வியாழன், 4 அக்டோபர், 2012

Consumerism பைக்குக்காக கொலை: தொடரும் பயங்கரம்!

புனே நகர மக்களை மட்டும் அல்லாமல் கேள்விப்பட்ட பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி வெளியான அச்செய்தி. 5 வயது நிரம்பிய சிறுவனை பணயக் கைதியாக கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர் 2 பதின்ம வயது இளைஞர்கள்.
ஷூப் ராவல் என்ற 5 வயது சிறுவனின் பெற்றோர்கள் விஞ்ஞானிகளாக பணி புரிபவர்கள். அச்சிறுவனை ஹோட்டல் நிர்வாகம் படிக்கும் 19 வயது நிரம்பிய பர்மிந்தர் சிங் என்ற இளைஞனும், பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயதான மாணவனும் சேர்ந்து கடத்தி, பணயக் கைதியாக்கி, அவனுடைய பெற்றோர்களிடம் 5 லட்சம் ரூபாய் வாங்கி அதன் மூலம் மோட்டார் பைக் வாங்குவது என்று திட்டம் வகுத்து உள்ளனர்.

செப்டம்பர் 23 ஆம் தேதி விநாயகர் பந்தலில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தையை சாக்லேட் வாங்கி தருவதாக அழைத்து சென்றுள்ளனர். அவனை மறைத்து வைக்க பாஷன் மலை என்கின்ற இடத்திற்கு அழைத்து சென்ற போது பர்மிந்தர் சிங் அவன் கூட்டாளியுடன் செல்போனில் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த சிறுவன் அவனை தன் தந்தையிடம் காட்டி கொடுப்பதாக சொல்லியிருக்கிறான். அதைக் கேட்டு, பயத்தில் அவ்விளம் பிஞ்சினை ஈவு இரக்கம் இன்றி கொன்று இருக்கிறான் பர்மிந்தர் சிங்.
ஆடம்பர கேளிக்கைக்காக, நுகர்வுக்காக ஒரு பச்சிளம் குழந்தையை கொல்வதற்கும் தயங்காத இந்த வன்முறை மனோபவத்தை என்னவென்று சொல்வது! 
இச்சம்பவம் 2006 டிசம்பர் மாதத்தில் சென்னை விருகம்பாக்கத்தில் 13 வயதே நிரம்பிய அரவிந்த் என்ற சிறுவன் அவனது தெரு நண்பர்களாலேயே கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவு படுத்துகிறது. அது புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பணத் தேவைக்கு நடத்தப்பட்ட கடத்தல், புனேயில் இப்போது நடந்திருப்பது மோட்டார் பைக் வாங்குவதற்கான பணத் தேவைக்கு கடத்தல் நடத்தி உள்ளனர்.
புனேயில் சென்ற ஏப்ரல் மாதம் பதினைந்து வயதான ஷூபம் ஷிர்கே என்ற மாணவனை அவனது சக மாணவனும் இன்னும் இரண்டு இளைஞர்களும் சேர்ந்து கடத்தி கொலை செய்திருக்கின்றனர். அக்சய் பகத் என்ற அவனது சக மாணவன் ஷூபமை தனது வீட்டுக்கு வருமாறு தொலைபேசியில் அழைத்திருக்கிறான். சில மணி நேரத்துக்குப் பிறகு ஷூபமின் அப்பாவை தொலைபேசியில் அழைத்து அவரது மகனை கடத்தி வைத்திருப்பதாகவும் பிணைத் தொகை தருமாறும் கேட்டிருக்கிறான். பணத்தை கொடுத்த பிறகும் மகன் வீட்டுக்கு திரும்பாததால் ஷூபமின் தந்தை போலீசில் புகார் பதிவு செய்ய கொலையாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
பிணைத் தொகை கேட்பதற்காக தொலைபேசியில் அழைப்பதற்கு ஷூபமை மூன்று பேரும் சேர்ந்து கொன்றிருக்கிறார்கள். தொலைக்காட்சி தொடர்களை பார்த்து இந்த திட்டத்தை போட்டதாக அவர்கள்  தெரிவித்திருக்கிறார்கள். சீக்கிரமாக பணம் சம்பாதித்து ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இதை செய்திருக்கிறார்கள்.
கட்டற்ற நுகர்வு கலாச்சாரம் பரவி வரும் சமூகத்தில் இது தான் நிலைமை! ‘பார்ப்பதை எல்லாம் வாங்க வேண்டும், சுக போகமாக வாழ வேண்டும், கேளிக்கையில் மூழ்கவேண்டும்’ என்ற சிந்தனையே நடுத்தர, மேட்டுக் குடியினர் மத்தியில் இடைவிடாமல் விதைக்கப்படுகிறது.
பணம், சொத்து, வெளிநாட்டுப் பயணம், வீட்டில்  நுகர்வுப் பொருள்களை குவிப்பது இவையே வாழ்க்கையின் இலக்குகள் என்று பெற்றோர்கள் செயல்படும் பொது, குழந்தைகளும் அதே கண்ணோட்டத்தில் வளர்கின்றனர். விளம்பரங்கள், விளையாட்டுக்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியாக சுக போக வாழ்வின் விழுமியங்கள் போதிக்கப்படும் அளவு பொறுப்புணர்வு, சக மனிதர்கள் மீதான அக்கறை, உதவும் மனப்பான்மை போன்ற சமூக விழுமியங்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தரப்படுவதில்லை. கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடும் பிள்ளை ஏதோ ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருப்பது போல பெருமைப்படும் பெற்றோர்களிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்!
‘பிரச்சனை எங்கோ நடக்கிறது, நாம் வீட்டு ஜன்னலையும் கதவையும் மூடிக்கொண்டு விட்டால் சமூகத்தின் தாக்கத்திலிருந்து துண்டித்துக் கொள்ளலாம்’ என்று பிள்ளைகளை பொறுப்பின்றி வளர்ப்பதன் விளைவுகள்தான் இத்தகைய நிகழ்வுகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக