ஞாயிறு, 16 டிசம்பர், 2012

திருமா, அரசியல் நாகரீகத்துடன் பதில் கொடுத்திருக்கிறார்.

திருமா ஆச்சரிய பதில்: “ராமதாஸ் முகத்தை மீண்டும் பார்க்க ஆசை”

Viruvirupu அட.. பரவாயில்லையே!< “விடுதலை சிறுத்தைகள் ஒரு கட்சி அல்ல, அது ஒரு ரவுடி இயக்கம்” என்று டாக்டர் ராமதாஸ் அதிர வைத்ததற்கு அமைதியாக பதில் கொடுத்த திருமாவளவன், “நான் வார்தைகளை அளந்து பேசுகிறேன். காரணம், மறுபடியும் டாக்டர் ராமதாஸின் முகத்தை பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவனிடம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அடித்த காமென்ட் பற்றி கருத்து கேட்கப்பட்டது.
“விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இல்லை, ஒரு அமைப்பும் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் பேசி உள்ளதாக நிருபர்களாகிய நீங்கள் சொல்கின்றீர்கள். சரி. ஆனால், அதே ராமதாஸ், ‘தொல்.திருமாவளவன் வடிவத்தில் பெரியாரை பார்க்கிறேன். அவர் தமிழகம் முழுவதும் வலம் வரவேண்டும் அதற்கு நான் துணையாக இருக்கிறேன்’ என்று மேடை தோறும் முழங்கியதை நான் எண்ணிப் பார்க்கிறேன் அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன்.

டாக்டர் ராமதாசுடன் நான் இணக்கத்தை விரும்புகிறேன். மறுபடியும் அவரது முகத்தை பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன். மறுபடியும் அவரிடம் பேசுவதற்கான வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆகவே நான் வார்தைகளை அளந்து பேசுகிறேன். நேருக்கு நேர் சந்திப்பதற்கு நீங்கள் (நிருபர்கள்) ஏற்பாடு செய்யுங்கள்” என்றார்.
பரவாயில்லையே, ‘அதிரடிக்கு பதிலடி’ என்ற பாதையில் போகாமல் திருமா, அரசியல் நாகரீகத்துடன் பதில் கொடுத்திருக்கிறார். திருமாவின் சமீபகால அரசியல் நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் தெரிகிறது (உதாரணம், தீக்குளித்து இறந்தவர் வீட்டில் திருமா பேசிய பேச்சு).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக