வியாழன், 15 நவம்பர், 2012

விஞ்சி நிற்கும் அடிமை தா.பா.வா? ஓ.பா.வா?

ம்மா விசுவாசத்தில் விஞ்சி நிற்பவர் தா.பா.-வா ஓ.ப.-வா?” என்று  பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு  ஜெயலலிதாவின்  அடிமையாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறார் வலது  கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன்.
தனது 80-வது பிறந்தநாளையொட்டி, வீட்டுக்‘கே’ வந்து வாழ்த்து  தெரிவித்த ஜெயலலிதாவின் மனிதப்பண்பு, தமிழர் பண்பாடு மற்றும்  இன்னபிற பண்பு நலன்கள் குறித்து அவர் வெளிப்படுத்தியிருக்கும்  புல்லரிப்பைக் காணும்போது, அது எத்தனை சொரிந்தாலும் அடங்காத  அரிப்பு என்று புரிகிறது. சில மாதங்களுக்கு முன் மகளின் திருமணத்துக்கு  வருவார் வருவாரென்று அம்மாவுக்காக மண்டப வாசலிலேயே தா.பா.  காத்திருந்த கதையை நினைவுபடுத்தி தா.பா. வைக் கேலி செதிருக்கிறது  விகடன் இதழ்.
இதற்கெல்லாம் கூச்சப்படுபவரல்ல தா.பா. அவரைக் கேட்டால், அது  போன மாசம்” என்பார்.
பார்ப்பன ஊடகங்களாலேயே நியாயப்படுத்த முடியாத, சட்டசபைக் கட்டிட  விவகாரம், செம்மொழி நூலகம், அண்ணா நூலகம், சமச்சீர் கல்வி  விவகாரம் ஆகியவை தொடர்பான ஜெ-வின் வக்கிரங்களை தா.பா.  நியாயப்படுத்துகிறார். நூறு கருணாநிதி வந்தாலும் ஒரு  ஜெயலலிதாவுக்கு சமமாக முடியாது” என்று கூவுகிறார். சோரம் போவதில் பாண்டியனுக்கு அடுத்த இடத்தை வைகோவும் பிடிக்க சான்ஸ் இருக்குலே 

அம்மா அறிமுகப் படுத்தியிருக்கும் டிலைட் பார் உள்ளிட்ட டாஸ்மாக்  வளர்ச்சித்திட்டங்களை விமரிசித்தால், இங்கே மதுவைத் தடை  செய்தால் வேறு மாநிலத்தில் போ குடிப்பார்கள்” என்று சாக்கனாக்  கடையை ஏலமெடுத்தவர் போல நியாயப்படுத்துகிறார்.
ஜெ ஆட்சிக்கு வந்தவுடன் அறிவித்த மின்சாரம், பால், பேருந்து கட்டண  உயர்வு நடவடிக்கைகள் மூர்க்கத்தனமான தனியார்மயத் தாக்குதல்கள்  என்று உலகத்துக்கே தெரிந்திருந்த போதிலும், இது கருணாநிதி வாங்கி  வைத்திருக்கும் கடனுக்கான வரி” என்று ஜெயலலிதாவின்  பித்தலாட்டத்துக்கு பொழிப்புரை போடுகிறார்.
போலீசின் கொட்டடிக் கொலைகள், துப்பாக்கிச் சூடுகள், போலீசே நடத்தும்  கொள்ளைகள், பெருகி வரும் கொலை-கொள்ளைகள், கிரிமினல்  குற்றங்கள், எங்கெங்கு நோக்கினும் கோடிக்கணக்கில் நடக்கும்  மோசடிகள், மந்திரிசபை மாற்றம், மின்வெட்டு உள்ளிட்ட நிர்வாக  சீர்குலைவுகள் ஆகியவை குறித்து நாடே காறித்துப்பிக் கொண்டிருக்கும்  போதும், நீங்கள் ஏன் போராடவில்லை என்று கேட்டால், ஜெ ஆட்சியில்  எனக்கு குறையொன்றும் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால்  சொல்லுங்கள்” என்று நிருபரை எதிர்க் கேள்வி கேட்கிறார்.
ஒரு மாநிலங்களவை சீட்டுக்காக ஜெயலலிதாவுக்கு இவ்வளவு  வக்காலத்து வாங்க வேண்டுமா?” என்று பொறுக்க முடியாமல் விகடன்  நிருபர் கேட்க, அப்போதும் தா.பா.வுக்கு ரோசம் வரவில்லை. இந்தக்  கேள்விக்கு நான் ஏதாவது பதில் கூறி முதல்வரின் கோபத்துக்கு ஆளாக  வேண்டும்… அதுதானே உங்கள் விருப்பம்?” என்று நிருபரிடம்  வெடித்திருக்கிறார்.
‘சிரிப்பு போலீசு’ வடிவேலுவைப்போல, தா.பாண்டியனை ஒரு ‘சிரிப்பு  கம்யூனிஸ்டு’ என்று சொல்லலாம். அதற்காக குண்டு கல்யாணம்,  எஸ்.எஸ்.சந்திரன் ரகத்திலும் தா.பா.வை சேர்த்துவிட முடியாது.
கிரானைட்  திருட்டு, கொலை உள்ளிட்ட டஜன் கணக்கிலான  குற்றங்களுக்காக குடும்பத்தோடு உள்ளே இருக்கும் வலது கம்யூனிஸ்டு  எம்.எல்.ஏ, தளி ராமச்சந்திரனை விடுதலை செயக்கோரி அவர்தான்  இயக்கம் நடத்துகிறார். கூடங்குளம் அணு உலை வேண்டாமென்றால்,  அப்பகுதி மக்கள் ஊரைக் காலி செது கொண்டு வேறு இடத்துக்குப்  போகட்டும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமியைப் போலப்  பேசுகிறார். உங்கள் கட்சியிலேயே நல்லகண்ணு அணு உலையை  எதிர்க்கிறாரே” என்று கேட்டால், ஒவ்வொருவருக்கும் ஒரு நிலைப்பாடு  இருக்கும்” எகத்தாளமாக பதில் சொல்கிறார். போராடினால் மின்சாரம்  வந்து விடுமா” என்று மின்வெட்டுக்கு எதிராகப் போராடும் மக்களை  நக்கலடிக்கிறார். தா.பா.வின் முந்தைய பேச்சுகளில் வெளிப்படுவது  அடிமைத்தனம் என்றால், இந்த பதில்கள் அனைத்திலும் ஒரு  பாசிஸ்டுக்குரிய திமிர் ததும்புகிறது.
தெலுங்கு சினிமா வில்லனைப் போல ஒருபுறம் பார்த்தால் காமெடி பீசு;  மறுபுறம் பாசிஸ்டு.
தா.பா.வின் கட்சியை கம்யூனிஸ்டு கட்சி என்று ஊர்ல இன்னமுமா  நம்புறாங்க?” என்று வாசகர்கள் கேட்கலாம். என்ன செய்வது,  இருக்கிறார்களே! அப்படி நம்பிக்கொண்டிருப்பவர்கள், தா.பா.வின்  பேச்சுகளையும் நடவடிக்கைகளையும் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர்.  ஆனால் அக்கட்சியில் உள்ள ரொம்ப நல்லவர்கள்கூட,  அதிர்ச்சியடையவில்லை. கொஞ்சம் சங்கடப்படுகிறார்கள்.
ஜெ.வுக்கு காவடி எடுப்பது பற்றி அவர்களுக்கு ஆட்சேபமில்லை. அதை  நாசூக்காகச் செயாமல், அரோகரா என்று சத்தம் போட்டு, கட்சியின்  டவுசரைக் கழட்டுவதுதான் அவர்களை நெளியச் செகிறது. தா.பா.வின்  குருநாதர் கல்யாணசுந்தரம்தான் எம்.ஜி.ஆருக்கு கட்சி வைத்து, கொள்கை  எழுதி, தொழில் கத்துக் கொடுத்தவர்.
அவரும் தா.பா.வும் வலது கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து தாவி,  இந்திராவின் நேரடி எடுபிடியான யு.சி.பி.ஐ. என்ற கட்சிக்குப் போனவர்கள்.  தா.பா. ராஜீவின் அல்லக்கையாக இருந்தவர். எங்கிருந்தாலும்,  ஜெயலலிதாவுடைய ஐந்தாம்படையின் சிப்பாயாக செயல்படுபவர்.  இதெல்லாம் தெரிந்துதான், அவர் மாநிலச் செயலராக்கப்பட்டார்.
தளி இராமச்சந்திரனின் கிரிமினல் நடவடிக்கைகளோ, அவருக்கும்  தா.பா.வுக்கும் இடையிலான விசேடத் தோழமையோ, ராமச்சந்திரனுக்கு  எம்.எல்.ஏ சீட் விற்பனை செயப்பட்ட கதையோ, சசிகலா  வகையறாக்களுடனான அவரது பாசப்பிணைப்போ உலகம் அறியாத  ரகசியங்களல்ல.
இருந்த போதிலும், தா.பா.-தளி வகையாறாக்களின் நடவடிக்கைகளால்  ‘அதிருப்தியுற்ற’ தருமபுரி மாவட்ட வலது கம்யூனிஸ்டு கட்சியினர்   ராமகிருஷ்ணன் முன்னிலையில் மார்க்சிஸ்டு கட்சியில்  இணைந்திருக்கிறார்கள் என்பதுதான் நகைச்சுவை.
தா.பா. வேலையில் தனிப்பெருமை பெற்றது மார்க்சிஸ்டு கட்சி. இந்திரா  வீட்டு சமையலறைக்கே செல்லுமளவு நான் அம்மாவுக்கு நெருக்கம்  என்று மேடையிலேயே பெருமை பேசியவர் பி.ராமமூர்த்தி.  டி.கே.ரங்கராஜனோ போயஸ் தோட்டத்தின் பூசையறைக்கு  செல்லுமளவுக்கு நெருக்கம். சி.ஐ.டி.யு. சவுந்தரராசனுக்கு போயஸ்  தோட்டத்து கூர்க்காவுக்கு பக்கத்து சீட்டு என்பதை அவரது சட்டமன்ற  உரைகளிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.
எனவே, தா.பா. வை எதிர்த்து, தா.பா.க்களின் கட்சிக்கு அவர்கள்  போயிருக்கிறார்கள் என்றுதான் சோல்லவேண்டும். போலி கம்யூனிஸ்டு  கட்சிகள் சந்தி சிரித்துப் போனாலும், நாலு முழம் வேட்டியுடன் நடமாடும்  சில ‘மூத்த’ தோழர்களை, பிராண்டு இமேஜுக்காக ஒரு முகமூடி போலப்  பராமரித்து வருகிறார்கள். ‘பெரியவர் நல்லகண்ணு’ அப்படி ஒரு  முகமூடி. அத்தகைய முகமூடிகளை சுமந்து திரிய வேண்டியதில்லை  என்பதே தா.பா. முன்மொழியும் கொள்கை.
அரசியலிலும் சரி, வாழ்க்கையிலும் சரி எல்லா வகையான சீரழிவுகளும்  சில ‘முன்னோடி’களால் முன்மொழியப்பட்டு, பின்னர் அவை சகஜமான  விசயமாக மாறுகின்றன. பாலியல் வக்கிரங்களையும், விரசங்களையும்  இயல்பான பண்பாடாக சித்தரித்து, புதிய ‘டிரெண்டு’ களை  உருவாக்குகின்ற, கோடம்பாக்கத்தின் துணிச்சலான இயக்குநர்களைப்  போல, தா.பா.வும் ஒரு ‘துணிச்சல்’ பேர்வழி.
மாண்புமிகு இதயதெவம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒரு  அடிமைகள் படையையே வைத்திருக்கிறார். அந்த அடிமைகளுக்குப்  பேசத்தெரியாது. அம்மா பேசத்தெரிந்தவர்களை அடிமைகளாக  வைத்துக்கொள்வதும் இல்லை.
அம்மாவின் செருப்பை வைத்து ஆண்ட பரதனாக இருந்த போதிலும்,  தனது அடிமைத்தனத்தை நிரூபிக்க மேலும் சில அங்குலங்கள்  கஷ்டப்பட்டு வளைவது மட்டுமே பன்னீருக்கு தெரியும். வார்த்தைகளால்  ‘ங‘ ப்போல் வளைந்து அம்மாவுக்கு சலாம் போடும் வித்தையில் தா.பா.  வை ஒருபோதும் அவரால் வெல்ல முடியாது.
ஓ.ப. வை விஞ்சி நிற்பவர், தா.பா. தான் என்று தைரியமாகத்  தீர்ப்பளிக்கலாம். டி.கே.ரங்கராஜனையும், சவுந்தரராசனையும் பட்டியலில்  சேர்த்து, விஞ்சி நிற்பவர் யாரென்று தீர்ப்பளிக்கச் சோன்னால், நம்மால்  முடியாது. சுப்ரீம் கோர்ட்டுக்குத்தான் போகவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக