செவ்வாய், 13 நவம்பர், 2012

மஞ்சு கிட்னியை ஏன் விற்றாள்?

வினவு
கொச்சிக்கருகிலுள்ள கலமசேரி எச்எம்டி காலனியில் தனது தாயுடன் வசித்து வரும் மஞ்சு (26), தேயிலை கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தாள். அங்கு வேலை பார்த்து வந்த விற்பனை பிரதிநிதி பினு பிரமோத் உடன் அவளுக்கு காதல் ஏற்படுகிறது. வீட்டை விட்டு வெளியேறிய மஞ்சுவும் பினுவும் 2005 இல் திருமணம் செய்து கொள்கின்றனர்.
ஒரு மகனும் பிறந்து விட்ட நிலையில் அவர்களது குடும்பத்தில் பணச்சிக்கல் ஏற்படுகிறது. பினு தனது மனைவி மஞ்சுவின் கிட்னி ஒன்றை தனது நண்பனுக்கு வழங்கி அதன் மூலம் ரூ.10 லட்சம் சம்பாதித்து கடனை அடைக்க திட்டமிடுகிறான். அதற்காக மஞ்சுவுடன் அவன் பேச ஆரம்பித்தவுடன் முதலில் மறுத்த மஞ்சு, இல்லையெனில் அவன் மகனை கொலை செய்து விடுவான் என மிரட்டவே சம்மதிக்கிறாள்.

2009 இல் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. மூன்று நாட்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த மஞ்சு கண் விழிக்கும் போது அவளது கணவனான பினு பணத்துடன் கம்பி நீட்டி விட்டான். திரும்பவும் சகஜ நிலைக்கு வருவது நான் அதற்கு முன்னர் கருதியது போல எளிதாக இருக்கவில்லை; வலி நிரம்பியதாகவே இருந்தது என்கிறாள் மஞ்சு.
2011 வரை கணவனுக்காக காத்திருந்த மஞ்சு போலீசில் தனது கிட்னியை விற்றுவிட்டு கணவன் காணாமல் போனதை புகாராகத் தருகிறாள். தற்போது தாய் வீட்டில் தனமகனுடன் தங்கியிருக்கிறாள். கடந்த வாரம் பினு கிட்னியை விற்க உதவிய மூன்று பேரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். மகனுக்காக தனது கிட்னியை தானம் செய்த  மஞ்சுவின் உடல்நிலை இன்னமும் முன்னேறவில்லை. வேலைக்கு போகவும் சிரமப்படுகிறாள்.
சிறு வேலைகளில் இருக்கும் பினு போன்றவர்கள் உலகமயமாதல் காலகட்டத்தில் பணமுடை, வேலையிழப்பு ஆகியனவற்றுக்கு ஆளாகி கடனாளியாகின்றனர். தம் மீது விழுந்த அடியை வீட்டுப் பெண்கள் மீது சுமத்தி விடும் ஆணாதிக்க சமூகத்திற்கு வக்கிரமான எடுத்துக்காட்டு தான் பினு பிரமோத். மஞ்சு செய்த குற்றம் என்ன? அவள் ஏழையாக பிறந்ததா இல்லை காதலித்து மணம் புரிந்ததா? பெண் என்பதால் குடும்பத்தின் அதிகப்படியான சுமையினை தனியாளாக சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து அநேக பெண்கள் தப்பிக்க இயலாது. இங்கோ சுமையோடு அவளது உடல் உறுப்பும் விற்பனைச் சரக்காக மாறி இருக்கிறது. பெண்களின் காசில் குடித்து விட்டு உதார் காண்பிக்கும் ஆண்களில் பினுவும் ஒருவன். கணவனால் ஏமாற்றப்பட்டு ஏற்கனவே இருந்த வாழ்க்கையையும் இழந்து தாயின் பராமரிப்பில் இருக்கும் மஞ்சுவுக்கு மகன் தான் இப்போதைய ஒரே நம்பிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக