செவ்வாய், 6 நவம்பர், 2012

நீயா நானா? சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு

அண்ணாச்சி கடைகள் அழிஞ்சி போயிரும்… நீயா நானாவில் அஞ்சிய வியாபாரிகள்!

படிக்கலைன்னாலும் பத்தாயிரும் ரூபா இருந்தா போதும் பொட்டிக்கடை வச்சுப் பொழைச்சுக்குவேன். ஆனா வெளிநாட்டுக்காரனை உள்ள விட்டா எங்களை மாதிரி ஆளுங்களுக்கு பொழைப்பு போயிரும்....
இது விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறு வியாபாரிகளின் அச்சம். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துவிட்டது. இதற்கு கூட்டணி கட்சிகள் கூட எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அதைப்பற்றிய புரிதல் நிறைய பேருக்கு இல்லை என்பதே உண்மை.
பக்கத்து கடைகளில் அரிசியும், பருப்பும் வாங்கியவர்கள் இன்றைக்கு மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் பர்ச்சேஸ் செய்வதை பெருமையாக கருதுகின்றனர். என்னதால் பெரிய கடைகள் வந்தாலும் சிறு சிறு மளிகைக்கடைகள் இன்றைக்கு இருக்கத்தான் செய்கின்றன.

ஆனால் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் போது இந்தியா முழுவதும் உள்ள 7 கோடி சில்லறை வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது எப்.டி.ஐ யை எதிர்ப்பவர்களின் அச்சம். வால்மார்ட் போன்ற கம்பெனிகளின் பணபலம். சிறுவியாபாரிகளை நசிவுக்கு உள்ளாக்கிவிடும் என்றும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.
பெரிய நிறுவனங்கள் மொத்தமாக வாங்கிவிடுவார்கள். அதனால் சிறுவியாபாரிகள் உற்பத்தியாளர்களிடம், விவசாயிகளிடம் இருந்து வாங்க முடியாது. ஒரு கட்டத்திற்கு மேல் அதிக விலை வைத்து விற்பார்கள் என்பதும் அவர்களின் அச்சம்.
அதே சமயம் அந்நிய நேரடி முதலீட்டை ஆதரிப்பவர்கள், சிறுவணிகம் கொடுக்கக் கூடிய பொருள் தரமற்றவை என்றனர். தரமான பொருள் கொடுப்பவர்களிடம் வாங்குவது என்ன தவறு என்று கேட்ட அவர்கள் எனக்கு பிடித்த பொருளை நானே நேரடியாக பார்த்து வாங்குவதில் ஒரு தனி சுகம் இருக்கிறது என்றனர்.
சிறு உற்பத்தியாளர்களுக்கும் ஏழை மக்களுக்கும் சிறு வியாபாரிகள் உறவுப் பாலமாக இருக்கின்றனர் என்பது எப்டிஐ எதிர்ப்பாளர்களின் கருத்து. பிராண்ட் உள்ள பொருட்களைத்தான் இன்றைக்கு மக்கள் வாங்குகின்றனர். இதற்கு ஈடு கொடுக்க முடியாமல் சாதாரண உற்பத்தியாளர்களின் பொருள் அழிந்து போய்விடும் என்பது சிறு வியாபாரிகளின் அச்சம்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக இளங்கோ கல்லானை, வணிகர் சங்கத்தலைவர் வெள்ளையன், திட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஸ்ரீனிவாசன், சமூக ஆர்வலர் ராஜகோபாலன், நிதி ஆலோசகர் நாகப்பன் ஆகியோர் பங்கேற்று சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்த தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர். திட்டக்கமிஷன்துறை முன்னாள் உறுப்பினர் ஸ்ரீனிவாசனும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது சிறு வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றுதான் கூறினார்.
அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஆதரவாக பேசிய சிலர் சிறு வியாபாரிகளை வட்டிக்கடை என்று கூறினர், முறைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது என்றும் குற்றம் சாட்டினர். ஆனால் பெரிய கடைகளில் காலாவதியாக சரக்குகளை பாலீசாக விற்கின்றனர், கிரெடிட் கார்டு என்ற மிகப்பெரிய கந்து வட்டி இருக்கிறது என்பதை உணரத்தவறிவிட்டனர் என்றே கூறலாம்.
இந்தியாவின் மிக முக்கிய பிரச்சினையான எப்டிஐ பற்றி பேச நீயா? நானா? மட்டுமே சரியான தளம் என்று நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத் கூறினார். மேலும் ஆங்கிலச் சேனல்களில் மட்டுமே இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த முடியும், விவாதிக்க முடியும் என்ற கருத்து இருந்தது. அதை உடைத்து நீயா நானாவில் இதுபோன்ற அறிவு சார்ந்த விவாதம் நடத்தப்பட்டுள்ளது என்றும் பெருமைப் பட்டுக்கொண்டார் கோபிநாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக