சனி, 10 நவம்பர், 2012

தருமபுரி: தலித் மக்களை சூறையாடிய வன்னிய சாதிவெறி!


வன்னியப் பெண் – தலித் ஆண் காதலர்கள் திருமணம் செய்ததால் தருமபுரி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தலித்துக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டன – விரிவான நேரடி ரிப்போர்ட்!
“வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்கிறேன்” – கடந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க விழாவில் அப்பட்டமான சாதிவெறியைத் தூண்டும் வகையில் பேசிய வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் பேச்சு இப்போது செயல் வடிவம் பெற்று வருகிறது. வன்னிய சாதிவெறியின் கோரத் தாண்டவத்துக்கு தருமபுரி மாவட்டம் நாய்க்கன் கொட்டாய் பகுதியை அடுத்த நத்தம் காலனி, கொண்டாம்பட்டி மற்றும் அண்ணா நகரைச் சேர்ந்த சுமார் 300 ஆதிதிராவிடர் வீடுகள் பற்றியெறிந்து சாம்பலாகியுள்ளது.
நாய்க்கன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் திவ்யாவுக்கும் நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோவின் மகன் இளவரசனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. நாகராஜன் வன்னிய சாதியைச் சேர்ந்தவர். இளங்கோ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். நாய்க்கன் கொட்டாய் பகுதியே வன்னிய சாதியினர் பெரும்பான்மையாக உள்ள பகுதி என்பதாலும் அதிலும் சமீப ஆண்டுகளாய் இவர்களிடையே சாதிவெறி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாலும் தாங்கள் பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ முடியாது என்று திவ்யாவும் இளவரசனும் அஞ்சினார்கள்.
கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி இவர்கள்வீட்டை விட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் நடந்த உடனேயே வன்னியர்கள் தரப்பிலிருந்து மிரட்டல்களைச் சந்திக்கத் துவங்கிய புதுமணத் தம்பதிகள், தங்கள் பாதுகாப்புக்கு காவல் துறையை நாடினார்கள்.
தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு சேலம் சரக டி.ஐ.ஜி சஞ்சய் குமாரையும் தர்மபுரி எஸ்.பி அஸ்ரா கர்க்கையும் சந்தித்து முறையிடுகிறார்கள்.
இதற்கிடையே திவ்யாவைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கோரி வன்னியர்கள் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக நத்தம் காலனி மக்களுக்கும் இளவரசனின் உறவினர்களுக்கும் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. நவம்பர் 5ம் தேதி திவ்யாவின் பெற்றோர் தங்கள் சாதியைச் சேர்ந்த சுமார் 500 பேர்களுடன் நத்தம் காலனிக்கு வெளியே திரண்டு பஞ்சாயத்து பேச வருமாறு இளங்கோவின் உறவினர்களை அழைத்துள்ளனர். இந்த கூட்டத்திற்கு நத்தம் காலனியில் இருந்து சுமார் பத்து பேர் சென்றுள்ளனர்.

வன்னியர்கள் தரப்பிலிருந்து வந்திருந்த 500 பேர்களுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றியப் பொருளாளர் மதியழகன் தலைமை தாங்கி வந்துள்ளார். நத்தம் காலனியில் இருந்து வந்தவர்களை நேரடியாக மிரட்டும் மதியழகன், “நாம பார்த்து வைப்பது தான் சட்டம். மரியாதையாக பெண்ணை ஒப்படைத்து விடுங்கள்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். பெண்ணை ஒப்படைப்பதற்கு நவம்பர் 7ம் தேதி வரை கெடு விதிக்கிறார். உரிய கெடுவுக்குள் பெண்ணை ஒப்படைக்காவிட்டால் என்னவேண்டுமானாலும் நடக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.
சாதிவெறி தலைக்கேறிய நிலையில் மிக அதிகளவில் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து அஞ்சிய நத்தம் காலனியைச் சேர்ந்தவர்கள், அந்த நேரத்தில் உடனடியாக தப்பிக்க எண்ணி அதற்கு ஒப்புக் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பான கட்டைப் பஞ்சாயத்து கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்திலும் நடந்துள்ளது. அங்கே தொடர்ந்து சென்று வந்த திவ்யாவின் தந்தை நாகராஜனை அங்கேயிருந்த வன்னிய சாதியைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர், “பெண்ணை கீழ்சாதிக்காரனோடு அனுப்பி வைத்த பொட்டைப் பயல்” என்பது போல கேலி பேசி வெறியேற்றியிருக்கிறார்.
நவம்பர் 5ம் தேதி பா.ம.க மதியழகன் முன்னிலையில் நடந்த கட்டைப்பஞ்சாயத்தில் பெண்ணை ஒப்புவிப்பதாக நத்தம் காலனியைச் சேர்ந்த ஒருசாரார் ஏற்றுக் கொண்டு வந்திருந்தாலும், ஊருக்குத் திரும்பியதும் மற்றவர்கள் வேறு விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். திருமணம் முடிந்து சுமார் 20 நாட்களுக்கும் மேலாக திவ்யா இளவரசனுடன் வாழ்ந்துள்ளார். இந்த நிலையில் வலுக்கட்டாயமாக பெண்ணைத் திருப்பி அனுப்பினால், அங்கே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அஞ்சிய இளவரசனின் உறவினர்கள், நவம்பர் 7ம் தேதியன்று அவரை ஒப்படைக்க மறுத்துள்ளனர்.
பெண் திரும்பி வராத நிலையில் நாகராஜனின் உறவினர்களும் அவரைக் கேலி பேசி வெறுப்பேற்றிய நிலையில்  அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இதிலும் அவர் விஷம் அருந்தினார் என்றும் அவரது நெருங்கிய உறவினர்களே அவருக்கு விஷத்தைப் புகட்டினர் என்றும் இருவேறு விதமாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த ஊரைச் சேர்ந்தவர்களே சொல்கிறார்கள்.
நாகராஜன் இறந்து போன நிலையில், அக்கம் பக்கம் ஊர்களைச் சேர்ந்த வன்னிய சாதியினர் சுமார் 2000 பேர் திரட்டப்படுகிறார்கள். நாகராஜனின் சடலைத்தை எடுத்துக் கொண்டு செல்லங்கொட்டாயிலிருந்து நத்தம் காலனி வழியே தருமபுரி – திருப்பத்தூர் நெடுஞ்சாலைக்கு ஊர்வலமாய்க் கிளம்புகிறார்கள். வரும் வழியிலேயே மூன்று குழுக்களாய் பிரிந்து கொள்ளும் இந்த கும்பல், நத்தம் காலனி, அண்ணா நகர் மற்றும் கொண்டம்பட்டி கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறார்கள். இம்மூன்று பகுதிகளும் ஆதிதிராவிடர்கள் அடர்த்தியாய் வாழும் பகுதிகள்.
கையில் கிடைத்த கடப்பாரை, கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டைகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளுடன் கிளம்பிய இந்த கும்பல், கண்ணில் பட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கிறது. அந்த சமயத்தில் நத்தம் காலனியைச் சேர்ந்த ஆண்கள் கூலி வேலைகளுக்காக வெளியூர் சென்றிருந்தனர். சுமார் 40 பெண்களும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுமே காலனியில் இருந்துள்ளனர்.
கொலைவெறியில் உள்ளே நுழையும் கும்பலைக் கண்டதும் சிதறி ஓடும் பெண்கள் ஊருக்கு வெளியேயும் வயல்களுக்குள்ளும் புகுந்து மறைந்து கொள்கிறார்கள். பெயின்ட் அடிக்கப் பயன்படும் கருவியில் (Painting Gun) பெட்ரோலை  நிரப்பி எடுத்து வந்த கும்பல் அதை குடிசைகளின் மேலும் வீடுகளின் மேலும் பீய்ச்சி அடித்தும் பெட்ரோல் குண்டுகளை எரிந்தும் வீடுகளைக் கொளுத்தியிருக்கிறார்கள்.
நத்தம் காலனியில் மட்டும் சுமார் 150 வீடுகள் எரிந்து சாம்பலாகியிருக்கிறது. சுமார் 60 இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு ஓட்டிப் பிழைத்து வந்த டாடா ஏஸ் வாகனங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா நகரில் சுமார் 50 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளது. இங்கே சுமார் 48 கேஸ் சிலிண்டர்களைத் திருடிச் சென்றுள்ளனர். கொண்டாம்பட்டியில் 90 வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக