திங்கள், 24 டிசம்பர், 2012

200 ஆண்டுகால வரலாறு...கேட்பதற்குத்தான் நாம் தயாராக இல்லை

 கேளாத செவிகள்   பாராத விழிகள் BR. மகாதேவன்; sedition மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 21
கடந்த கால சாதிய வாழ்க்கை குறித்து பெரும்பாலானவர்களால் தீட்டப்படும் பொதுவான சித்திரம் ஒன்று இருக்கிறது. அதில் இருண்ட ஓர் அறையில், எங்கிருந்து வருகிறது என்பதே தெரியாத வகையில் சிறிதளவே வெளிச்சம் இருக்கும். ஒரு நடுத்தரவயது ஆண்மகன் ஒட்டிப் போன வயிறு, இடுங்கின விழிகள், சுருக்கம் விழுந்த நெற்றி என்ற தோற்றத்தில் இருப்பார். கோமணம் மட்டுமே அணிந்திருப்பார். அவருடைய தோளில் ஒரு பறை தொங்கிக் கொண்டிருக்கும். இடுப்புக் கயிற்றில் பறையை அடிப்பதற்கான குச்சிகள் செருகப்பட்டிருக்கும். அந்த ஆண் மகனுக்குப் பக்கத்தில் ஒரு பெண் கிட்டத்தட்ட சம வயது கொண்டவர் நின்று கொண்டிருப்பார். புடவையை மட்டுமே உடுத்தியிருப்பார். ரவிக்கை கிடையாது. தோளில் ஒரு கள்ளு கலயம் இருக்கும். இடுப்பில் ஒரு குழந்தை. வயிற்றில் ஒன்று. காலடியில் இரண்டு மூன்று குழந்தைகள் இருப்பார்கள். இந்த குடும்பத்தினரின் கையில் வயதுக்குத் தகுந்த பிச்சைப் பாத்திரங்கள் இருக்கும். இருண்ட அவர்களுடைய வீட்டில் நான்கு ஜன்னல்கள் இருக்கும்.

தலித் குடும்பத்தினர் மிகவும் சோகமாக முதல் ஜன்னலுக்கு அருகில் போய் நிற்பார்கள். அந்த ஜன்னலில் தெரியும் காட்சி ஏக களேபரமாக இருக்கும். அங்கு ஒரு குடும்பம் யாகம் செய்து கொண்டிருக்கும். நடுநாயகமாக இருப்பவர் பஞ்சகச்சம் அணிந்திருப்பார். தோளில் ஒரு துண்டைப் போர்த்தியிருப்பார். எல்லாம் பட்டில் நெய்தவையே. கைகளில் நவரத்தினங்கள் பதித்த மோதிரங்கள், தங்க காப்பு, காதில் கடுக்கன் அணிந்திருப்பார். வெண் புரி நூல் அணிந்திருப்பார். யாகம் செய்விப்பவர்களும் கிட்டத்தட்ட இது போன்ற தோற்றத்திலேயே இருப்பார்கள். யாகம் செய்பவரின் மனைவி மடிசார் கட்டிக்கொண்டு கையில் வெள்ளி பஞ்ச பாத்திரத்துடன் பக்கத்தில் நின்று கொண்டிருப்பார். வெள்ளை உடை அணிந்த ஒன்றிரண்டு பெண்கள் தலையை முக்காடிட்டுக் கொண்டு தூணுக்குப் பின்னால் ஒரு ஓரமாக உட்கார்ந்திருப்பார்கள். குழந்தைகள் குறுக்கும் மறுக்குமாக ஓடி விளையாடிக் கொண்டிருக்கும். ஒரு இளம் பெண் வெள்ளிக் கிண்ணத்தில் சாதமும் பருப்பும் போட்டு அதில் நெய் கலந்து எடுத்துக் கொள்வார். ஓடி விளையாடும் சிறுவர்களுக்கு ஊட்டுவதற்குப் போவார். குழந்தைகளோ இங்குமிங்கும் ஓடி பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கும்.
ஜன்னலுக்கு வெளியில் இருந்தபடி தலித் குடும்பத்தினர் கோரஸாக ஐய்யா… அம்மா… என்று குரல் எழுப்புவார்கள். யாகம் செய்பவர் சட்டென்று திரும்பிப் பார்ப்பார். அகத்தின் கோபம் முகத்தில் தெரியும். முறைத்துப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் நெய்யை எடுத்து யாக குண்டத்தில் விடுவார். தீ கொழுந்துவிட்டு எரியும். சிறிது நேரம் கழித்து மீண்டும் கோரஸ் கேட்கும். இந்தமுறை யாகம் செய்பவர் திரும்பிப் பார்க்காமலேயே முறைப்பார். அவருடைய கண்களில் தீப் பிழம்பின் சுவாலை நாகம் போல் நெளியும். தாடையை இறுக்கி பல்லைக் கடிப்பார். பிறகு, தன் யாகத்தைத் தொடர்வார். சிறிது நேரம் கழித்து மீண்டும் ஜன்னலில் குரல் கேட்கும். யாகம் செய்பவருக்குக் கோபம் உச்சிக்கு ஏறும். மூக்கு நுனி சிவக்கும். கண்களை இறுக மூடிக் கொண்டு கோபப் பெருமூச்சுவிடுவார். தூணோரம் உட்கார்ந்திருந்த விதவைப் பெண்களில் ஒருவர் பதறியபடி ஓடி வந்து, போ… போ… என்று தலித் குடும்பத்தை விரட்டி ஜன்னலைச் சாத்துவார்.
கொஞ்சம் போல இருந்த வெளிச்சம் மேலும் கொஞ்சமாகக் குறையும். தலித் குடும்பம் அடுத்ததாக இன்னொரு ஜன்னலுக்குப் போகும். அங்கு ராஜ போகத்துடன் ஒருவர் மஞ்சத்தில் சயனித்திருப்பார். அவரைச் சுற்றிலும் இளம் பெண்கள் கைகளில் திராட்சை ரசக் கிண்ணங்களுடன்  இளகிய ஆடைகளுடன் சல்லாபத்தில் ஈடுபட்டிருப்பார்கள். சற்று தள்ளி திரைச்சிலை மூடப்பட்ட பகுதிக்கு வெளியே இசைக் கலைஞர்கள் வாத்தியங்களை இசைத்தபடி இருப்பார்கள். தலித் குடும்பத்தினர் அந்த ஜன்னலில் நின்றபடி ஏக்கத்துடன் பார்ப்பார்கள். அங்கிருப்பவர்களும் அவர்களைப் பொருட்படுத்த மாட்டார்கள். இவர்களின் யாசகக் குரல் அங்கிருப்பவர்ளையும் கோபப்பட வைக்கும். கையில் ஈட்டி வைத்திருக்கும் காவலர்கள் விரைந்து வந்து ஈட்டியின் முனை மழுங்கிய பாகத்தால் ஜன்னல் வழியாக தலித் குடும்பத்தை இடித்து விரட்டி கதவை ஓங்கிச் சாத்துவார்கள்.
தலித் குடும்பம் அடுத்த ஜன்னலுக்கு நகரும். அங்கிருப்பவர்களும் செல்வச் செழிப்பில் திளைப்பவர்களாகவே இருப்பார்கள். தலை வாழை இலைபோட்டு பெரும் பந்தி பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கும். இலையே தெரியாத அளவுக்கு பதார்த்தங்களின் அணி வகுப்பு. பெருத்த வயிறுடன் இடுப்பு வேட்டியை லேசாக நெகிழ்த்திக் கொண்டு வெளுத்துக் கட்டுவார்கள். தலித் குடும்பத்தின் யாசகக் குரல் பந்தியின் களேபரத்துக்கு நடுவே யார் காதிலும் விழாது. சாப்பிட்டு முடித்தவர்கள் தாம்பூலம் தரித்துக் கொண்டு பானை வயிறைத் தடவியபடியே ஜன்னலைக் கடக்கையில் வெளியில் பரிதாபமாக நிற்கும் தலித் குடும்பத்தைப் பார்ப்பார்கள். துளியும் கூசாமல் வெற்றிலைச் சாறை “புளிச்’என்று துப்புவார்கள். தலித் குடும்பத்தின் மீது ரத்த அபிஷேகம் போல் வெற்றிலைத் துப்பல் வழியும். துப்பியவர்கள் எதுவும் நடக்காததுபோல், தங்கள் போக்கில் போவார்கள்.
பசியும், அவமானமும் பிடித்துத் தள்ள தலித் குடும்பம் கடைசி ஜன்னலுக்கு அருகில் போகும். அங்கு இருப்பவர்கள் விவசாய வேலைகளில் மும்மரமாக இருப்பார்கள். கட்டுக் கட்டாக அறுவடை செய்து தலையில் சுமந்து களத்து மேட்டுக்குச் கொண்டு செல்வார்கள். யானையை கட்டி போரடிப்பார்கள். காற்று வீசும் திசையை அவதானித்தபடி பொலி தூற்றுவார்கள். அங்கிருந்து கிளம்பி வரும் நெல் தூசி, தலித் குடும்பத்தினரின் கண்ணில் பட்டு முள்ளாய்க் குத்தும். அந்த ஜன்னலின் கதவும் முகத்துக்கு நேராக ஓங்கி சாத்தப்படவே, தலித் குடும்பத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் இருண்ட வீட்டின் நடுவில் பெரும் சோகத்துடன் நான்கு ஜன்னல்களையும் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருப்பார்கள்.
பெரும்பாலான நபர்கள் இந்திய சாதி அமைப்பின் கடந்த காலம் குறித்து எடுக்கும் ஆவணப்படம் இப்படியாகத்தான் இருக்கும். கிணற்றடியில் மாடுகளுக்கு நீர் ஊற்றப்படும் கல் தொட்டிக்கு அருகில் பாத்திரம் பண்டங்களுடன் ஓரமாகக் கைகட்டி நிற்பது, மரத்தடியில் உடம்பெல்லாம் சாட்டை விளார்களுடன் துவண்டு கிடப்பது, சாணிப்பாலை வாந்தி எடுத்து அதிலேயே நினைவிழந்து விழுந்து கிடப்பது, எரவானத்தில் செருகியிருக்கும் நெளிந்த பித்தளைத் தட்டை எடுத்துக் கொண்டு, ஆண்டை வீட்டுப் பெண்கள் கொடுக்கும் எஞ்சிய உணவை தொழுவத்தில் குத்த வைத்து சாப்பிடுவது, சாணியைக் கரைத்து அதில் இருக்கும் நெல் மணிகளைக் கழுவி பாத்திரத்தில் போட்டுக் கொள்வது, டீக்கடைகளில் பெஞ்சுகள் காலியாக இருக்க வெளியில் குப்பை மேட்டுக்கு அருகில் குத்தவைத்து அமர்ந்து டீ குடிப்பது என்பது போலப் பல காட்சிகளும் இடையிடையே இடம்பெறும்.
ஆனால், இந்தச் சித்திரம் முழுமையானது அல்ல. அந்த வீட்டுக்கு மொத்தம் நான்கு ஜன்னல்கள் என்பது உண்மைதான். ஆனால், அதே வீட்டுக்கு வேறு மூன்று வாசல்களும் உண்டு. கதவே இல்லாத அந்த வாசல்களில் ஒன்றின் வழியே பார்த்தால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து பரந்து கிடக்கும் ஒரு கடல் தென்படும். அதில் தோணியைப் பலர் கூடித் தள்ளியபடி இருப்பார்கள். அலையில் படகு மிதக்க ஆரம்பித்ததும் லாகவமாக அவர்கள் அதில் துள்ளி ஏறிக் கொள்வார்கள். அதே கடலில் பாய்மரக் கப்பல்களும் பயணித்துக் கொண்டிருக்கும். கரையில் ஏராளம் மீன்கள் காய வைக்கப்பட்டிருக்கும். இடம் மாற்றி இடம் மாற்றி தவிக்கும் காகங்களுக்கு ஓரிரு கருவாடுகளைப் போட்டபடியே சிலர் மீன்களைக் காவல் காப்பார்கள். சிலர் அறுந்த வலையின் கண்ணிகளை தைத்துக் கொண்டிருப்பார்கள். இந்தக் கடலுக்கு வேலி கிடையாது.
தலித்களின் வீட்டின் இன்னொரு கதவின் வழியே பார்த்தால், பிரமாண்டமாகச் செழித்து வளர்ந்த காடு தென்படும். கேட்பாரற்று விளைந்து கிடக்கும் காய்களும் கனிகளும். வேட்டைக்கான மிருகங்கள் ஏராளம் அங்கிருக்கும். இத்தனைக்கும் தலித்கள் நாய்களைக் கயிற்றிக் கட்டிக் கொண்டு, வில், அம்பு, துப்பாக்கி சகிதம் அவ்வப்போது இந்தக் காட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்திருப்பார்கள். காடு அவர்கள் அனைவரையும் வைத்துப் போஷிக்கும் வளம் பெற்றதாகவே இருக்கும். இந்தக் காட்டுக்குக் கதவுகள் கிடையாது.
மூன்றாவதாக இருந்த வாசலின் வழியே பார்த்தால் செழித்துக் கிடக்கும் நெடிதுயர்ந்த மலை தென்படும். அங்கும் சிலர் வசித்து வருவார்கள். தேன், கிழங்குகள், விலங்குகள் என வேண்டியதைப் பெற்றுக் கொண்டு யாருக்கும் சொந்தமில்லாத நிலத்தில் ராஜாக்கள் போல் வசித்து வருவார்கள். பெரு மழைக் காலங்களில் குகைகளுக்கு அவர்கள் பதுங்கிக் கொள்வார்கள். இரவுகளில் வேட்டையில் ஈடுபடுவார்கள். சரிவான மலையிலும் பாத்தி கட்டி, பயிர் வளர்த்து வாழ்ந்துவருவார்கள். இந்த மலைக்கும் கதவுகள் கிடையாது.
தலித்களுக்கு நான்கு ஜன்னல்களில் கிடைத்த அனுபவமாகச் சொல்லப்படுவது உண்மையாக இருந்ததென்றால், மூன்று வாசல் வழியாக எளிதில் என்றோ வெளியேறிப் போயிருப்பார்கள். அப்படிப் போகவில்லை என்பதிலிருந்து அவர்களுடைய வேதனையாக முன்வைக்கப்படுபவையும் பிறருடைய ஒடுக்குமுறையாகச் சொல்லப்படுபவையும் உண்மை அல்ல என்பதுதான் தெரியவருகிறது.
பொதுவாகவே, எந்தவொரு விஷயத்தை அரசியல் உள்நோக்குடன் அணுகுபவர்கள் எல்லாரும் யானையைத் தடவிப் பார்த்த குருடர்களைப் போன்றவர்கள்தான். அதன் அடிப்படையில் அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் பிரச்னையை மேலும் சிக்கலாக்கவே செய்யும் என்பதை நமது 200 ஆண்டுகால வரலாறு நமக்கு தணிந்த குரலில் அழுத்தமாகச் சொல்லிவருகிறது. கேட்பதற்குத்தான் நாம் தயாராக இல்லை. அதோடு நிறுத்தாமல், பொய்யான ஒரு சித்திரத்தை வரைந்துவைத்துக்கொண்டு அதை மட்டுமே பார்த்தும் வருகிறோம்.
நாம் அடைந்து கிடக்கும் சிறையில் இருந்து நாம் வெளியேறுவது எளிதுதான். ஏனென்றால் சாவி நம் இடுப்பில்தான் இருக்கிறது.
0
BR. மகாதேவன்  tamilpaper.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக