புதன், 7 நவம்பர், 2012

Mad City (1997) பேனைப் பெருமாளாக்கும் செய்தி ஊடகங்கள்!

ஊடகங்களின் வணிக வெறி எப்படி ஒரு அப்பாவியை அலைக்கழித்து அவனது இயல்பான பிரச்சினையை தேசியப் பிரச்சினையாக மாற்றி மக்களை முட்டாளாக்கியது என்பதை அழுத்தமாகப் பேசுகிறது கோஸ்டா கவ்ராசின் மேட் சிட்டி
மேட்-சிட்டி-124 மணி நேரமும் செய்திகளை அள்ளித்தரும் தொலைக்காட்சிகள் ஆங்கிலம், இந்தியில் மட்டுமல்ல, தமிழிலும் நிறைய வந்து விட்டன. இந்த செய்தி ஊடகங்கள் வெறுமனே ரேடியோ போல் இல்லாது காட்சி ஊடகமாகவும் இருப்பதால் எந்நேரமும் பரபரப்பான செய்திகளுக்காக ஒரு வேட்டை நாயைப் போல அலைகின்றன. குறிப்பிட்ட நாளில் தீனி சரியாக அமையவில்லை என்றால் இவர்கள் டி.ஆர்.பி ரேட்டிங்குக்காக ஒன்றுமில்லாத செய்திகளையும் விசுவரூபமாக சித்தரித்து விடுவார்கள்.
செய்தி, அதன் முக்கியத்துவம், ஆதாரங்களின் நம்பகத்தன்மை, நெருடும் காட்சிகள் மீதான சுய தணிக்கை, பார்வையாளர்களின் மலிவான உணர்ச்சிகளைத் தூண்டாமல் விமரிசனமாகப் பார்க்க கற்றுத்தரும் பொறுப்பு என்று அடிப்படை ஊடக அறவியல் எதனையும் இச்செய்தி ஊடகங்களிடம் பார்க்க முடியாது. 24 மணி நேர செய்திகளின் தாயகம் அமெரிக்காதான். அமெரிக்க மக்களை அறிவும், விமரிசனமும் இல்லாமல் ஒரு ஏகாதிபத்திய நாட்டின் ஆர்வலர்களாக  உருவாக்கியிருப்பதில் இந்த ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு.
இத்தகைய அமெரிக்க ஊடகங்களை முன்மாதிரியாக வைத்து தான் நமது செய்தி ஊடகங்களும் செயல்படுகின்றன. சன் டி.வி.யின் உலகச் செய்தியோ, புதிய தலைமுறையின் நாசூக்கான விவாதமோ எல்லாமுமே அமெரிக்க கார்ப்பரேட் ஊடகங்களின் பாதையில்தான் பயணிக்கின்றன.  http://www.vinavu.com
அத்தகைய அமெரிக்க செய்தி ஊடகங்களின் வணிக வெறி ஒரு அப்பாவியை எப்படி அலைக்கழித்து, அவனது இயல்பான பிரச்சினையை எப்படி ஒரு தேசியப் பிரச்சினையாக மாற்றி, மக்களை முட்டாளாக்கியது என்பதை அழுத்தமாகப் பேசும் திரைப்படம் தான் இயக்குநர் கோஸ்டா கவ்ராசின் மேட் சிட்டி’.

கதை:

அமெரிக்காவின் சிறுநகர தொலைக்காட்சி சானல் ஒன்றில் பணி புரியும் மேக்ஸ், நடுத்தர வயதை எட்டி விட்டவனென்றாலும் அனுபவம் மிக்க, துடிப்பான செய்தியாளர். எப்போதும் பரபரப்பான செய்திகளுக்காக அலைந்துக் கொண்டிருக்கும் மேக்ஸ், ஒரு பிரத்யேக உடனடிச்  செய்தியின் மூலம் நாட்டையே தன் பக்கம் திருப்ப வேண்டுமென்ற இலட்சியம் உள்ளவன்.
இல்லாததை இட்டுக்கட்டி, பரபரப்பான செய்தி உருவாக்கும் முயற்சிகளுக்காக மேக்ஸை கடுமையாக விமரிசிக்கும் சானலின் மேலாளர், அவனை நொடித்துப்போன அருங்காட்சியகம் ஒன்றைக் குறித்து செய்தி சேகரிக்க அனுப்புகிறார். கூடவே புதிதாக வேலையில் சேர்ந்திருக்கும் பயிற்சி பெறுபவரை படம் எடுப்பவராக அனுப்புகிறார். ஆளில்லாத சிவன் கோவிலைப் போல, கூட்டமின்றி வாடும் அந்த அருங்காட்சியகத்தைப் பற்றிய செய்தியைக் கூட பரபரப்பாக மாற்ற முடியாது என்றில்லை. காரணம் மாக்ஸ் எதை நோக்கினாலும் அது சாகாவரம் பெற்று விடும்.
அருங்காட்சியகத்தின் நிதி நெருக்கடி பற்றி விளக்குகிறார் அதன் மேலாளர், திருமதி பேங்க்ஸ். நிதி நிலைமை காரணமாக அருங்காட்சியகத்தின் இரு காவலர்களில் ஒருவரை வேலை நீக்கம் செய்து, ஒருவரை மட்டும் வைத்து சமாளிப்பதாகத் தெரிய வருகின்றது. வேலையில் தக்கவைக்கப்பட்டிருக்கும் கிளிஃப் என்ற  கருப்பு இனக்  காவலர் அருங்காட்சியக கட்டிடத்தின் வெளியில் காவல் இருக்கிறார்.
அந்த நேரத்தில் பள்ளிச் சிறுவர்களின் குழு ஒன்று ஆசிரியையுடன் அருங்காட்சியகத்திற்கு சுற்றுலா வருகின்றது. எதுவும் பரபரப்பாக செய்தி சிக்காததால் சலிப்படைந்து, பேட்டியை முடித்து விட்டு, கேமராவை இயக்கும் பெண்ணை வெளியில் அருங்காட்சியகக் கட்டிடத்தை படம் எடுக்க அனுப்பிவிட்டு மேக்ஸ் அங்கிருக்கும் கழிவறைக்குச் செல்கிறான்.
இந்த நேரம் பார்த்து, அருங்காட்சியகத்தில் காவலாளியாக இருந்து வேலை இழந்த சாம் கையில் ஒரு பையுடன் நுழைகிறான். வேலை இழந்த பிறகும் காவலருக்கான சீருடை அணிந்து வந்திருக்கிறான். வேலை போய் விட்டது என்று வீட்டில் மனைவியிடம் சொல்ல அவனுக்குத் தைரியம் இல்லை என்று பின்னர் தெரிய வருகிறது. தான் சொல்வதை ஒரு ஐந்து நிமிடம் மட்டும் காது கொடுத்துக் கேட்க வேண்டும் எனக் குழந்தையைப் போல் திருமதி பேங்க்ஸிடம் கெஞ்சுகிறான் சாம். வேலை இல்லாமல் அவன் வாழ்க்கை அழிந்து போகும் என்று புலம்புகிறான்.
திருமதி பேங்க்ஸ் சாமிடம் பேசுவதற்குக் கூட மறுக்கிறாள்; உடனே வெளியில் போகச் சொல்கிறாள். சாம் கோபமடைந்து திருமதி பேங்க்ஸை மிரட்டுவதற்காகத் தன் துப்பாக்கியைக் காட்டுகிறான். அதுவும் சூடான விவாதத்தின் அங்கமாக இருக்கிறதேயன்றி வேறு வன்முறை ஒன்றுமில்லை.
உள்ளே கழிவறையில் இருந்தபடி இதைக் கவனிக்கும் மேக்ஸ், வேடிக்கை பார்க்க வந்த குழந்தைகளை சாம் பிடித்து வைத்திருப்பது போல புரிந்து கொள்கிறான். அங்கிருந்த பொது செல்பேசியில் தன் சானலை தொடர்பு கொண்டு ’ஒரு கடத்தல் சம்பவம் நடப்பதாகவும் அதை “பிரத்யேகமாக” நம் சானல் காட்ட வேண்டும்’ என்றும் சொல்கிறான். மேலாளர் அதை ஏற்றுக்கொள்ளவே, வெளியே இருக்கும் பெண் மூலம் நேரடி ‘பிரத்யேக‘ படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது. சிறுவர்கள் கடத்தப்பட்டதாக உடனடிச் செய்தி வெளியாகிறது.
திருமதி பேங்க்ஸ், சாம் கையில் இருக்கும் துப்பாக்கியைப் பிடுங்க முயற்சிக்க அது எதிர்பாரா விதமாக வெடித்து வெளியே இருக்கும் கருப்பர் கிளிஃபை காயப்படுத்துகிறது.
அருங்காட்சியகத்தில் இருக்கும் தொலைக்காட்சியைப் போட்டு பார்க்கும் சாம் திடீரென்று செய்தியில் தான் கடத்தல்காரனாகச் சித்தரிக்கப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறான். கழிவறையில் ஒளிந்து கொண்டு தொலைபேசி வழியாகப் பேசிக் கொண்டிருக்கும் செய்தியாளர் மேக்ஸை கையும் களவுமாகப் பிடிக்கிறான். ஆனால், அதற்குள் நிலைமை எல்லை மீறிப் போய் விடுகின்றது.
இதுதான் தன் வாழ்நாளை மாற்றப் போகும் பிரத்யேக செய்தி, இந்தச் சூழலை கனகச்சிதமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மேக்ஸ் முடிவு செய்கிறான். சாமின் அப்பாவித்தனத்தையும், பள்ளிச் சிறுவர்கள் துப்பாக்கி முனையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதான அவனது கற்பனைக் கொடூரத்தையும் கலந்து  அதனை ஒரு சுவாரசியமான செய்தியாக்கத் திட்டமிடுகிறான். ஈரை பேனாக்கி பேனைப் பெருமாளாக்கும் லைவ் தொலைக்காட்சி செய்தியாளரான மேக்ஸ்,  தொலைக்காட்சி மூலமாக சாமை தீவிரவாதியாகச் சித்தரிக்கிறான். இழந்து விட்ட வேலையைக் கேட்க வந்த சாம் தான் ஒரு கடத்தல்காரனாக்கப்பட்டிருப்பதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அந்த சூழ்நிலையில் திணறுகிறான். வெளியே ஊடகங்களும், போலிசும் குவிந்து விடுகிறார்கள்.
சாதாரணமாக அவன் வந்ததாகவும், திருமதி பேங்க்ஸை பயமுறுத்துவதற்கு மட்டும் அவன் துப்பாக்கியுடன் வந்ததாகவும், வேலை இழப்பால் அவன் குடும்பமும், குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள் என்றும்,  தனக்கு இந்த வேலையை விட்டால் வேறு வேலை கிடைக்காது என்றும் அப்பாவியாகக் கூறுகிறான், ஆறடி உயரமான வாட்டசாட்டமான சாம்.
அதற்குள் போலிசார் தொலைபேசியில் சாமைத் தொடர்பு கொண்டு குழந்தைகளை விடுவிக்க பணயமாக என்ன வேண்டும் என்று கேட்கிறார்கள். அந்தக் கேள்விக்கு அவனிடம் பதிலில்லை. கடத்தினால்தானே கோரிக்கை வைக்க முடியும்? வெளியே போனால் போலிசு கைது செய்துவிடும் என்பதால் செய்தியாளார் மேக்ஸ் சொல்படி கேட்கிறான். மேக்ஸை தன் தூதுவராக வெளியில் அனுப்புவதாகச் சொல்கிறான். இதற்கு மேல் மேக்ஸ் தன் நிகழ்ச்சியைப் பரபரப்பாகத் தொடர்கிறான்.
செய்தியாளார் மேக்ஸ், சாமின் அப்பாவித்தனத்தைப் புரிந்து கொள்கிறான். அவனைக் காப்பாற்றுவதற்கு மாக்ஸ் விரும்பினாலும் அதனூடே தனக்கு வேண்டிய சென்சேஷன் (பரப்பரப்பு) செய்திகளையும் சேர்த்து அறுவடை செய்ய விரும்புகிறான். ’அருங்காட்சியகத்தில் பள்ளிச் சிறுவர்களைப் பிடித்து வைத்திருக்கும் துப்பாக்கி ஏந்திய கடத்தல்காரன்’ என்ற ஒற்றைச் செய்தியை வைத்து அமெரிக்கா முழுவதும் பரபரப்பில் ஆழ்த்த வேண்டும். இதனை உண்மையென நம்பும் வண்ணம் ஒரு கருப்பினக் காவலர் வேறு சுடப்பட்டுக் காயமடைந்திருக்கிறார்.
தன் பேட்டியைத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப வேண்டும் என்பது சாமின் கோரிக்கை என்று மாக்ஸ் வெளியில் நிற்கும் போலீசு அதிகாரியிடம் சொல்கிறான். அவர்களது ஒப்புதலைப் பெற்று தொலைக்காட்சி காமிராவை எடுத்துக்கொண்டு உள்ளே திரும்புகிறான். “வேலை இழந்ததால்தான் இப்படிச் செய்கிறேன். நான் ஏழை, அப்பாவி. எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று சாம் சொல்வது தொலைக்காட்சியில் நாடெங்கும் ஒளிபரப்பாகின்றது. மற்ற செய்தி நிறுவனங்களும் இதை போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்புகின்றன.
மேக்ஸ் வெளியில் நிற்கும் பயிற்சிக்கு வந்துள்ள பெண்ணிடம் சாமின் அம்மா, நண்பர்கள், க்ளிஃப் என சகலரையும் பேட்டியெடுக்கச் சொல்கிறான். அனைத்துக் காட்சிகளையும் ஒரு திரைக்கதை போல் அமைத்து,  பேட்டிகளை முன்னும் பின்னுமாகக் கோர்த்து மாற்றியமைக்கிறான். ஆனால் ஏதோ குறைகிறது. மாற்றி மாற்றி கேள்விகள் கேட்டு கடைசியில் உதவியாளர் பெண் கேட்கும் கேள்வியில் சாமின் மனைவி உடைந்து அழுகிறாள். ஆம். மேக்ஸிற்கு வேண்டியது கிடைத்து விட்டது. அதன்படி சாம் மீது அனுதாபத்தை உருவாக்கும் செய்தித் தொகுப்பை உருவாக்கி ஒளிபரப்புகிறான் மாக்ஸ்.
சாம் அமெரிக்காவின் ஹீரோ ஆகிவிடுகிறான். சாம் படம் போட்ட டீ சர்ட்களின் விற்பனை கூட பரபரப்பாக நடக்கின்றது. சாமிற்கு அமெரிக்க மக்கள் ஆதரவு பெருகுகிறது. ஒரு சிறு ஊரில் நடக்கும் நிகழ்வு அமெரிக்கா முழுவதும் பேசப்படும் முக்கியச் செய்தியாகி விடுகிறது.
வெளியே பரப்பரப்பாக இருக்க, அருங்காட்சியகத்தினுள் பள்ளிச் சிறுவர்கள் ஜாலியாக விளையாடுகிறார்கள்; தூங்குகிறார்கள்; தாங்கள் தொலைக்காட்சியில் காட்டப்படுவதைக் கண்டு ஆரவாரம் செய்கிறார்கள். சிறுவர்களுடன் சிறுவனாக சாம் விளையாடி கொண்டிருக்கிறான். அவர்களுக்குப் பசிக்கும்போது அருங்காட்சியகத்தின் உணவு விற்கும் எந்திரத்தைத் திறந்து தின்பண்டங்களை எடுத்துக் கொடுக்கிறான். அவர்களுக்கு விளையாட்டு காட்டுகிறான்.
வெளியே அவர்கள் பெற்றோர்களோ செய்தி நிறுவனங்கள் பரப்பியிருக்கும் பயத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் நியூயார்க்கில் இருந்து செயல்படும் அமெரிக்காவின் பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒன்றில் முக்கியச் செய்தியாளராகக் கருதப்படும் கெவின் என்பவன் மேக்ஸூக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்து எரிச்சலடைகிறான். முன்பு மேக்ஸ் இவனுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் போது இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்பதும் இந்த எரிச்சலுக்கு ஒரு காரணம்.
’ஒருவன் குழந்தைகளை துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளான், அவன் ஹீரோ ஆக்கப்படுவது அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு ஆபத்து’ என்று மேக்ஸுக்குப் போட்டியாக எதிர்க்கோணத்தில் செய்திகளை உருவாக்குகிறான் கெவின். நியூயார்க்கிலிருந்து சிறப்பு விமானத்தில் வரும் கெவின், மேக்ஸ் வேலை செய்யும் உள்ளூர் செய்தி நிறுவனத்திடமிருந்து செய்தித் தொகுப்புகளை விலைக்கு வாங்கி அவனே இனி ரிப்போர்ட் செய்வதாகச் சொல்கிறான்.
மேக்ஸ் தொகுத்த செய்தி சாமின் மீது அனுதாபம் பிறக்கச் செய்கிறது. ஆனால் அதை அப்படியே நேர் எதிராக திருத்தம் செய்கிறான் கெவின். உதாரணத்திற்கு சாமின் மனைவியின் பேட்டியை எடுத்து, தனக்கு வேண்டியே வாக்கியங்களை திருத்தம் செய்து சாமை ஒரு தீவிரவாதியாகச்  சித்தரிக்கிறான். கெவின் மற்றும் மாக்ஸின் போட்டியால் சாமின் உயிருக்கு பெரும் அபாயம் ஏற்படுகிறது.
யாரோ ஒருவரைப் பிடித்து,  அவர் தான் காவலர் சாமின் பக்கத்து வீட்டுக்காரர் என்று பேட்டியெடுக்கிறார்கள். அவர் ஏதேதோ உளறும்போது “சாம் அவ்வபோது கோபப்படுவான்” என்று பேச்சுவாக்கில் கூறுகிறார். இந்தப் பேட்டியை தொலைக்காட்சியில் பார்த்து சாமின் குடும்பத்தார் குழப்பம் அடைகிறார்கள். ‘யார் இந்த நபர், இவரை நாம் எப்பொழுதுமே பார்த்ததில்லையே?!” என்று யோசிக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் கருப்பினத் தொலைக்காட்சிகள் கருப்பர் க்ளிஃப் சுடப்பட்டதற்கு இனவெறிதான் காரணம் என்று செய்தியைப் புனைகிறார்கள். காவலர் க்ளிஃப்,சாம் தன் நண்பர் என்றும், அவன் தனக்கு எந்தத் தீங்கும் நினைக்கமாட்டான்  என்றும் சொல்வதை எடிட் செய்து நீக்குகிறார்கள். இதற்கிடையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருப்பர் க்ளிஃப் இறந்து விடுகிறார்.
ஏற்கெனவே நாட்கள் சென்று கொண்டிருப்பதால் விரக்தியடைந்த பெற்றோர்கள் சாம் மீது எரிச்சல் கொள்கிறார்கள். நிலைமை தலைகீழாக மாறுகின்றது. சாமுக்கு உதவியாக மேக்ஸ் ஏதும் செய்ய முடியாமல் திணறுகிறான். போலிஸ் சாமை சுட்டுப் பிடிக்க தயாராகின்றது.
சாம் நிலைமையை உணருகிறான். சிறுவர்களையும், மேக்ஸையும் வெளியேறச் சொல்லிவிட்டு, பையில் கொண்டு போயிருந்த வெடிமருந்தை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொள்கிறான். வெடிவிபத்தில் காயமுறும் மேக்ஸ் அதிர்ச்சியில் ஒரு இடத்தில் அமருகிறான். அவனை எல்லா தொலைக்காட்சி காமிராக்களும் சூழ்ந்து கொள்கின்றன. ”உள்ளே என்ன நடந்தது ?” என்று அவர்களைனவரும் கேட்கின்றனர்.
“நாம் சாமைக் கொன்று விட்டோம்‘’ என்று கத்தியபடி நடக்கிறான். அதுவும் நேரடியாக ஒளிபரப்பாகின்றது.

மேட்-சிட்டி-2

நாய் மனிதனைக் கடித்தால் செய்தியில்லை, மனிதன் நாயைக் கடித்தால்தான் செய்தி‘ என்ற பிரபலமான கூற்றே இன்றைய 24 மணி நேர செய்தி ஊடகங்களின் தாரக மந்திரம். ஒருவேளை நாய்தான் வழக்கமாக மனிதனைக் கடிக்குமென்றாலும், அதையே ஒரு தூரக்காட்சியில் நேரெதிராகக் காட்டுவதை இந்த ஊடகங்கள் விரும்பிச் செய்கின்றன.
படத்தில் வரும் ஒரு காட்சியின்படி அருங்காட்சியகத்தில் குழந்தைகளுடன் மாட்டிக்கொண்ட சாம் அவர்களுக்கு கதை சொல்கிறான். தன் பாதுகாப்பிற்கு வைத்திருக்கும் துப்பாக்கியை வைத்து அமெரிக்கப் பழங்குடிகளைப் போல் ஆடியும், நடித்தும் காண்பிக்கிறான். ஆனால் இதை ஹெலிகாப்டர் மூலம் மேலிருந்து படமெடுக்கும் செய்தி நிறுவனங்கள் அவன் குழந்தைகளை துப்பாக்கியை வைத்து பயமுறுத்துவதாக அறிக்கை கொடுக்கின்றன. போலிசு அவனைக் கொன்றாவது குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்குச் செல்கிறது.
ஒரு காட்சியில் அவர்கள் எதிர்பார்க்கும் பொருட்கள் இடம்பெற்று விட்டாலே போதும், மீதித்  திரைக்கதையை ஊடகங்கள் எழுதி, உருவாக்கி விடுகின்றன. சமீபத்தில் கவுகாத்தியில் ஒரு பெண் துகிலுறியப்பட்ட வன்முறை அனைத்து ஊடகங்களிலும் வெளியாயின. எல்லோரும் இந்தக் காட்சியை வெளியிட்டபடி ‘நாடு இப்படிக் கெட்டுக் கிடக்கின்றதே! பெண்களுக்கு பாதுகாப்பில்லையே!‘ என்று கவலைப்பட்டுக் கொண்டனர்.
ஆனால் இந்தக் காட்சியைக் காட்டுவதற்காகத்தான் இத்தகைய ’கவலைகளே’ அன்றி வேறு எதுவுமில்லை. பார்வையாளர்களும் இணையம் முதற்கொண்டு செய்தி ஊடகங்கள் வரை அந்தக் காட்சியை பார்க்கத்தான் விரும்பினார்களே அன்றி, அந்தப் பெண் மீது இரக்கமோ, அந்தக் கயவர்கள் மீதான கோபமோ கொள்ளவில்லை.
உலக ஊடகச் சந்தையைக் கட்டுப்படுத்தும் ரூபர்ட் முர்டோச்சின் செய்தி நிறுவனங்கள் இங்கிலாந்தில் ஒட்டுக்கேட்டு எழுதிய ஊழல் பலராலும் பேசப்பட்டது. அதுவும் இங்கிலாந்து அரச வம்சத்தின் மாளிகைகளுக்குள்ளும் முர்டோச்சின் காது சென்ற பிறகே அது பாரிய தவறாகக் கருதப்பட்டது. ஆனால் முர்டோச்சின் நிறுவனங்கள் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாக பல்வேறு பொய்க்கதைகளைத் தயாரித்து வெளியிட்டிருப்பதை யாரும் ஒரு குற்றமாகப் பார்க்கவில்லை. போர்க்களச் செய்தியாளர்கள் என்ற பெயரில் அமெரிக்க இராணுவத்துடன் சென்றவர்கள் வியந்து பேசிய கதைகளெல்லாம் ஊடக அறத்தினைக் கேலி செய்வதாக பொதுவில் கருதப்படுவதில்லை.
அரசியல் ரீதியாக ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளை நியாயப்படுத்துவது போல, பண்பாட்டு ரீதியாக அரட்டை, கிசுகிசு, வி.ஐ.பி.களின் வாழ்வை வியந்தோதும் செய்திகள் போன்றவற்றை வைத்து மலிவாக கல்லாக் கட்டுவதும் இத்தகைய ஊடகங்கள்தான்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த பேஜ் 3‘ எனும் இந்திப்படம் நினைவிருக்கிறதா? அதில் மேட்டுக்குடியினரின் ஆட்டம் பாட்டங்களைச் செய்திகளாக வெளியிடும் போது, அவர்களது பாலியல் வன்முறை குறித்த செய்திகளை வெளியிட முடியாமல் பதவியிலிருந்து நீக்கப்படுவாள், படத்தின் நாயகி. பல்வேறு ஊடகங்களில் உள்ள பத்திரிகையாளர்களெல்லாம் இப்படித்தான் கவனமாக தயாரிக்கப்படுகின்றனர். ஆளும் வர்க்கத்தின் சிந்தனையோட்டத்தை சில மாதங்களுக்குள்ளாகவே உண்டு உரமாக்கி விடுகின்றனர்.
படத்தின் ஆரம்பக் காட்சிகளில் கருப்பு இனக் காவலர் கிளிஃப் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்து சாயும் போது, மேக்சின் உதவியாளரான பெண் ஓடி வந்து அவரைத் தூக்கிவிட உதவி செய்வாள். ’அப்போது ஏன் காமராவால் அதைப் பதிவு செய்யவில்லை?‘ என்று பின்னர் மேக்ஸ் அவளைக் கடிந்து கொள்வான். இறுதிக் காட்சியில் காயமடைந்த மேக்ஸ் தன் தலையில் வழியும் ரத்தத்தை துடைக்க முனைகிறான். அதே உதவியாளர் பெண் அதைத் தடுத்து, ரத்தம் வழிய படம் பிடித்தால் நன்றாக இருக்கும் என்று அப்படியே பேச சொல்லுகிறாள். அவளும் ஊடகத்துறைக்கு ’தயாராகி’ விட்டிருக்கிறாள். ஆரம்பத்தில் மனித நேயத்தோடு செயல்பட்டவள் பின்னர் ஊடகங்களின் இரக்கமற்ற நெறிமுறைக்குத் தயாராகி விடுகிறாள்.
கவுகாத்தி பெண் மீதான பாலியல் வன்முறையில் கூட அதைப் பதிவு செய்த உள்ளூர் தொலைக்காட்சி செய்தியாளர் மீது பல விமரிசனங்கள் வைக்கப்பட்டன. தொலைக்காட்சி செய்தி பரபரப்புக்காக நிருபரே தூண்டி விட்டு இந்தச் சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அதைத் தாண்டி வேறு சில அறிஞர்கள் ஒரு ஊடகவியலாளனின் கடமை ஒரு சமூக நிகழ்வைப்  பதிவு செய்வதிலிருந்தே மதிப்பிடப்பட வேண்டுமே அன்றி, அந்தப் பிரச்சினைக்கு அவன் உதவினானா, இல்லையாவென ஆராய்தல் தவறு என்கிறார்கள்.
ஊடக உலகில் ஒரு பத்திரிகையாளனது அறம் என்பது அவனது தனிப்பட்ட விழுமியங்களால் உருவாக்கப்படுவது இல்லை. அப்படி இருந்தாலும் அது நடைமுறைக்குச் செல்லும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதில்லை. பத்திரிகை முதலாளிகளின் வர்த்தக நோக்கே ஊடக உலகின் நெறிமுறைகளைத் தீர்மானிக்கும் அடிப்படையைக் கொண்டிருக்கிறது. ஆகவே எதனைச் செய்தியாகப் பார்க்க வேண்டும், செய்தியை எப்படிப் பார்க்க வேண்டும், எதை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதிலெல்லாம் இந்த புதிய பத்திரிகையாளர்கள் விரைவில் கை தேர்ந்தவர்களாகி விடுகிறார்கள்.
மலிவான பரபரப்புச் செய்திகளைத்தான் பரந்துபட்ட வாசகர்கள் விரும்பி ரசிப்பார்கள் என்று முடிவு செய்து கொண்டு, இவர்களாகவே அத்தகைய செய்திகளைத் தெரிவு செய்கிறார்கள். அல்லது ஒரு செய்தியின் கோணத்தை அப்படி மாற்றி விடுகிறார்கள். மக்கள் போராட்டம் ஒன்றின்மீது போலீசு நடத்தும் தாக்குதலைக் கூட காட்சி ரீதியாக வெறும் சண்டைக் காட்சி போல மாற்றி விடுகிறார்கள். ஆகவே ஊடக முதலாளிகளும், பத்திரிகையாளர்களும் ஒருவருக்கொருவர் முரண்படுவதில்லை.
நிகழ்வு ஒன்றினைப் பதிவு செய்து, பொது மக்களிடம் காண்பிப்பது ஒரு பத்திரிகையாளனது அடிப்படைக் கடமை என்றாலும் அத்தகைய நிகழ்வின் மீது அவன் யார் சார்பில் பேச வேண்டும் என்பது முக்கியமானது. நடுநிலைமை என்று பொதுவில் கூறப்படும் ஒன்று உண்மையில் இருக்கவே முடியாது. அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்கும் ஒரு பத்திரிகையாளன் அதை மக்கள் நோக்கிலிருந்தே பேச முடியும். ஆனால் அதிகார வர்க்கத்திடம் அடிபணிந்து போகும் ஊடகச் சூழ்நிலையே இன்று செல்வாக்கு செலுத்துகிறது. இறுதியில் தனது பணி குறித்து எந்த பத்திரிகையாளருக்கும் குற்ற உணர்வு வருவதில்லை. அந்த அளவுக்கு பிழைப்புவாதம் கோலேச்சும் சூழ்நிலையில் வாழ்கிறோம்.
தென் ஆப்பிரிக்காவின் புகைப்பட பத்திரிகையாளரான கெவின் கார்ட்டர் 1993 இல் சூடானுக்கு செல்கிறார். அங்கு ஒரு சிறுமி பட்டினியாலும், வறட்சியாலும் எலும்பும் தோலுமாக இருக்க, அருகே செத்த விலங்குகளைத் தின்னும் ஒரு பெரிய பறவை அவளை நெருங்க முயற்சிக்கிறது. அந்தப் பறவையை தொந்திரவு செய்யாமல் அதுவும், சிறுமியும் கேமராவின் சட்டகத்தினுள் வரும் வரை அவர் 20 நிமிடங்கள் காத்திருந்து புகைப்படம் எடுக்கிறார். அந்தப் புகைப்படம் 1994ஆம் ஆண்டு புக்கர் பரிசைப் பெறுகின்றது.
கருத்தரங்கு ஒன்றில் படத்தில் இருக்கும் அந்தச் சிறுமிக்கு பிறகு என்ன ஆனது என்று பலரும் கேட்கிறார்கள். உண்மையில் கார்ட்டருக்கு அது குறித்து எதுவும் தெரியாது. படம் எடுத்த பிறகு அவர் திரும்பி விட்டார். இதனடிப்படையில் கார்ட்டர் மீது பலமான விமரிசனம் எழுப்பப்படுகின்றது. உயிர் போகும் நிலையில் உள்ள சிறுமியைக் காப்பாற்ற எந்த முயற்சியும் செய்யாமல், வெறுமனே புகைப்படம் மட்டும் எடுத்த அவரது செயலைப் பலரும் கண்டிக்கிறார்கள். இதன் பிறகு இரண்டு ஆண்டுகளாய் இந்தப் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட கார்ட்டர் இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறார்.
ஆனால் இன்று அப்படி ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டால் யாரும் அந்த கேள்வியையோ, விமரிசனத்தையோ முன்வைக்கப் போவதில்லை. அத்தகைய அடிப்படை அறத்தை ஊடகங்கள் கொன்று விட்டதால், எந்தப் பத்திரிகையாளரும் அப்படி தற்கொலை செய்து கொள்ளும் நிலை இன்று இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக