திங்கள், 5 நவம்பர், 2012

ஓவியம் : கண்ணாடி, பானை, உலோகம் ஆகியவற்றில் வரையும் ஆர்வமும் தேர்ச்சியும்


ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 16
இன்று உற்பத்தி தொழில்களை உருவாக்கி, அதற்குரிய தகுந்த நபர்களைத் தேர்வு செய்து தொழில்களை நடத்திச் செல்வது கடினமாக உள்ளது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். தொழில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது பல தொழிலதிபர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், அறிவு சார்ந்த தொழில்களுக்கு இனிவரும் காலங்களில் வரவேற்பு கூடுதலாக இருக்கக்கூடும்.
அந்த வரிசையில் முதலில், கலை ஆர்வம் உள்ள பெண்களுக்கான வாய்ப்புகளை இனி பார்ப்போம்.
  1. ஓவியம் : கண்ணாடி, பானை, உலோகம் ஆகியவற்றில் வரையும் ஆர்வமும் தேர்ச்சியும் கொண்டவர்கள் பயிற்சி வகுப்புகள் எடுக்கலாம். இப்படிப்பட்ட வகுப்புகளுக்கு இன்று நல்ல தேவை உள்ளது. இதற்கு பெரிய முதலீடுகள் தேவையில்லை. வீட்டின் ஒரு பகுதியை வகுப்பறையாக மாற்றி, ஒரு சில உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும். குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி முகாம்களை நடத்தினால் நல்ல வருமானம் ஈட்ட முடியும். மற்ற பயிற்சி வகுப்புகளிலிருந்து சிறு வித்தியாசப்படுத்தி கற்பனை வளத்துடன் சொல்லிக் கொடுக்கும்போது நல்ல அறிமுகங்கள் கிடைக்கும்.
  2. இசை வகுப்புகள்: இசையில் பட்டபடிப்பு பெற்றவர்கள் அல்லது முறையாக இசையைக் கற்றவர்கள், அது எந்தப் பிரிவைச் சேர்ந்த இசையாக இருந்தாலும், இசை வகுப்புகள் நடத்தலாம். இசைக் கருவிகள் வாசிக்கக் கற்றுக்கொடுக்கலாம். இன்று டிவியில் பலவித போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதையும் பெற்றோருக்கு அதில் ஆர்வம் அதிகரித்துக்கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம். பயிற்சி வகுப்புகள் இவர்களிடையே எளிதில் பிரபலமடையும்.
  3.  யோகா /தியானப் பயிற்சி : பொதுவாக இன்றைய தலைமுறையினர் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் ஆர்வமும் கொண்டிருக்கின்றனர். தியானம், யோகா ஆகியவற்றில் முறைப்படி தேர்ச்சி பெற்ற தகுதியானவர்கள் பயிற்சி வகுப்புகள் தொடங்கலாம்.
  4. உடற்பயிற்சிக் கூடங்கள் : உடல் நலம் பேணிக்காப்பதில் நல்ல அறிவுப் படைத்த பெண்கள் ஓரளவுக்கு முதலீடு செய்யவும் முடியும் என்று நினைப்பவர்கள் உடற்பயிற்சிக் கூடங்களை நிறுவலாம். வங்கியில் கடன் பெறுவதும் சாத்தியமே. நல்ல இடத்தைத் தேர்வு செய்தல் மற்றும் அந்த இடத்தை அழகாக வடிவமைத்தல், பயிற்சி கூடங்களைக் குளிரூட்டுதல் போன்றவற்றைச் செய்துவிட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும். பயிற்சிப் பெற்ற ஒன்றிரண்டு திறமையாளர்களைப் பணியில் வைத்திருப்பது அவசியம். தக்க முறையில் விளம்பரப்படுத்தினால் பலரும் ஆர்வத்துடன் இணைந்துகொள்வார்கள்.
  5. தற்காப்புக் கலைகள் : பல்வேறு சீண்டல்களுக்கு ஆளாகும் இளம்பெண்கள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள சில தற்காப்புப் பயிற்சிகளைப் பெறுவது இன்று கட்டாயமாகிவிட்டது. அனுபவம் வாய்ந்தவர்கள் இவர்களுக்கு வகுப்புகள் எடுக்கலாம். பள்ளி மைதானங்கள், மாநகராட்சிக் கூடங்கள் போன்றவற்றை குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு வாடகைக்கு எடுத்து பயிற்சி அளிக்கலாம்.
  6. தனிவகைத் திறமைகள்: ஒரு சிலருக்கு காய்கனிகளை வைத்து அலங்காரம் செய்வதிலும் மற்றும் காய்கனிகளைச் செதுக்கி பலவகை உருவங்களை ஏற்படுத்துவதிலும் ஆர்வம் இருக்கும். இவர்களும் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம். அதே போல், தோட்டக்கலை தொடர்பான அறிவியல்பூர்வமான அறிவு படைத்தவரும், துறை சார்ந்த தகவல்களை அறிந்து வைத்திருப்பவரும், தோட்டம் அமைப்பதில் வகுப்புகள் நடத்தலாம். தோட்டங்களை நிர்வகிப்பதில் ஆலோசகர்களாகச் செயல்படலாம்.  சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு அதிகமாகிவரும் நிலையில் நிச்சயம் உங்களுக்கு இத்துறையில் நல்ல வாய்ப்புகள் உருவாகும்.
  7. சமையல் கலை  : பேக்கரி, மைக்ரோவேவ் சமையலில்  அனுபவம் வாய்த்தவர்கள் பயிற்சி வகுப்புகள் எடுத்தால் இன்றைய சூழலில் நல்ல வரவேற்பு இருக்கும். பெருநகரங்களில் மட்டுமல்லாது கிராமப்புறங்களில்கூட இத்தகைய பயிற்சி வகுப்புகளுக்கு நல்ல தேவை உள்ளது. ஒரே பகுதியைச் சேர்ந்த இருவரோ அல்லது மூவரோ ஒன்று சேர்ந்து, இத்தகைய பயிற்சி மையங்களில் முறையாகப் பயிற்சி பெற்று cakes, pasteries உள்ளிட்ட பலவகையான பண்டங்களைச் செய்வதிலும் ஈடுபடலாம்.
  8. அலங்காரம் : இண்டீரியர் டெகரேடிங் எனப்படும் வீட்டு அலங்கார கலையில் தேர்ச்சிப் பெற்றவர்களும் பல நூதனமான கலைத்திறனைப் படைத்தவர்களும் தங்கள் திறமையை அறிவுபூர்வமாக செலுத்தி சிறு தொழில் முயற்சியில் ஈடுபடலாம்.
  9. நடன வகுப்புகள் : இசை தொடர்பான பயிற்சிகளைப் போல் இன்று பலவித நடன வகைகளைக் கற்றுக் கொள்வதிலும் பெரும்பாலான இளைய சமுதாயத்தினர் ஆர்வமாக உள்ளனர். பலவித தொலைக்காட்சி ஊடகங்களும் இதற்கென வித்தியாசமானப் போட்டிகளை நடத்தி வருகின்றன. பரதம், ஒடிஸி போன்ற பாரம்பரிய நடன வகுப்புகள் தவிர, மேற்கத்திய பாணியில் பல புதிய நடன பயிற்சிகளுக்கும் பலரிடம் ஆர்வம் பெருகியுள்ளது.
சில பொதுவான விஷயங்கள். மேற்கூறிய பயிற்சி வகுப்புகளை வீட்டிலேயே நடத்துவது ஏற்றதல்ல. வீட்டுக்கு அருகில் ஏதேனும் ஓரிடத்தை அடையாளம் கண்டு அங்குதான் வகுப்புகள் நடத்தவேண்டும். ஒருவேளை வீட்டிலேயே நடத்துவது என்று முடிவு செய்துவிட்டால், அதற்கென தனி அறையை ஒதுக்கவேண்டும்.
பயிற்சிக்கான நேரம், கட்டண விவரம், வயது வரம்பு, பயிற்சித் திட்டங்கள் போன்றவை மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். நம் வீட்டில் நடக்கும் வகுப்புதானே என்ற அலட்சியப் போக்கு கூடவே கூடாது. அதே போல் எந்தக் கலையாக இருந்தாலும், சொல்லிக் கொடுக்கும் நபர்கள் தங்களை முழுமையாக தயார்படுத்திக் கொண்ட பின்னரே, அதை சுயத்தொழிலாக செய்ய முன்வர வேண்டும். அவ்வப்போது முன்னறிவிப்பின்றி பயிற்சி வகுப்புகளுக்கு விடுமுறை அளித்தல் மற்றும் பயிற்சசி கொடுக்கும்போது கைபேசியில் பேசி கொண்டிருத்தல், வீட்டுக்கு வருபவர்களிடம் அரட்டை அடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது சரியல்ல.
பயிற்சி வகுப்புகள் நடக்குமிடங்கள், கற்க வருபவற்கு பாதுகாப்பான உணர்வைக் கொடுக்க வேண்டும். அவர்கள் தங்களிடம் படித்த மாணவர்களை அவ்வப்போது ஊக்குவித்து பல்வேறு போட்டிகளில் பங்குபெறும்படிச் செய்ய வேண்டும். திறமையாகவும் பொறுமையாகவும் அக்கறையுடனும் வகுப்புகள் எடுத்தால் கற்கும் மாணவர்கள் மூலமே மேலும் பலர் வந்து இணைந்துகொள்வார்கள். மிக எளிதாக உங்கள் தொழில் முயற்சி பிரபலமடைந்துவிடும். சிறிது காலத்துக்குப் பிறகு தங்களிடம் கற்ற மாணவர்களையே பயிற்சியாளர்களாக நியமித்து தொழிலை மேலும் விரிவுபடுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக