வியாழன், 1 நவம்பர், 2012

சீட்டாட்டம் குறித்த நல்ல புரிதல்



டிஸ்கிளைமர்: இவ்விடுகை ஸ்ரீராம் சிட்ஸ் நடத்தும் சீட்டு பற்றி என்று எண்ணி வந்தவர்கள் அப்பீட் ஆகிக் கொள்ளவும் :) சீட்டாட்டம் குறித்த பாலபாடம் பயின்றவரும், சீட்டாட்டத்தில் ரம்மி, டிரம்ப்ஸ் போன்ற ஒரு சில விளையாட்டுகள் தெரிந்தவர்களும் தொடர்ந்து வாசிக்கலாம். பெரும் ’ஜூதாடிகள்’ தெரிந்து கொள்ள இவ்விடுகையில் எதுவும் இல்லை.
ஒரு சீட்டுக்கட்டில் இருக்கும் 52 சீட்டுகளில், ஒவ்வொரு ஜாதியிலும் (இது பிரச்சினை பண்ணாத இஸ்பேட், ஆட்டின், டயமண்ட், கிளாவர் என்ற 4 ஜாதிங்க!) AKQJ 10 9 8 7 6 5 4 3 2 என்று 13 சீட்டுகள் இருக்கும். மூணு சீட்டை, ஒரு சீட்டுக்கட்டை வைத்துக் கொண்டு, மேக்ஸிமம் 17 பேர் விளையாடலாம் (17 * 3 = 51, 1 சீட்டு சும்மா). ஆனால், பொதுவாக 8லிருந்து 12 நபர்கள் ஆடினால் சுவாரசியமாக இருக்கும் (அனுபவம் பேசுகிறது). மூணு சீட்டை தொடர்ந்து ஒரு நாலைந்து நாட்கள் விளையாடினால், ஆனானப்பட்ட யுதிஷ்டிரர் விடாப்பிடியாக சூதாடி அனைத்தையும் தோற்றது குறித்த “நல்ல புரிதல்” ஏற்படும்! ஆங்கிலேய துரைமார் ஆடிய போக்கர் (Poker) விளையாட்டின் இந்திய வடிவமாக மூணு சீட்டை கருதலாம். சீட்டுக்கட்டு குலுக்கப்பட்டு (shuffle) ஆட்டக்காரர் ஒவ்வொருவருக்கும் 3 சீட்டுகள் வழங்கப்படும். இது காசு வைத்து (stakes) ஆடப்படும் பந்தய விளையாட்டு என்பதில் சந்தேகம் கூடவே கூடாது. ஆடுபவர் தனது 3 சீட்டுகளை பிரித்துப் பார்த்து விட்டோ (SEEN) அல்லது பார்க்காமலோ (BLIND) "சூது” ஆடலாம்!

சீட்டுகள் குலுக்கப்படுவதற்கு முன்பே, ஆட்டக்காரர் ஒவ்வொருவரும், தீர்மானிக்கப்பட்ட ஒரு முன் தொகையை பொதுவில் செலுத்த வேண்டும். இதற்கு கிட்டி (KITTY) என்று பெயர். இந்த கிட்டி பணமும், தொடர்ந்து ஆடுபவர்கள் போடும் பந்தயத் தொகையும் (சீட்டைப் பார்த்து ஆடுபவர், Blindஆக ஆடுபவர் செலுத்தும் தொகையைப் போல ஒவ்வொரு ரவுண்டுக்கும் 2 மடங்கு!) இறுதியில் (அவரது மன அல்லது 3 சீட்டுகளின் வலிமையினாலோ) வெல்பவருக்கு போய்ச் சேரும். ஒரு ஆட்டம் என்பது பல (பந்தய) ரவுண்டுகள் செல்லும்.

3 சீட்டுகள் சரியாக அமையாதவர்கள், கிட்டிக்கு முன்பணம் தண்டம் அழுததோடு நிறுத்திக் கொள்ளலாம். ஆனால், சூது தரும் போதையால், அனுபவஸ்தர்கள் கூட 2-3 ரவுண்டுகள் ஆடி விட்டுத் தான் நிறுத்துவர். கிட்டியில், பணமும் தொடர்ந்து ஆடுபவர்கள் கட்டும் பந்தயத்தொகையால் கூடிக்கொண்டே போகும். கிட்டியில் இறைந்து கிடக்கும் பணத்தைப் பார்க்கையில் வரும் போதை சோமரசத்தை விட அலாதியானது ;-)

தனது கையிலுள்ள 3 சீட்டுகளின் மதிப்பை (எந்தெந்த வகை ”3 சீட்டு”களுக்கு என்ன மதிப்பு என்று பின்னால் வருகிறது) வைத்து ஒவ்வொரு சீட்டுக்காரரும், ஒவ்வொரு ரவுண்டுக்கும் குறிப்ப்ட்ட பந்தயத்தொகையை கிட்டிக்கு செலுத்தி தொடர்ந்து விளையாடலாம். இது Blindஆக ஆடும் கனவான்களுக்குப் பொருந்தாது. அவர்கள் “Seen" ஆக ஆடுபவரை தொடர்ந்து ஆட ஏற்றி விட்டு அல்லது டென்ஷன் பண்ணி துரத்தி விட்டு தங்கள் பணியை செவ்வனே செய்யும் கவலையற்ற மனிதர்கள். அவர்கள் சீட்டுகளை பார்த்து ஆடுபவரை விட பாதி மடங்கே பந்தயத்தொகை செலுத்துவதும் அதற்கு ஒரு காரணம்!

இப்படி, சிலபல ரவுண்டுகளில் சிலர் வெளியேறி விடுவர். பெருஞ்சூதாடிகளும், மதிப்பு மிக்க சீட்டுகளை வைத்திருப்பதாக கருதுபவரும் தொடர்ந்து ஆடுவர். 3 பேர் மிஞ்சியிருக்கும் கட்டத்தில், இருவர் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வாய்ப்புண்டு, அவர்களில் அதிக மதிப்புள்ள சீட்டுகளை வைத்திருப்பவர் தொடர்ந்து ஆடுவார். இதற்கு Side Show என்று பெயர். இதனால் இருவர் மட்டுமே மிஞ்சுவர். அல்லது ஒவ்வொருவராக வெளியேறி, 2 ஆட்டக்காரர்களே எஞ்சும் நிலை நார்மலாகவும் நிகழலாம்.

2 ஆட்டக்காரர்களே மிஞ்சியிருக்கும் கட்டத்தில் மட்டும் தான் ஆட்டம் முடியும் தறுவாய்க்கு வரும். அதற்கு முன், (சைட் ஷோ தவிர்த்து) யாரும் யாரையும் சீட்டுகளை காட்டச் சொல்ல, அதாவது அவரவர் சீட்டுகளின் மதிப்பை அறிந்து ஆட்டத்தை முடிக்க, ஆட்ட விதிகள் அனுமதிக்காது! தைரியமிருந்தால் ஆடு அல்லது துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடு என்பதே 3 சீட்டின் தலையாய நோக்கமாகும்! ”செய் அல்லது செத்து மடி” என்பதை முன் வைக்கும் வீர விளையாட்டாகவும் இதைப் பார்க்க முடிகிறது அல்லவா ?!?!

இருவர் மட்டும் மிஞ்சியிருக்கும் இக்கட்டத்தில் கிட்டியில் பந்தயப்பணம் குவிந்திருக்கும்! அந்த இருவரில் ஒருவர், மற்றவரிடம் அவரது சீட்டுகளை காட்டுமாறு (show) கேட்டால் (கேட்காமல் இருவரும் கிட்டியில் பணத்தைப் போட்டு தொடர்ந்து ஆடிக்கொண்டும் இருக்கலாம்!) ஆட்டமும் முடிவுக்கு வந்து, இருவரில் யாரிடம் அதிக மதிப்புள்ள 3 சீட்டுகள் உள்ளதோ, அவரே வென்றவராக அறிவிக்கப்பட்டு, கிட்டியில் உள்ள மொத்தப் பணத்தையும் அவர் அள்ளிக் கொள்வார்! சம மதிப்பு எனில், ஷோ கேட்டவர் காலி!

வேடிக்கை பார்ப்பவர்களுக்கு இது கண்கொள்ளா காட்சி, ஆட்டத்தில் பணம் நிறைய விட்டவர்களுக்கு இது வயிற்றெரிச்சல்! ஒரே ஆட்டத்தில், நிறைய ஜெயிக்கலாம், நிறையவும் தோற்கலாம், 3 சீட்டில், இன்னொரு எ.கொ.ச உண்டு! ஆட்டத்தின் நடுவில், பந்தயத்தின் சூட்டைத் தாங்க முடியாமல் வெளியேறிய நபர், வென்றவரின் 3 சீட்டுகளை விட மதிப்புள்ள சீட்டுகளுக்கு சொந்தக்காரராக இருந்திருக்க வாய்ப்புண்டு!

இப்போது, 3 சீட்டுகளின் மதிப்பு குறித்து: (மேலிருந்து கீழாக) 4 சாதிகளுக்கும் ஒரே மதிப்பு தான்.

1. ட்ரிபிள் (TRIPLE): AAA முதல் 222 வரை

2. ஃப்ளாஷ் (FLASH) அல்லது ஒரிஜினல் ரம்மி (ஒரே ஜாதி): A23, AKQ, KOJ, ... 432 வரை

3. ரன் (RUN): ஃப்ளாஷ் போலவே, ஆனால் ஜாதி கலந்த 3 தொடர் சீட்டுகள்

4. கலர் (COLOUR): ஏதோ 3 சீட்டுகள், ஒரே ஜாதி (இருவரிடம், முதல் 2 சீட்டுகள் சம மதிப்பாக இருக்கையில், அதாவது ஒருவரிடம் டயமண்ட் 6,7, மற்றவரிடம் கிளாவர் 6,7 என்று வைத்துக் கொண்டால், யாரிடம் 3வது சீட்டு பெரியதாக உள்ளதோ, அவரே வென்றவர் ஆவார். 3வது சீட்டும் சம மதிப்பெனில், ”தைரியம் இன்றி” ஷோ கேட்டவர் காலி! இது, மேற்கூறிய ஃப்ளாஷ் மற்றும் ரன்னுக்கும் பொருந்தும்!

5. ஜோடி (PAIR): AA* முதல் 22* வரை. சம மதிப்பு ஜோடி எனில், 3வது சிட்டு முக்கியத்துவம் பெறுகிறது

6. டாப் (TOP): மேற்கூறிய எந்த வகையிலும் சாரா 3 சீட்டுகள் ஆட்டத்தின் கடைசியில் எஞ்சிய இருவரிடம் இருக்கும் சூழலில், 3 சீட்டுகளில் “டாப்” சீட்டு வின்னரை நிர்ணயிக்கும். டாப் சீட்டு சம மதிப்பெனில், மற்ற இரண்டு சீட்டுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

3 சீட்டு மன வலிமையை வளர்க்க பெரிதும் உதவுகிறது! 3 சீட்டு குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை இத்துடன் இனிதே நிறைவடைகிறது! இனி, Go .... Play ..... என்சாய் மக்களே :) ஜூதாடிகள் தங்கள் கலக்கல் அனுபவங்களை பின்னூட்டத்தில் பகிரலாம்.

எ.அ.பாலா
http://balaji_ammu.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக