வியாழன், 22 நவம்பர், 2012

திருமாவளவ: ஓட்டுக்காக காதல் திருமணங்களை எதிர்க்கும் ராமதாஸ்

தர்மபுரி: தனது சொந்த அரசியல் நலனுக்காக காதல் திருமணங்களுக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரத்தை செய்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
தர்மபுரியில் நடந்த தலித்களுக்கு எதிரான வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தர்மபுரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர்,
தர்மபுரியில் 3 தலித் கிராமங்களில் நடந்துள்ள வன்முறைகள் காதல் திருமணங்களால் மட்டுமே நடந்தது அல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை. இந்த சம்பவத்தில் திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டதில் மர்மம் நீடிக்கிறது. எனவே நாகராஜ் இறப்பு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.
திருமணமான தம்பதிகளுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தலித்துகளுக்கு எதிராக வன்முறைகள் காவல்துறையின் துணையோடு கட்டவிழ்த்து விடப்படுகிறது. இந்த சம்பவத்தில் 142 பேரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதை சம்பந்தப்பட்ட கிராம மக்களே பாராட்டுகின்றனர். http://tamil.oneindia.in/

ஆனால், வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
பாமக நிறுவனர் ராமதாஸ் காதல் திருமணம் தொடர்பாக பேசி வரும் கருத்துகள் உள்நோக்கம் உடையவை. அவர் அரசியல் ஆதாயத்திற்காக பேசி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அவருடைய கட்சி 6 சதவீத ஓட்டுகள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் உள்ள ஜாதி சங்கங்களை ஒன்றிணைத்து ஜாதிக் கூட்டணி அமைப்பதாக கூறி வருகிறார்.
சட்டசபையில் 3 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதால் தங்களது அங்கீகாரத்தை காப்பாற்றிக் கொள்ளவும் சொந்த நலனுக்காகவும் காதல் திருமண எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வருகிறார். பிற சாதி இந்துக்களிடையே பகையை பெற்று விட கூடாது என்பதற்காக பேசுகிறார்.
காதல் திட்டமிட்டு செய்வதில்லை. அது தானாக வரக்கூடியது. சாதி மறுப்பு திருமணம் தொடர்பாக காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்துதான் அதிக மாக நடக்கிறது. சாதி மறுப்பு திருமணம் மற்றும் காதல் திருமணங்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம்.
மற்ற சமுதாய பெண்களை தலித்கள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய சொல்வதாக கூறுவதை நிரூபித்தால் நான் முச்சந்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக