சனி, 3 நவம்பர், 2012

7,100 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்தது திமுக ஆட்சிதான்

சென்னை : தமிழகத்திற்கு 7,100 மெகாவாட் மின்சாரம் கிடைக்க திமுக ஆட்சியில்தான் வழி வகை செய்யப்பட்டது என்று ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தற்போதுள்ள மோசமான மின்வெட்டுக்குக் காரணமே முந்தைய திமுக அரசுதான் என்று முதலமைச்சர் ஜெயலலிதா, பேரவையில் சொல்லியிருக்கிறார். திமுக ஆட்சி நடத்தியபோது தற்போது உள்ளதைப் போல 15 மணி நேரம் மின் வெட்டா இருந்ததா என்று கேட்டால் இல்லை, இல்லவே இல்லை.
தற்போது தமிழகத்தில் ஏற்பட்ட மின் பற்றாக்குறைக்கு, ஏற்கனவே இருந்த திமுக அரசுதான் காரணம் என்கிறாரே முதலமைச்சர், அப்படியென்றால் 1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் 1,302 மெகாவாட் மின் நிறுவு திறனும், 2001 முதல் 2006ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் 2,518 மெகாவாட் மின் நிறுவு திறனும் ஏற்படுத்தப்பட்டது என்று சொல்லியிருக்கிறாரே, இதற்கு மட்டும் அவருடைய அந்த ஆட்சிக் காலத்திற்கு முன்பு நடைபெற்ற திமுக ஆட்சி காரணம் இல்லையா?
2001 முதல் 2006 வரை அதிமுக ஆட்சி நடைபெற்ற போது, மின் தட்டுப்பாடே தமிழகத்தில் இல்லை என்று ஜெயலலிதா சொல்கிறாரே, அதற்குக் காரணம் 2001ம் ஆண்டுக்கு முன் நடைபெற்ற திமுக ஆட்சி செயல்பாடுகள் அல்லவா? 

அதிமுக ஆட்சிக் காலத்தில் மின் உற்பத்திக்காக என்னென்ன திட்டங்கள் தொடங்கப்பட்டன என்பது பற்றி  சில திட்டங்களின் பெயர்களைச் சொல்லியிருக்கிறார்.
அவரது ஆட்சியில் வல்லூரில் 1000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை தேசிய மின் கழகத்துடன் இணை ந்து நிறுவிட 12,7,2002ல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம் என்று சொல்லியிருக்கிறார்.

அதற்குப் பிறகு 2006ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி தானே நடைபெற்றது. அந்த 4 ஆண்டுகளில் அந்தத் திட்டத்தை ஏன் தொடங்கவில்லை?  ஜெயலலிதா தனது அறிக்கையில், அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, புதிய மின் திட்டங்களை முழுமையான செயல்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததன் காரணமாக 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டம் மற்றும் 500 மெகாவாட் மின் திறன் கொண்ட வல்லூர் மின் திட்டத்தின் முதல் அலகு டிசம்பர் 2012ல் இருந்தும், 500 மெகாவாட் திறன் கொண்ட வல்லூர் மின் திட்டத்தின் 2ம் அலகு மார்ச் 2013ல் இருந்தும்,

600 மெகாவாட் மின் திறன் கொண்ட வடசென்னை அனல் மின் திட்டத்தின் முதல் அலகு ஏப்ரல் 2013ல் இருந்தும் முழுஉற்பத்தியைத் தொடங்க இருக்கின்றன, இவைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 1,900 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார். இந்த 1,900 மெகாவாட் மின்சாரம் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களிலிருந்து கிடைப் பது தான் என்பதை ஜெயலலிதா தனது பேச்சிலேயே ஒப்புக் கொள்கிறார் என்று தானே பொருள்.

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய மின் திட்ட த்தை திமுக ஆட்சியில் 26,6,2007ல் தொடங்கினோம் என்று நான் எழுதியிருந்தேன். அந்தத் திட்டத்திற்கு ஜெயலலிதா ஆட்சியிலேயே ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டது என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார் ஏற்றுக் கொள்கிறேன். அந்தத் திட்டம் அதிமுக ஆட்சியில் ஒப்புதல் வழங்கப்பட்ட திட்டம் என்பதற்காக, திமுக ஆட்சியில் அதைத் தூக்கிப் போட்டு விட்டோமா? பல்வேறு மின் திட்டங்கள் மூலமாக 2014ம் ஆண்டுக்குள் சுமார் 7000 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதற்கு திமுக அரசு வழி செய்ததாக கருணாநிதி கூறியிருப்பது வெறும் கற்பனை கதை என்று ஜெயலலிதா, பேரவையில் சொல்லியிருக்கிறார். 

13,11,2008 பேரவை நடவடிக்கைக் குறிப்பை எடுத்துப் படித்துப் பார்த்தால் நான் சொன்னது உண்மையா, கற்பனைக் கதையா என்பதைப் புரிந்து கொள்ளலாம். வடசென்னை 1,200 மெகாவாட் மேட்டூர் 600 மெகாவாட் தூத்துக்குடி 1,000 மெகாவாட் உடன்குடி 1,600 மெகாவாட் வல்லூர் 1,200 மெகாவாட் ஜெயங்கொண்டம் 1,500 மெகாவாட். ஆக மொத்தம் இதிலிருந்து 7,100 மெகா வாட் மின்சாரம் கிடைக்க திமுக ஆட்சியில் வழிவகை காணப்பட்டது. நான் சொல்வது கற்பனைக் கதையா? மக்கள் புரிந்து கொள்ளட்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக