சனி, 3 நவம்பர், 2012

பிரதமர்: சமூக, பொருளாதார சாதனைகள் படைத்திருக்கிறோம்

நாம் மிகுந்த மன வலிமையுடனும், கடமை உணர்வுடனும் பணியாற்றுகிறபோது, இந்த நாடு அடைய வேண்டிய இலக்குகளை அடைய முடியும். என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் கடந்த 28 ஆம் தேதி பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது.  இந்த மாற்றத்துக்கு பின்னர் முதன்முதலாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியபோது கூறியதாவது:


மத்தியில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி 9 ஆவது ஆண்டாக நடை போட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் சமூக, பொருளாதார கொள்கை வகுத்தல் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு சாதனைகள் படைத்திருக்கிறோம் என்பதை எண்ணி அமைச்சரவை பெருமை கொள்ளலாம்.

நமது வெற்றியில் நியாயப்படுத்தக்கூடிய அளவில் நாம் பெருமை கொள்கிறபோது, உலகளவில் கடினமான பொருளாதார நெருக்கடிகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம் என்பதையும் அங்கீகரிக்க வேண்டியது முக்கியம் ஆகும். உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக வளர்ச்சிவீதம் இறங்குமுகம் கண்டுள்ளது. ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது. நமது நிதி பற்றாக்குறை பெருகியுள்ளது. குறிப்பாக நமது நிதிப்பற்றாக்குறை அதிகரித்து வருவது கவலைக்குரிய ஒன்றாக அமைந்துள்ளது. ஏனெனில் நிதிப்பற்றாக்குறையானது, உள்நாடு மற்றும் அன்னிய முதலீடுகளுக்கு அச்சமூட்டும் அம்சமாக இருக்கிறது. இந்தப் பிரச்சினைகள் நமது பொருளாதாரத்தையும், பல்வேறு துறைகளின் பணிகளையும் பலவீனப்படுத்தி விடும்.

நம் முன்னே உள்ள சவால்களை சந்தித்து அதற்கு பன்மடங்கான தீர்வுகளை அடையவேண்டிய அவசியம் எழுந்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், ஒவ்வொருவருக்கும் ஆதார் அடையாள எண் வழங்கும் திட்டம், கிராமப்புற சுகாதார திட்டம், ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டம், ஆற்றல் மேம்பாட்டு திட்டம், தகவல் அறியும் உரிமைச்சட்டம், கல்வி உரிமைச்சட்டம் ஆகியவை அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறிப்பிடத்தக்க திட்டங்கள் ஆகும். இந்தத்திட்டங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நாம் அடைய வேண்டும் என்பதற்காக அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பணிகளில் உருவானவை ஆகும்.

அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்த நாடு தாக்குப்பிடிக்கத்தக்க, ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியை கண்டிருக்கிறது. இதன்காரணமாக சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, விவசாயம், கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய சமூக துறைகளில் நாம் நல்ல பல திட்டங்களை செயல்படுத்த முடிந்திருக்கிறது.நமது செயல்திட்டத்தில் அதிகபட்ச கவனம் செலுத்த தேவையான ஒன்று என்றால் அது அரசின் பல்வேறு மட்டங்களிலான உள்கட்டமைப்பு வளர்ச்சிதான்.

உள்கட்டுமானத்துறைகளில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் (ஒரு டிரில்லியன் என்பது பதினாயிரங்கோடி ஆகும்.) என்ற முதலீட்டு இலக்கை நாம் அடைவதற்கு பல தடைகளைக் கடந்து செல்ல வேண்டி உள்ளது. எரிபொருள் வினியோக ஏற்பாடுகள், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஒப்புதல்கள்,  நிதி போன்றவை 12 ஆவது அய்ந்தாண்டு திட்ட உள்கட்டமைப்பு இலக்கினை அடைவதில் தடைகளாக உள்ளன. இந்தப் பிரச்சினைகளில் நாம் ஒரு பொதுவான புரிந்துகொள்ளுதலுக்கு வரவேண்டியதும், வழிமுறைகளை உருவாக்குவதும், பிரச்சினைகளுக்கு உரிய பரிகாரம் காண்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். இதுதான் மோசமான பற்றாக்குறைகளை நாம் முன்னுரிமை அடிப்படையில் சமாளிப்பதற்கு உதவும்.

நாம் மிகுந்த மனவலிமையுடனும், கடமை உணர்வுடனும் பணியாற்றுகிறபோது, இந்த நாடு அடைய வேண்டிய இலக்குகளை அடைய முடியும். நமது அரசாங்கம் அரசியல் பிரச்சினைகளுக்கு மத்தியில் பணியாற்றிக்கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இந்த தேசத்தை நிர்மாணிப்பதில் நம் அனைவருக்கும் ஈடுபாடு உண்டு என்ற உண்மைப் பார்வையை நாம் இழந்து விடக்கூடாது. நமது பொறுப்புணர்வு, கடமை உணர்வு எல்லையற்றதாக இருக்க வேண்டும்.

இந்த தருணத்தில், நிறைவேற்றப்படாத இலக்குகளை அடைவதில் மிகச்சிறந்த முயற்சிகளை ஒவ்வொருவரும் எடுப்பீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. மத்திய அமைச்சரவையில் எண்ணற்ற ஆற்றல் வாய்ந்த, இளம் அமைச்சர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இளைய அமைச்சர்களுக்கு மூத்த அமைச்சர்கள் பொறுப்புக்களை பிரித்து அளியுங்கள். எனது மூத்த அமைச்சர்கள், தங்களது இணை அமைச்சர்களுக்கு அவர்களது அறிவாற்றலையும், செயல்திறனையும் முழுமையாகப் பயன்படுத்த தக்க வகையில், தனிச்சிறப்பான பொறுப்புகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

- இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக