புதன், 3 அக்டோபர், 2012

இந்தியா பயிற்சி கொடுக்கா விட்டால், அடுத்த சாய்ஸ் பாகிஸ்தான்” -இலங்கை

Viruvirupu
“இலங்கை ராணுவ வீரர்கள் சீனாவில் ராணுவப் பயிற்சி எடுத்துக் கொள்வதைவிட, இந்தியாவில் ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும்” இவ்வாறு கூறியுள்ளார், இலங்கை பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சரும், ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்‌ஷே.
இன்று கொழும்புவில் இந்தியாவில் இருந்து சென்றிருந்த செய்தியாளர்களுடன் பேசியபோதே, அவர் அவ்வாறு தெரிவித்தார்.
“தமிழ்நாட்டில் இலங்கை ராணுவ வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் பக்தி சுற்றுலா மேற்கொண்டபோது தமிழகத்தில் உள்ள கட்சியினரால் தாக்கப்பட்டதும், எமக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், எமது ராணுவ வீரர்களை பயிற்சிக்காக இந்தியா அனுப்புவதையே நாம் விரும்புகிறோம். காரணம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள நட்புறவுக்கு மிக நீண்ட வரலாறு உள்ளது” என்று தெரிவித்தார் அவர்.

இந்தியாவில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்காவிட்டால், உங்களது அடுத்த சாய்ஸ் என்ன?” என இந்திய செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பசில் ராஜபக்‌ஷே, “சீனாவில் பயிற்சி பெறுவதைவிட, எம்முடன் நீண்டகால நட்புறவுள்ள இந்தியா, அல்லது பாகிஸ்தானில் இலங்கை ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொள்வது சிறப்பாக இருக்கும். இந்தியா மறுத்தால், எமது தேர்வு பாகிஸ்தானாக இருக்கும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக