வியாழன், 1 நவம்பர், 2012

தேவர் குருபூஜைக்கு பைக்கில் சென்று திரும்பியவர்கள் அடித்து கொலை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபரமக்குடியில் 3 பேர் அடித்து கொலை : கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை: பரமக்குடியில் 3 பேர் கொலை மற்றும் மதுரையில் 20 பேர் சென்ற கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்களால் தென்மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் ஆங்காங்கே மறியல் போராட்டம் நடந்தது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட் டம் பார்த்திபனூர் அருகே மேலப்பெருங்கரை கிராமத்தை சேர்ந்த 14 பேர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்துக்கு நேற்று வேனில் சென்றனர். பரமக்குடி அருகே பாம்புவிழுந்தான் கிராமத்தில் சிலர் வேனை மறித்து கற்களால் தாக்கியதில் டி.வேலங்குடி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (30) அந்த இடத்திலேயே இறந்தார். வேனில் சென்ற 14 பேரும் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், குருபூஜைக்கு பைக்கில் சென்று திரும்பியவர்களை பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியில் சிலர் வழிமறித்து தாக்கினர். அதில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அல்லிநகரத்தை சேர்ந்த மலைக்கண்ணன் (23), கீழராங்கியம் வீரமணி (22) இருவரும் கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவம் தொடர்பாக பொன்னையாபுரம் பகுதியை சேர்ந்த 150 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை விரகனூரை அடுத்த புளியங்குளத்தை சேர்ந்த வாலிபர்கள் 20 பேர் தேவர் ஜெயந்திக்கு சென்றுவிட்டு அருப்புக்கோட்டை வழியாக காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். மதுரை சிந்தாமணி ரிங்ரோட்டில் செக்போஸ்ட் அருகே புதருக்குள் மறைந்திருந்த மர்ம கும்பல் ஒன்று, திடீரென கார் மீது அடுத்தடுத்து மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசியது. கார் தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உடல் கருகி காயமடைந்தனர்.

அவர்களில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு உறவினர்கள் திரண்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பரமக்குடி பகுதியில் பதற்றம் நிலவுவதாலும், மேலும் கலவரம் ஏற்படாமல் தடுக்கவும் கூடங்குளம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கலவர தடுப்பு பிரிவு போலீசார் 1,500 பேர் இன்று காலை வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பரமக்குடி நகரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பரமக்குடி பகுதியில் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வானக போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. பரமக்குடியில் கொலையான 3 பேரின் உடல்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

இதையடுத்து அங்கு 500 போலீசார் குவிக்கப்பட்டனர். காரைக்குடி அரசு மருத்துவமனையில் டிஎஸ்பி மங்களேஸ்வரன் தலைமையில் 200 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். காரைக்குடி முழுவதும் பதற்றம் நிலவுவதால் கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டன. மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதற்கிடையே, கொலையானவர்களின் உடல்களை பெற அவர்களது உறவினர்கள் காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை ஊர்வலமாக புறப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர். பரமக்குடி, மதுரை சம்பவத்தை கண்டித்து கமுதி கோட்டைமேடு பகுதியில் இன்று காலை 300க்கும் அதிகமானவர்கள் திரண்டு திடீரென மறியலில் ஈடுபட்டனர். கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அங்கு ஏஎஸ்பி அபினவ் குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அருப்புக்கோட்டை சாயல்குடி சாலையில் பெருநாழி மற்றும் சிவகங்கை மாவட்டம் பூவந்தியிலும் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் பகுதிகளிலும் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தென்மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் தென்மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ், மதுரை போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர், ராமநாதபுரம் டிஜஜி ராமசுப்பிரமணியம் ஆகியோர் அங்கு முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக