திங்கள், 5 நவம்பர், 2012

தமிழகத்தில் 11.50 லட்சம் வழக்குகள் நிலுவை உச்ச நீதிமன்றம் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா

ஈரோடு:""தமிழக நீதிமன்றங்களில், 11 லட்சத்து, 50 ஆயிரத்து, 809 சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன,'' என, உச்ச நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா கூறினார்.ஈரோட்டில், தமிழ்நாடு நீதித் துறை ஊழியர் சங்கத்தின், 10வது மாநாடு நடந்தது. மாநாட்டு மலரை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி யூசுப் இக்பால் வெளியிட்டார். மலரைப் பெற்றுக்கொண்டு, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா பேசியதாவது:
நான், 25 ஆண்டு வழக்கறிஞராகவும், 13 ஆண்டு நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளேன். தமிழகத்தில், கடந்த 2006ல், நான்கு லட்சத்து, 43 ஆயிரத்து, 656 சிவில் வழக்கு நிலுவையில் இருந்தன. எட்டு லட்சத்து, 19 ஆயிரம் சிவில் வழக்குகள் தாக்கல் செய்ததில், ஏழு லட்சத்து, 99 ஆயிரம் வழக்குகள் தீர்வு காணப்பட்டன. தற்போது, 7.50 லட்சம் வழக்கு நிலுவையில் உள்ளன.அதேபோல், 4.31 லட்சம் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவை, 4.91 லட்சம் வழக்குகளாக அதிகரித்துள்ளன.
சிவில் மற்றும் கிரிமினல் என, கடந்த, 2006ல் மொத்தம், எட்டு லட்சத்து, 56 ஆயிரத்து, 809 வழக்குகள் இருந்தன. தற்போது, நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 11 லட்சத்து, 83 ஆயிரத்து, 244ஆக அதிகரித்துள்ளன.

தமிழகத்தில், மொத்தம் 8,051 நீதிமன்றங்கள் உள்ளன. வழக்கு நீதிமன்றத்துக்கு வரும் காரணம், மக்கள் நம்மீது காட்டும் நம்பிக்கை. அதை காப்பாற்ற வேண்டிய நிர்பந்ததில் நாம் இருக்கிறோம்.விஞ்ஞான ரீதியாக ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கேற்ப, நீதித் துறையினர் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் தங்க நாணயத்துக்கு ஒப்பானவர்கள். இந்த நாணயத்தில், எந்த பக்கம் குறை ஏற்பட்டாலும், அது செல்லாத காசாகிவிடும்.இவ்வாறு, இப்ராகிம் கலிபுல்லா கூறினார்.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாஷா, சுந்தரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக