வெள்ளி, 9 நவம்பர், 2012

ரயில்வே ஆலோசனை கூட்டம்: தி.மு.க., புறக்கணிப்பு; அ.தி.மு.க., வெளிநடப்பு

திருச்சி மற்றும் மதுரை கோட்ட ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தை பெரும்பாலான தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் புறக்கணித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயில் முக்கிய கோட்டங்களாக திருச்சி மற்றும் மதுரை ரயில் கோட்டங்கள் உள்ளன. தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகள் இந்த இரண்டு கோட்டங்களின் கீழ் வருகின்றன. தமிழகத்தின் முக்கிய ரயில் பாதையான சென்னை நாகர்கோவில் ரயில் பாதையின் பெரும்பாலான பகுதிகள் இந்த இரண்டு கோட்டங்களிலும் அமைந்துள்ளன. தற்சமயம் தீபாவளி போன்ற முக்கிய நாட்களில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் அல்லாடுவதும், ரயில்வே முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் முடிந்து விடுவதும் தொடர் கதையாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். http://www.dinamalar.com/


ஆனால் இதுகுறித்து நமது எம்.பி.,க்கள் கவலை பட்டதாகவே தெரியவில்லை என்பது இன்று திருச்சியில் நடந்த ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் தெரியவந்துள்ளது. திருச்சி மண்டல பயிற்சி மையத்தில் இன்று நடந்த திருச்சி மற்றும் மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனை கூட்டத்தில், இந்த கோட்டங்களுக்குட்பட்ட எம்.பி.,க்கள் 30 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட எம்.பி.,க்களின் எண்ணிக்கையோ வெறும் 5 மட்டும் தான். தி.மு.க., சார்பில் திருச்சி சிவா, வேணுகோபால் மற்றும் தங்கவேல் ஆகியோரும், அ.தி.மு.க., சார்பில் திருச்சி குமார் மற்றும் ஓ.எஸ். மணியன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் மிட்டல் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், குமார் எம்.பி., பேசுகையில், கடந்த 2001ம் ஆண்டு வரை திருச்சியிலிருந்து புறப்பட்ட மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில், தற்போது கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு புறப்படுகிறது. திருச்சி மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த ரயிலை மீண்டும் திருச்சியிலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தான் பலமுறை பார்லிமென்ட்டில் பேசியும், மனு கொடுத்துள்ளேன். இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார். அதற்கு உரிய பதிலை தெரிவிக்காமல் மிட்டல் மழுப்பலான பதிலை கொடுத்தாக தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த குமார் எம்.பி., கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளியேறினார்.

சுமார் 30 எம்.பி.,க்கள் வரை அழைக்கப்பட்ட நிலையில், வெறும் 5 எம்.பி.,க்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ரயில்வே திட்டங்கள் குறித்து உருப்படியாக எதுவும் விவாதிக்கப்படாதது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில், கட்சி வேறுபாடின்றி, மத்திய அரசு மற்றும் அதிகாரிகளை வற்புறுத்தி தங்களுக்கு தேவையான ரயில்வே திட்டங்களை பெறும் சூழல் நிலவும் போது, தமிழக எம்.பி.,க்கள் தொடர்ந்து ரயில்வே திட்டங்களையும், கூட்டங்களை புறக்கணிப்பது தமிழக மக்களுக்கு தேவையான ரயில்வே திட்டங்கள் எப்போது கிடைக்கும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக