவிற்கு தமிழக வரலாறு குறித்த பல புதிய ஆய்வுகள் வெளிவந்துள்ளன. அவற்றை எல்லாம் கணக்கிலெடுத்துக்கொண்டு மயிலை சீனி அவர்களது நூலில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகட்கு விடைகாண முயலும் ஆய்வுரை ஒன்றையும் இப்பதிப்பில் உள்ளது
 களப்பிரர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? இங்கிருந்த மூவேந்தர்களையும் வென்று மூன்று நூற்றாண்டுகள் அரசோச்சியது எவ்வாறு என்பவை குறித்து ஒருமித்தக் கருத்து இதுகாறும் எட்டப்படவில்லை. “கி.பி.3ஆம் நூற்றாண்டில்தான் கர்நாடகாவில் நந்திமலையைச் சுற்றி வாழ்ந்த களப்பிரர் என்ற முரட்டுக்குடியினர் மூவேந்தர்களையும் வென்று சுமார் மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டனர்… என்று ஒரு கருத்துள்ளது” ( தமிழகம்- பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு- முனைவர் கே.மோகன்ராம், முனைவர் ஏ.கே.காளிமுத்து/ பக்கம்- 7 )
“மதுரையைச் சிறிதுகாலம் ஆண்டுவந்த கருநாடகரே களப்பிரர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது… வேங்கடத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்த களப்பிரர்கள் திடீரென்று குடிபெயர்ந்து தெற்கு நோக்கிப் பாய்ந்து பல்லவரையும் சோழரையும் பாண்டியரையும் ஒடுக்கி…” என்கிறார் கே.கே.பிள்ளை ( தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்/ பக்கம் 184, 185 )
இப்படி களப்பிரர்களை வெளியேயிருந்து வந்தவர்கள் என்று நீலகண்டசாஸ்திரி, ஒளைவை துரைசாமிப்பிள்ளை, மு.அருணாசலம்பிள்ளை, என்று பலரும் சொல்லிக்கொண்டிருக்க, களப்பிரர்களின் தோற்றுவாய் குறித்து பர்டெயின் ஸ்டெயின் வேறுவகையாக சொல்வதை தனது பொற்காலங்களும் இருண்டகாலங்களும் என்ற கட்டுரையில் கவனப்படுத்துகிறார் பொ.வேல்சாமி ( தலித் கலை இலக்கியம் அரசியல்- பக்கம் 154-160).
அதாவது, மூவேந்தர்களையும் வீழ்த்துமளவுக்கு அண்டைப்பகுதிகளில் பெரும் படைபலத்துடன் அரசப் பாரம்பரியங்கள் ஏதும் அப்போது இருந்திருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் பர்டன் ஸ்டெயின், “களப்பிரர்கள் மையங்களில் உரு’வாகும் அரசு ஆதிக்கங்கள்,மேலும்மேலும் விளிம்புகளிலுள்ள இனக்குழு சமூகங்களை தமது விவசாய விரிவாக்கத்திற்குள் கொண்டு வந்து அவர்களிடமிருந்து உபரிகளை உறிஞ்சுவதென்பது நடைமுறையாகின்றது. பார்ப்பனர்களுக்கு தானமாக அவர்களது நிலங்களும், அரசனுக்கு வரியாக அவர்களது வியர்வையின் விளைபொருள்களும் வன்முறையாக கைப்பற்றப்பட்டன.
இதற்கு எதிரான எதிர்ப்பு என்பது தொடர்ந்து விளிம்புகளிலிருந்த அடித்தட்டு மக்களிடமிருந்து வந்து கொண்டே இருந்தது. அரச மையங்களின் விவசாய மயமாக்கலுக்கு எதிரான இனக்குழு மக்களின் இந்த எதிர்ப்பின் உச்சக்கட்டமே களப்பிரர் காலம்…” என்கிறார். பர்டன் ஸ்டெயின் கூற்றுப்படி களப்பிரர்கள் இந்த மண்ணுக்கே உரியவர்கள். அவர்கள் தமிழர்கள்தான் என்று க.ப. அறவாணன் போன்றவர்களும் தெரிவிப்பதாக பொ.வேல்சாமி பதிவு செய்கிறார்.
சரி, களப்பிரர்கள் வெளியிலிருந்து வந்தவர்களா இங்கிருந்தே கிளர்ந்தவர்களா என்பது குறித்து வரலாற்றாய்வாளர்கள் அவரவர் முடிவுகளை சொல்லிக்கொண்டிருக்கட்டும். இதில் களப்பிரர் காலம் இருண்டகாலம் என்ற வசை ஏன் வருகிறது? இருண்டகாலம் என்று வரலாற்றாசிரியர்கள் சிலர் குறிப்பிடுமளவுக்கு அப்படி களப்பிரர்கள் என்னதான் செய்தார்கள்?
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து எரிந்துகொண்டிருந்த விளக்குகளையெல்லாம் ஃப்பூ என்று ஊதிஊதி அணைத்துவிட்டார்களா? அல்லது அப்போதும் ஆற்காடு வீராசாமியே மின்துறை அமைச்சராயிருந்து பவர்கட் செய்து நாட்டையே இருட்டில் மூழ்கடித்தாரா? எதற்கிந்த வசை?
இங்கேதான் இந்திய வரலாற்றை எழுதியவர்களின் சாதிய சாய்மானங்கள் அவர்கள் எழுதிய வரலாறுகளுக்குள் பதுங்கியிருப்பதைக் காண வேண்டியுள்ளது. தமது பார்ப்பன மற்றும் வேளாள சாதிகளுக்கு அனுசரணையாக இருந்த ஆட்சிகள் இருந்த காலத்தையெல்லாம் பொற்காலம் என்றும் தமது சுரண்டும் நலன்களுக்கு எதிராக இருந்த ஆட்சிகளின் காலங்களையெல்லாம் இருண்டகாலம் என்று அவர்கள் மோசடியாக எழுதிவைத்துள்ளார்கள். இந்த எளிய உண்மையை புரிந்துகொள்ளமாமலே கருணாநிதி உள்ளிட்ட பலரும் பிதற்றித்திரிவதுதான் வாடிக்கை. சரி, இருண்டகாலம் என்று இந்த ஆதிக்கசாதியினர் களப்பிரர்கள் மீது காழ்ப்பு கொண்டு சொல்வதற்கு காரணங்கள்தான் யாவை?
அடிப்படையில் களப்பிரர்கள் அவைதீக மரபைச் சார்ந்தவர்கள். தொடக்கத்தில் பௌத்தத்தையும் பின் சமணத்தையும் ஆதரித்திருக்கிறார்கள். இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்களால் பார்ப்பனர்களுக்கு பிரமதேயம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டிருந்த தானங்களை ரத்து செய்துள்ளனர். அந்த நிலங்கள் பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் இருந்த முற்றுரிமைகளை ரத்து செய்கின்றனர். மக்கள் மற்றும் அரசர்களின் செல்வத்தை கபடமாகப் பறிக்கும் பார்ப்பனர்களின் சடங்குகள், வேள்விகள் தடை செய்யப்பட்டன. இதற்கு அடிப்படையாக இருந்து உதவிய கிராமப்புற கட்டமைப்பினை பயன்படுத்தி வந்த வேளாளர்களின் தனித்த ஆதிக்கமும் கட்டுக்குள் நிறுத்தப்பட்டன, அல்லது மறுக்கப்பட்டன. இது போதாதா இந்த பார்ப்பனர்களும் வேளாளர்களுமாகிய வரலாற்றாய்வாளர்கள் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று வர்ணித்து வசை தூற்ற?
“களப்பிரர் காலம் என்பது வெறும் ஆட்சி மாற்றமாக இல்லாமல் அதன் பின்புலத்தில் சில சமுதாய மாற்றங்கள் இருந்திருக்கின்ற காரணத்தால்தான் அவர்களது ஆட்சி, அடிக்கடி ஆட்சி மாற்றங்கள் நடைபெற்று வந்த அந்தக்காலத்திலேயே முந்நூறு ஆண்டுகள் தாக்குப்பிடித்திருக்கிறது” என்கிறார் பேரா.அருணன் ( பொங்குமாங்கடல்- பக்கம் 17 ) இந்த எளிய உண்மையை மயிலை சீனி வேங்கடசாமி போன்றவர்களும் பதிவு செய்துள்ளனர்.
பார்ப்பன, வேளாள ஆய்வாளர்களால் இருண்டகாலம் என்று குற்றம் சாட்டப்பட்ட களப்பிரர் காலத்தில் தமிழில் ஏற்பட்ட வளர்ச்சிநிலை குறித்து மயிலை சீனி வேங்கடசாமி கூறுவதைப் பாருங்கள். “அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள், நரி விருத்தம், எலி விருத்தம், கிளி விருத்தம், சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலிய இலக்கிய நூல்கள், விளக்கத்தார் உத்து என்னும் கூத்துநூல், கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், எலாதி போன்ற கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை, இறையனார் களவியல் உரை முதலியன களப்பிரர் காலத்தில் தோன்றிய சில நூல்கள். தமி எழுத்து பிராமியிலிருந்து வட்டெழுத்தாக மாறியது களப்பிரர் காலத்தில்தான். ஆசிரிய, வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்கு வகைகளுக்குள் தமிழ்ப்பாக்கள் மடங்கிக் கிடந்தது தளர்ந்து தாழிகை, துறை, விருத்தம் என புதிய பா வகைகள் தோன்றியது இந்த இருண்டகாலகட்டத்தில்தான்…” ( முன் குறிப்பிட்ட பொ.வேல்சாமியின் கட்டுரை)
களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று கூறுகிற கே.கே.பிள்ளை கூட ‘’பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிர நந்தி என்பார் மதுரையில் திராவிட சங்கம் ( திரமிள சங்கம் ) ஒன்றை நிறுவினார் ( கி.பி.470.) … பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பல இச்சங்க காலத்தில் இயற்றப் பெற்றவையாம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இக்காலத்தில் எழுந்தவையெனத் தோன்றுகின்றன. நீலகேசி, குண்டலகேசி, யசோதர காவியம், சீவக சிந்தாமணி ஆகிய காவியங்கள் தமிழில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததும் இத்திராவிடச் சங்கத்தின் தொண்டே காரணமாகும்…. ” என்கிறார் ( முன்சொன்ன நூல், பக்கம்- 186 )
‘’புத்த மதமும், சமண மதமும் ஏற்றம் பெற்றிருந்த இந்த இருண்டகாலத்தில்தான் தமிழகத்தில் சிறப்பானதொரு இலக்கிய வாழ்வு நடைபெற்றிருக்கிறது. பதினெண் கீழ்க்கணக்கு என்பதன் கீழ் வரும் பல நூல்கள் இந்தக்காலத்தில்தான் எழுதப்பட்டன. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்தக்காலத்தில் எழுதப்பட்டவைதான்” என்று இருண்டகால கண்டுபிடிப்பாளர் நீலகண்ட சாஸ்திரி தனது தென்னிந்திய வரலாறு என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டும் பேரா.அருணன், பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்துப்படி இதே காலத்தில்தான் திருக்குறளும் எழுதப்பட்டது என்கிறார்.
அதுமட்டுமல்லாது பௌத்த, சமண மதத்திற்கு ஆதரவான களப்பிரர்கள் சிவபெருமான் திருவந்தாதி, ஆசாரக்கோவை, இறையனார் களவியல் போன்ற பிறசமயங்களின் நூல்கள் வெளிவருவதற்கும் அனுசரணையாகவே இருந்திருக்கின்றனர். ஆக, களப்பிரர்கள் பாலி மொழிக்கு முக்கியத்துவம் தந்து தமிழை வீழ்ச்சியடைய வைத்து இருண்டகாலத்தை உருவாக்கினார்கள் என்கிற கருணாநிதியின் கருத்து வரலாற்றுண்மைக்குக்குப் புறம்பானது.
இப்போது ஒரு பார்ப்பனர்களின் மாநாடோ அல்லது வேளாளர்களின் சைவ சித்தாந்த மாநாடோ நடந்து அந்த மாநாட்டுக்கு கருணாநிதி தலைவராயிருந்து களப்பிரர்களின் காலம் இருண்டகாலம் என்று சொல்லியிருப்பாராயின் அவரது குமைச்சலையும் குற்றச்சாட்டையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
ஆனால் நடப்பதோ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. அதில், களப்பிரர் காலத்தில் தமிழ் மொழி வளர்ச்சியடைந்ததா முடக்கப்பட்டதா? அப்போது இலக்கிய, இலக்கண நூல்கள் எதுவும் வெளியானதா இல்லையா என்கிற ரீதியில் மட்டுமே பரிசீலிப்பதை விடுத்து இப்படி யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை மன்றத்தில் வாசிக்கிறார் கருணாநிதி. கற்றறிந்த ஆன்றோர்கள் கூடியிருப்பதாக நம்பப்படுகிற ஒரு சபையில் இப்படியொரு பொய்யை அவர் சொல்லிப்போயிருக்கிறார்.
“காலப்பறையர் என்பதே களப்பிரர் என மருவியது என்று ஒரு சாராரரும் கால என்றால் வடமொழியில் கருப்பு என்றும் பீரா அல்லது வீரா என்பது வீரரையும் குறிக்கும் அனேகமாக கருப்பு வீரர் என்பதே கலப்பிரராகி உள்ளது , ஆகவே நாங்களும் ஆண்ட பரம்பரைதான்” என்ற தமாஷை சீரியஸாகப் பேசுகிற- கருணாநிதிக்கு நெருக்கமான- தலித் அறிவுஜீவிகளோ அல்லது வரலாற்றாசிரியர்களோ அவரை நல்வழிப்படுத்தவேண்டும். தான் மிகுதியும் கொண்டாடி மாநாட்டு இலச்சினையில் பொறித்துள்ள அய்யன் வள்ளுவரையும் அவரது திருக்குறளையும் இந்த வையத்திற்கு தந்தது களப்பிரர்கள் காலம்தான் என்று கருணாநிதி இனியேனும் உணருவாரேயானால், பார்ப்பன வேளாள கருத்துருவாக்கவாதிகள் சொல்லித் தந்த வரலாற்றுப் பொய்களை வாந்தியெடுக்காமல் இருக்கும் வாய்ப்புண்டு.
அவசரத்திற்கு உதவிய நூல்கள்:
1. தலித் கலை இலக்கியம் அரசியல், தொகுப்பாசிரியர்: ரவிக்குமார் ( தலித் கலைவிழாக் குழு, நெய்வேலி)
2.தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – கே.கே.பிள்ளை ( உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
3.பொங்குமாங்கடல் – அருணன் ( வசந்தம் வெளியீட்டகம் , மதுரை )
4.தமிழகம்- பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு- முனைவர் கே.மோகன்ராம், முனைவர் ஏ.கே.காளிமுத்து ( ஜாசிம் பதிப்பகம், திருச்சி )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக