புதன், 31 அக்டோபர், 2012

ராகுலின் பதவிக்கு பெயர் வைப்பதில்...குழப்பம்

மத்திய அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து, கட்சி நிர்வாக அமைப்பிலும், அதிரடி மாற்றங்களை அரங்கேற்ற காங்கிரஸ் தயார் நிலையில் உள்ளது. சோனியாவுக்கு அடுத்ததாக, கட்சியின் முக்கிய பொறுப்புக்கு, ராகுலை நியமனம் செய்யும் அறிவிப்பு, அடுத்த சில நாட்களில், வெளியாகவுள்ளது.
வரும், 2014ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை சந்திக்கும் வகையில், முழுக்க முழுக்க ராகுலுக்கு வசதியான வகையில், மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.மத்திய அமைச்சரவை, கடந்த ஞாயிறன்று மாற்றி அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியிலும், மிகப் பெரிய மாற்றங்கள் நிகழும் என்ற செய்திகள், சமீப நாட்களாக வெளியாகி வருகின்றன.லோக்சபா தேர்தல், 2014ல் நடக்கவுள்ளதாலும், அதற்குமுன், ஒன்பது சட்டசபை தேர்தல்களை சந்திக்க வேண்டியுள்ளதாலும், கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டே ஆக வேண்டிய கட்டாய நிலைமையில் காங்கிரஸ் உள்ளது. 23 - ஆம் புலிகேசி ன்னு வையுங்களேன்

கட்சியில், தற்போது இளைஞர் காங்கிரஸ் பிரிவுக்கான பொறுப்பை, பொதுச் செயலர், ராகுல் கவனித்து வருகிறார். இருப்பினும், மற்ற முக்கிய நடவடிக்கைகளும் அவரது கவனத்திற்கு வருகின்றன. சோனியாவுக்கு அடுத்து, ராகுல்தான் என்பது, காங்கிரசில் இப்போதே நடைமுறையில் உள்ளது. இருந்தாலும், அதற்கு அதிகாரப்பூர்வ முத்திரை அளிக்க, சோனியாவும், மற்ற மூத்த தலைவர்களும் விரும்புகின்றனர். அமைச்சரவை மாற்றத்தில், ராகுலின் தாக்கம், பெரிய அளவில் இருந்தது. மணீஷ் திவாரி, ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் போன்றவர்களுக்கு, கிடைத்துள்ள ஏற்றம் மட்டுமின்றி, கிருஷ்ணா போன்ற மூத்த அமைச்சர்களின் வெளியேற்றமும், ராகுலின் யோசனைப்படியே நடந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், காங்கிரஸ் கட்சியின் நிர்வாக அமைப்பில் நிகழ உள்ள மாற்றமும், அவரது விருப்பத்திற்கு ஏற்றப்படியே இருக்கும் என்ற கருத்து உள்ளது.

இதுதொடர்பாக, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:காங்கிரசில், ராகுலுக்கு மிக முக்கிய பொறுப்பு என்றால், அது கட்சித் தலைவர் சோனியாவுக்கு அடுத்த பொறுப்புதான். காங்கிரசில், கட்சித் தலைவர் பதவிக்கு அடுத்தாக, அகில இந்திய பொதுச் செயலர் பதவியே அதிகாரம் மிக்கது. இந்த பதவியில் ஏற்கனவே, ஐந்து ஆண்டுகளாக ராகுல் உள்ளார்.அதனால், ராகுலுக்கு, "நம்பர் டூ' பதவி வழங்கப்படுவது உறுதியாகி விட்டாலும், அந்தப் பதவிக்கு என்ன பெயர் வைப்பது என்பது குறித்தே, தற்போது ஆராயப்பட்டு வருகிறது. இதற்கு முன், 1983ல், "செயல் தலைவர்' என்ற பதவியில், கமலாபதி திரிபாதி இருந்தார்.

கடந்த, 1980ல், "செகரட்டரி ஜெனரல்' என்ற பதவியில், எச்.என்.பகுகுணா இருந்தார். அதனால், இதுபோன்ற ஒரு பெயரில், ராகுலுக்கு பதவி அளிக்கப்படும்; அப்படி இல்லை எனில், பல்வேறு பிரிவுகளுக்கும் பொதுச் செயலர்கள் இருப்பதால், ஒட்டு மொத்த பிரிவுகளுக்கும் சேர்த்து, "அமைப்பு பொதுச் செயலர்' என்ற, பதவியில் ராகுல் அமர்த்தப்படுவார்.

ராகுலுக்கு வழங்கப்பட உள்ள, பதவி குறித்த அறிவிப்பு, இந்த வார இறுதிக்குள் வெளியாகும். வரும், ஞாயிறன்று, டில்லியில், பிரமாண்டமான பேரணிக்கு, காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ள, இந்த பேரணிக்கு முன் அல்லது பேரணியின் போது, ராகுலின் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகும்.அதன்பின், அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும். சமீபத்தில், மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகிய, அம்பிகாசோனி மற்றும் முகுல் வாஸ்னிக் போன்றோர், கட்சிப் பணியில் பழுத்த அனுபவம் பெற்றவர்கள். அதனால், அம்பிகா சோனிக்கு, மிக முக்கிய பொறுப்பு வழங்கப்படும்.

அவர் சோனியாவின், மற்றொரு அரசியல் ஆலோசகராக அல்லது கட்சித் தலைவர் அலுவலக பொறுப்பு நிர்வாகி யாக அல்லது ஊடகப் பிரிவு தலைவராக நியமிக்கப்படுவார். அதேபோல், மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகிய, வேறு சிலருக்கும், கட்சியில், பொறுப்பான பதவி வழங்கப்படும்.காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகிகள் மாற்றத்தில், தேர்தல் நடக்க உள்ள மாநிலங்கள், கட்சியில் உள்ள செல்வாக்கு, பிராந்திய மற்றும் ஜாதி செல்வாக்கு போன்ற பல, பின்னணிகளின் அடிப்படையில், பொறுப்புகள் வழங்கப்படும்.இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


மாற்றத்தில் தமிழகம்:


காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மாற்றத்தில், தமிழகம் இடம் பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அகில இந்திய பொதுச் செயலர் பதவியில், தமிழகத்திலிருந்து, கடைசியாக, ஜி.கருப்பையா மூப்பனார் இருந்தார்.அவருக்கு பின், தமிழக தலைவர்கள் யாருக்கும், பொதுச் செயலர் பதவி வழங்கப்படவில்லை; காங்கிரஸ் செயற்குழுவிலும் யாருக்கும் இடம் தரவில்லை. மூப்பனார் துவக்கிய, தமிழ் மாநில காங்கிரசை, காங்கிரசுடன் இணைத்தபோது, வாசனுக்கு, செயலர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது.

தவிர, தலித் சமூகத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மட்டுமே, தற்போது செயலர் பதவியில் உள்ளார். விரைவில் நிகழவுள்ள மாற்றத்தில், இவர் பதவியில் தொடர்வாரா, இல்லையா என்பதும் தெரியவில்லை.இந்நிலையில், அகில இந்திய பொதுச் செயலர் பதவிக்கு, தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர், தங்கபாலு தீவிரமாக முயற்சிக்கிறார். இவருக்கு, மத்திய சுகாõதாரத் துறை அமைச்சர், குலாம்நபி ஆசாத்தின் ஆதரவும் உள்ளது. இருந்தாலும், இவருக்கு, சோனியா பதவி தருவாரா என்பது, விரைவில் தெரிந்து விடும்.இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக