வெள்ளி, 9 நவம்பர், 2012

தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்பு போனஸ் கொடுத்தால் எப்படி பொருள் வாங்க முடியும்

தீபாவளிக்கு நான்கு நாட்களே இருக்கும் நிலையில் இப்போது போய் போனஸ் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வளவு தாமதமாக கொடுத்தால் அரசு ஊழியர்கள் எப்படி தீபாவளிக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார்.
இதுகுறித்து கேள்வி பதில் பாணி அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:
கேள்வி: போக்குவரத்துத் துறை, மின்வாரியம் உள்பட பல பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவிகித போனஸ் உடனடியாக வழங்க ஜெயலலிதா உத்தரவு என்று அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்தி வந்துள்ளதே?
பதில்: இந்த தொழிலாளர்களுக்கு 20 சதவிகித போனஸ் என்பது பல ஆண்டுக் காலமாக இருந்து வருகின்றது. இதனை 25 சதவிகிதமாக உயர்த்த வேண்டுமென்றும், தங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டுமென்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
தீபாவளிக்கு நான்கே நாட்கள்தான் இருக்கின்றன. இந்த நான்கு நாட்களில் தொழி லாளர்கள் எப்படி போனஸ் பணத்தைப் பெற்று தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்க இயலும்? http://tamil.oneindia.in/
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் கொடுக்கவேண்டும் என்பது கட்டாயம் என்கிறபோது, அதனை முன் கூட்டியே வழங்கியிருக்கலாம் அல்லவா?
பெண் ஊழியர் மரணம்
பெண் ஊழியரிடம் அமைச்சர் கடிந்திருக்கக் கூடாது
கேள்வி:அமைச்சர் ஒருவர் ஆய்வு செய்தபோது, கோ-ஆப்டெக்சில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிர் விட்டதாக செய்தி வந்திருக்கிறதே?
பதில்: ஊழியர் சங்கத்தலைவர், அமைச்சர் ஆக்ரோஷமாக அந்த பெண் ஊழியரிடம் பேசியதால்தான் விற்பனையாளருக்கு இவ்வாறு நேர்ந்துள்ளது. அமைச்சர் குறை கூற வேண்டுமென்றால் மேல் அதிகாரிகளிடம்தான் தன்னுடைய கருத்தைக்கூற வேண்டுமே தவிர நேரடியாக இப்படி பெண் ஊழியர் களிடம் எல்லாம் கடிந்து கொள்ளக்கூடாது.
அதிகாரிகள் மாற்றம் தேவைதானா
கேள்வி: அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் மாற்றம் என்பது இந்த அளவிற்கு தேவையா?
பதில்: அதிகாரிகள் மாற்றம் என்பது நிர்வாக வசதிக்காக வழக்கமாக நடைபெறுகின்ற ஒன்றுதான். ஆனால் இந்த ஆட்சியில் நிர்வாக வசதி என்பதற்கு மாறாக தங்கள் வசதிக்காக என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும்.
இளைஞர் படையில் அதிமுகவினர் ஆதிக்கம்
கேள்வி: காவல்துறைக்கு துணையாக சிறப்பு காவல் இளைஞர் படை ஒன்றை அமைக்கப்போவதாக முதல்வர் அறிவித்திருக்கிறாரே?
பதில்: காவல் துறையில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை போதவில்லை என்றால் ஏற்கனவே பல ஆண்டு காலமாக நடைமுறையில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக பணியமர்த்தி, அவர்களின் எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ள வேண்டியதுதானே? அரசுக்கு புதிதாக இதுபோல் அதிகம் பேரை தேர்ந்தெடுப்பதென்றால் அதற்குரிய பணி நியமன விதிமுறைகளையும், ஊதிய அடிப்படைகளையும்தானே பின்பற்றவேண்டும்.
காவல்துறை கண்காணிப்பாளரே இவர்களை தேர்ந்தெடுப்பார் என்றால், அங்கன்வாடி பணியாளர்களுக்கும், சத்துணவு பணியாளர்களுக்கும் நேர்ந்த கதியைப்போல, அந்தந்த மாவட்டங்களில் உள்ள அதிமுகவினர் பரிந்துரைகளைத்தானே ஏற்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கேட்டுள்ளார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக