வியாழன், 11 அக்டோபர், 2012

Tamilnadu: 900 நீதிபதிகள் மீது புகார் கடும் நடவடிக்கை பாயும்:

சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள நீதிபதிகளில் 900 பேர் மீது புகார்கள் உள்ளன. இதில் 500 புகார்கள் மீது தீவிர பரிசீலனை நடந்து வருகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நீதிபதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் எச்சரித்துள்ளார். சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில் 167 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில், மூத்த நீதிபதிகள் எலிபி தர்மராவ், நாகப்பன், பானுமதி உள்ளிட்ட ஐகோர்ட் நீதிபதிகள் பங்கேற்றனர். பதவி பிரமாணம் எடுத்து கொண்ட சிவில் நீதிபதிகளுக்கான பயிற்சியை தலைமை நீதிபதி இக்பால் தொடங்கி வைத்து பேசியதாவது: இதுவரை நீங்கள் சுதந்திர பறவையாக இருந்திருப்பீர்கள். நினைத்ததை எல்லாம் செய்து முடித்திருப்பீர்கள். இப்போது நீங்கள் நீதிபதிகள். உங்கள் பணி காலத்தில் தொழில் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். விமர்சனத்துக்கு ஆளாகாதீர்கள். மக்கள் கடைசியாக நிவாரணம் தேடி வருவது நீதிபதிகளிடம்தான். யாராவது ஒருவர், நீதிபதி ஊழல் செய்தார் என்று விரல் நீட்டி குற்றம் சாட்டினால், அவர் நீதிபதியாக இருப்பதை விட்டுவிட்டு வக்கீல் தொழிலுக்கு திரும்பிவிடலாம்.


நீதிபதிகள் மீது வரும் மொட்டை புகார்கள் மீது பெரிய அளவில் கவனம் செலுத்த மாட்டோம். அதே நேரத்தில் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் உயர் நீதிமன்றம் அதை சும்மா விட்டுவிடாது. தமிழகத்தில் மொத்தமுள்ள நீதிபதிகளில் 900 நீதிபதிகள் மீது புகார் வந்துள்ளன. அவற்றில் 500 புகார்கள் தீவிர பரிசீலனையில் உள்ளன. புகார்கள் நிரூபிக்கப்பட்டால் சிவில் நீதிபதியாக இருந்தாலும், மாவட்ட நீதிபதியாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இப்படிதான் சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்ட நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது நீதிபதிகள் மீதும் மக்களுக்கு தவறான கண்ணோட்டம் உள்ளது அரசு ஊழியர்கள் ஊழல் செய்தால், அதை கண்காணிக்க ஊழல் தடுப்பு பிரிவு இருப்பது போல், நீதிபதிகள் தவறு செய்தால் அவர்களை கண்காணிக்க ஐகோர்ட்டிலும் விஜிலன்ஸ் பிரிவு செயல்படுகிறது. உங்கள் ஒட்டுமொத்த நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் கண்காணிக்கப்படுகிறது. 50 வயதில் பணி நீக்கம் செய்யப்பட்டால், உங்கள் குழந்தைகளின் மனநிலை என்ன பாடுபடும். எனவே, கவனமாக நீதிபதியின் மாண்பை காப்பாற்றும் வகையில் பணியாற்றினால் ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் வரை நீங்கள் செல்லலாம். ஜனநாயக நாட்டில் சாதாரண குடிமக்களும் உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறார்கள். ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பல்வேறு இயக்கங்கள் தோன்றியுள்ளன. எனவே, நீதிபதிகளாகிய நீங்கள் ஊழல் என்ற சிக்கலில் மாட்ட கூடாது. நீதிமன்றத்தின் மாண்பையும் நீங்கள் காக்க வேண்டும். மூத்த நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகளுடன் நீங்கள் இணக்கமான சூழலை உருவாக்கி கொண்டு செயல்பட வேண்டும். இன்னும் சில மாதங்களில் நீங்கள் பயிற்சி முடித்து நீதிபதிகளாக பணியாற்ற உள்ளீர்கள். நான் கூறியதை கடைபிடிப்பீர்கள் என்று நம்புகிறேன்.  இவ்வாறு தலைமை நீதிபதி இக்பால் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக