திங்கள், 1 அக்டோபர், 2012

பில்லியனர் மாயாவதி தலித்துக்களின் பிரதிநிதியா?

மாயாவதி வினவு
மாயாவாதியின் துரோகப் பாதையையே பல்வேறு தலித் அறிவுஜீவிகள் இயக்கங்கள் நியாயப்படுத்தி வருகிறார்கள். கேட்டால் மற்றவர்கள் யோக்கியமா என்று தனது அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்துகிறார்கள்.

மாயாவதி
த்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் செல்வி மாயாவதியின் மீது போடப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. ஒன்பது ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கை பதிவு செய்ததற்காக மத்திய புலனாய்வு துறையை நீதிமன்றம் கண்டித்தது. 2002-ம் ஆண்டில் தாஜ் காரிடார் வழக்கு தொடர்பான அதன் உத்தரவு மாயாவதி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து வழக்கு பதிவு செய்யும்படி சொல்லவில்லை என்றது நீதிமன்றம்.
மாயாவதியின் இப்போதைய சொத்து மதிப்பு ரூ 111 கோடி என்று ராஜ்யசபை தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அவர் பதிவு செய்திருக்கிறார்.  2010-ன் உத்தர பிரதேச மேல் சபை தேர்தலில் போட்டியிடும் போது சொத்து மதிப்பு ரூ 88 கோடியாகவும், 2007-ல் ரூ 52.27 கோடியாகவும் இருந்தது. மாயாவதியின் சொத்து மதிப்பு கடந்த 15 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், அதை நிரூபிக்க முடியுமா, அதற்காக அவர் மீது வழக்கு தொடர வேண்டுமா என்பதை யார் முடிவு செய்கிறார்கள்?
நேர்மையாக செயல்படுத்தினால்,  இன்றைய அரசியல் தலைவர்கள், பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் யார் மேல் வேண்டுமானாலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை போடலாம். அதை முடிவு செய்வது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு. ஆளும் தரப்பினர் தமது நலன்களுக்கு எதிராக செயல்படுபவர்களை அடக்குவதற்கு பயன்படுத்தும் கருவியாகவே இத்தகைய வழக்குகள் நடத்தப்படுகின்றன.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகாரின் முலாயம் சிங் யாதவ், 2G அலைக்கற்றை ஊழல் வழக்கில் தமிழ்நாட்டின் கருணாநிதி, பல்வேறு வழக்குகளில் உத்தர பிரதேசத்தின் முலாயம் சிங் யாதவ், மாயாவதி, ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி என்று தமக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை கட்டுக்குள் வைத்திருக்கவும், எதிராக செயல்படுபவர்களை அடக்குவதற்குமான கருவியாகவே மத்திய புலனாய்வுத் துறை பயன்படுத்தப்படுகிறது.
‘மாயாவதிக்கு எதிரான வழக்கு அரசியல் காரணங்களுக்காக பதிவு செய்யப்பட்டது’ என்கிறார் அவரது கட்சிக்காரரான மிஸ்ரா. தில்லி உயர் நீதிமன்றமும், வருமான வரி முறையீட்டு ஆணையமும் ‘அவர் மீது தவறு இல்லை’ என்று சொன்ன பிறகும் சிபிஐ வழக்கை திரும்ப பெறவில்லை என்கிறார் அவர்.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 1984-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பஞ்சாபைச் சேர்ந்த கன்ஷிராம் என்ற தலித் தலைவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த போது மாயாவதியும் அதில் அடிப்படை உறுப்பினராக இருந்தார். மாயாவதி ஒரு நடுத்தரவர்க்க தலித் குடும்பத்தில் பிறந்து பட்டப் படிப்பு பெற்றவர். அவரது தந்தை அஞ்சல் துறையில் வேலை செய்து வந்தார்.
இந்தியாவின் நிலப்பிரபுத்துவ பிற்போக்கு சமூக அமைப்பில் தலித்துகள் கொடுமையாக அடக்கப்படுகின்றனர். தலித் மக்களுக்கு நிலவுடமை இல்லாமல் ஆதிக்க சாதியினரை சார்ந்தே வாழ்கின்றனர். அரசு பதவிகளில் இட ஒதுக்கீடு, வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்று சீர்திருத்தங்கள்  அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் பெரும்பான்மை தலித் மக்கள் அடக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர், பொருளாதார ரீதியாக சுரண்டப்படுகின்றனர்.
தலித்துகளின் பிரச்சனைகளுக்கு போராடி தலித் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதாக கூறிக் கொண்ட கட்சிதான் பகுஜன் சமாஜ் கட்சி. ‘தேர்தல் அரசியலில் பங்கு பெற்று தலித் மக்களின் வாக்கு வங்கியை உருவாக்கி, பிற முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு, அவர்களை பயன்படுத்திக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை பிடித்து தலித் மக்களுக்கு விடுதலை பெற்று விடலாம்’ என்று திட்டம் வகுத்தது அந்தக் கட்சி.
மாயாவதியின் ஆவேசமான உரைகள் தலித் வாக்காளர்கள் மத்தியில் அவரை பிரபலமாக்கியது. மனுவாதிகளை தாக்கும் அவரது அனல் பறக்கும் பேச்சுக்கள் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கு உத்வேகம் அளித்தன. பல ஆண்டுகளாக உத்தர பிரதேசத்தில் தலித்துகளை தமது வாக்கு வாங்கியாக நடத்திய காங்கிரசுடன் ஒப்பிடும் போது பகுஜன் சமாஜ் கட்சி மேம்போக்காக முன் வைத்த தலித் மக்களுக்கு விடுதலை, சுய மரியாதை, புதிய வழி வகுத்தல் முதலானவை  தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றது.
பகுஜன் சமாஜ் கட்சி உத்தர பிரதேச மாநிலத்தில் வளர ஆரம்பித்தது. மாயாவதி நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக போட்டியிட்டு நான்காவது முயற்சியில் 1989-ல் பிஜ்னோர் தொகுதியில் 1,93,189 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அந்த கால கட்டத்தில் கட்சியின் நிலையைப் பற்றி பிற்காலத்தில் சொல்லும் போது கன்ஷிராம்,
‘நன்கு பணபலம் இருந்திருந்தால் 1987லேயே மாயாவதி நாடாளுமன்றத்திற்கு போயிருப்பார். அந்த தேர்தலில் பெரும் முயற்சிக்குப் பிறகு 87,000 ரூபாயை மட்டுமே திரட்ட முடிந்தது. பணத்தில் மிதந்த மற்ற கட்சிகளை தோற்கடிக்க அது போதவில்லை. அப்போதுதான், நாம் வளர வேண்டுமானால் நாம் கட்சிக்கு ஒரு நிதி அடிப்படையை வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன்’ என்று குறிப்பிட்டார்.
‘நமது கட்சியை வளர்க்க வேண்டும் என்பதால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நிதி திரட்ட முயற்சிக்க வேண்டும். மற்ற கட்சிகள் பணத்தில் மிதக்கின்றன, அவற்றுடன் போட்டியிட வேண்டியிருக்கிறது. இப்போது நாம் ஆட்சியில் இருப்பதால் கட்சியின் வளர்ச்சிக்கு தேவைப்படும் பணம் பற்றி நீங்கள் மறந்து விடக் கூடாது. தில்லியில் அதிகாரத்தை பிடிப்பதுதான் கட்சியின் குறிக்கோள்’ என்று கட்சியினருக்கு வழி காட்டினார்.
இதுதான் தேர்தல் அரசியல் மூலம் அதிகாரத்தை பிடிக்க முயலும் எந்த ஒரு ஓட்டுக் கட்சிகளும் சந்திக்கும் நிதர்சனம்.
கன்ஷி-ராம்
கன்ஷி ராம்
தலித் மக்களுக்கு மட்டுமாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவு தளத்தை பரவலாக்கி, அதிகாரத்தைப் பிடிப்பது என்ற செயல் திட்டத்தை உருவாக்கிய மாயாவதி. 1993-ல் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு 39 வயதில் உத்தர பிரதேசத்தின் இளைய முதலமைச்சராகவும் இந்தியாவின் முதல் தலித் பெண் முதலமைச்சராகவும் ஆனார். 1997-லும் 2002-லும் பாரதிய ஜனதா எனும் பார்ப்பன ஆதிக்க சாதிகளின் பிரதிநிதியாக செயல்படும் கட்சியின் துணையுடன் முதலமைச்சரானார்.
அடுத்து இந்த இடைத்தரகர்கள் மூலம் ஆதிக்க சாதியினரின் வாக்கை பெறுவதை விட, நேரடியாக பகுஜன் சமாஜ் கட்சியையே அனைத்து பிரிவினரின் கட்சியாக மாற்றுவது என்ற அடிப்படையில், ‘தலித் மக்களுக்கு விடுதலை’ என்ற நிலைப்பாட்டை ‘அனைத்து சமூகத்தினருக்கும் சமவாய்ப்பு’ என்று மாற்றிக் கொண்டார். கொள்ளையடித்தவர்களையும் கொள்ளையடிக்கப்பட்டவர்களையும் சமமாக பாவிப்பதுதான் அனைத்து சமூகத்தினருக்கும் சம வாய்ப்பு என்ற முழக்கம்.
2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை நடந்த முலாயம் சிங் யாதவின் குண்டர் ஆட்சியினால் வெறுத்துப் போயிருந்த நிலையில் மக்களின் வாக்குச் சீட்டு சூதாட்டம் மூலம் 2007-ம் ஆண்டு தனிப் பெரும்பான்மையுடன் உத்தர பிரதேச மாநிலத்தின் ஆட்சியை பிடித்தார் மாயாவதி. அதை சாதிப்பதற்கு தலித் மக்களை ஒடுக்கி வரும் பார்ப்பன, பனியா சாதியினரின் ஆதிக்கத்தை கட்சிக்குள் அனுமதிக்க வேண்டியிருந்தது.
தேர்தல் அரசியலில் இன்னும் வளர, இந்தியா முழுவதும் பகுஜன் சமாஜ் கட்சியை பரப்புவதற்கு நிதி தேவைப்பட்டது, நிதியை வழங்குபவர்கள் தரகு முதலாளிகளும் அவர்களது ஏஜெண்டுகளும்தான். இதன் மூலம் நிதியை குவித்து பல மாநிலங்களில் கட்சியை பரப்ப முயற்சி செய்தார் மாயாவதி. தமிழ்நாட்டில் கூட பகுஜன் சமாஜ் கட்சி கிளை ஆரம்பிக்கப்பட்டது.
மாயாவதி முதன் முதலில் முதலமைச்சராகி 20 ஆண்டுகள் ஆகி விட்டன. அவரது கட்சி தனியாக அதிகாரத்தை பிடித்து 5 ஆண்டுகள் ஆட்சி நடந்து முடிந்திருக்கிறது. இருந்தும் உத்தர பிரதேசத்தில் வாழும் தலித் மக்களின் வாழ்க்கையில் எதுவும் மாறி விடவில்லை.
2010-ம் ஆண்டு அந்த மாநிலத்தின் மேற்கு பகுதி மாவட்டம் ஒன்றிலும், கிழக்கு பகுதி மாவட்டம் ஒன்றிலும் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் ‘தலித் மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினரிடம் மட்டுமே தொலைக்காட்சி இருக்கிறது, 95% மக்கள் சமைப்பதற்கு விறகு அடுப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள். 10% மட்டுமே மோட்டர் சைக்கிள் வைத்திருக்கும் அளவு வசதி உடையவர்கள்’ என்று தெரிய வந்தது. தலித் குழந்தைகளில் சுமார் 35 சதவீதத்தினர் பள்ளிக்கு போவதில்லை. பெண் குழந்தைகளில் சுமார் 40 சதவீதம் பள்ளிக்கு போவதில்லை.
2009-ம் ஆண்டு இந்திய குற்றங்கள் பற்றிய ஆய்வறிக்கையின் படி தேசிய அளவில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் நாட்டிலேயே அதிக அளவாக 22.4% உத்தரபிரதேசத்தில் நடந்தன. தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் கொலை வழக்குகளில் 37.5 சதவீதமும், பாலியல் வன்முறைகள் 23.8 சதவீதமும் உத்தர பிரதேச தலித்துகளுக்கு எதிராக நடத்தப்பட்டன.
அனைத்து சமூகத்தினரையும் திருப்திப்படுத்தும் மாயாவதியின் கொள்கையின் காரணமாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்வதை மட்டுப்படுத்துமாறு மாயாவதி உத்தரவிட்டிருந்தார். கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய பலர் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து சட்டசபை உறுப்பினர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள்.
மாயாவதி தலித் விடுதலைக்கு சிறப்பாக முன் வைத்த நடவடிக்கை அம்பேத்கர், பூலே, கன்ஷிராம் போன்ற தலித் தலைவர்களுக்கு சிலைகளுக்கும் நினைவுச் சின்னங்களும் அமைப்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. ‘முந்தைய அரசுகள் தலித் தலைவர்களின் மீது போதிய மரியாதையை காட்டவில்லை’ எனவும், ‘அதை சரி செய்ய இந்த செலவு அவசியமானது’ என்றுத் அவர் சொன்னார்.
ஆனால் சிலைகளும் நினைவுச் சின்னங்களும், எதிரிகளை வசை பாடுவதும் தலித் மக்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ள போதுமானதாக இருக்கவில்லை. தலித் மக்களின் உண்மையான விடுதலைக்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இயலாத, அதற்கு எதிரான அரசியலில் தெரிந்தே நீந்திக் கொண்டு தம்மை நம்பி இருக்கும் கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு துரோகமிழைத்தார் மாயாவதி.  தரகு முதலாளிகளிடம் பணம் வசூலித்து, தனக்கு கொஞ்சம் பணம் ஒதுக்கிக் கொண்டு தன்னைச் சுற்றி இருக்கும் கட்சியினருக்கு மீதியை வினியோகிக்கும் ஒரு ஏஜென்டாக மட்டும் செயல்படுகிறார். அவர் பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் தலித் மக்கள் இன்னமும் நிலப்பிரபுத்துவ கொடுமைகளிலும் மறுகாலனியாதிக்க சுரண்டலிலும் உழன்று கொண்டிருக்கிறார்கள்.
மாயாவதி போன்ற அரசியல்வாதிகளை கட்டுக்குள் வைத்திருப்பது தரகு முதலாளிகளுக்கும் நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கும் கைவந்த கலை. அவர் முதலமைச்சராக இருந்த போது நடந்த ஊழல்களை விசாரிக்க மத்திய புலனாய்வுத் துறை என்ற நாய் ஏவப்பட்டு வருமானத்துக்கு மேல் சொத்து சேர்த்த வழக்கு, தாஜ் காரிடார் வழக்கு என்று வரிசையான வழக்குகள் அணிவகுத்திருந்தன.
ஆட்சியை இழந்த பிறகு திமுகவினர் மக்கள் பிரச்சனைகளை புறக்கணித்து விட்டு, தமது கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவதை எதிர்த்து போராடுவதைப் போல பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதியின் சிலை உடைக்கப்பட்டது குறித்து மட்டுமே போராட முடிகிறது. உண்மையான மக்கள் பிரச்சனைகளுக்காக போராடினால் ஆளும் சக்திகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும், அப்படி அதிருப்திக்கு ஆளானால், சேர்த்து வைத்திருக்கின்ற ஊழல் மூட்டைகளை அவர்கள் அவிழ்த்து உதற ஆரம்பிப்பார்கள். அதனால் வாயை மூடிக் கொண்டு, கையை கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியிருக்கிறது, உப்பு சப்பில்லாத விஷயங்களுக்கு போராடுவதாக பாவலா காட்ட வேண்டியிருக்கிறது.
சுமார் 30 ஆண்டுகளில் ஒரு தலித் கட்சி போலி ஜனநாயகத்தின் எல்லா கட்டங்களையும் கடந்து சீரழிந்து நிற்கிறது. 1977-ம் ஆண்டு மாயாவதி கன்ஷிராமை முதன் முதலில் சந்தித்த போது நடந்த உரையாடலிலிருந்து அந்த சீரழிவின் ஆரம்பத்தை புரிந்து கொள்ளலாம்.
தில்லியின் இந்தர்புரி ஜேஜே காலனியில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டே ஐஏஎஸ் தேர்வுகளுக்காக தயாரித்துக் கொண்டிருக்கும் போது மாயாவதி கன்ஷிராமை சந்தித்தார்.
‘நீ ஒரு பெரிய தவறை செய்கிறாய் என்று நான் நினைக்கிறேன். உன் தைரியம், தலித் மக்கள் மீதான அர்ப்பணிப்பு மற்றும் பல இயல்புகள் எனது கவனத்துக்கு வந்திருக்கின்றன. நீ ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக ஆவதை விட பல ஐஏஎஸ் அதிகாரிகள் உன் முன் காத்திருந்து உத்தவுகளை பெற்றுச் செல்லும்படியான அரசியல் தலைவராக வேண்டும். அதன் மூலம் நீ உண்மையிலேயே சமூகத்துக்கு சேவை செய்து தலித்துகளை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கலாம்” என்று கன்ஷிராம் சொன்னாராம்.
பார்ப்பன சம்மேளனத்தில் மாயாவதி
பார்ப்பன சம்மேளனத்தில் மாயாவதி
உண்மையில், மாயாவதியை ஐஏஎஸ் படிப்பிலிருந்து காப்பாற்றிய கன்ஷிராமும் பெரிய தவறைத்தான் செய்திருக்கிறார். பார்ப்பனீய இந்துத்துவ சமூகத்தில் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் சுமார் 20% இருக்கின்றனர். இன்றைய போலி ஜனநாயக அமைப்பில் தேர்தல் மூலம் அதிகாரத்தைப் பிடிப்பதற்கு தலித்துகளை சுரண்டும் ஆளும் வர்க்கத்திடமே சமரசங்களை செய்ய வேண்டியிருக்கிறது.
அப்படி அதிகாரத்தைப் பிடித்து விட்டாலும், பிற்போக்கு சக்திகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றங்கள், மத்திய அரசு, பெருநிறுவனங்கள், ஊடகங்கள் ஆகியோரின் கட்டளைக்கிணங்கத்தான் செயல்பட முடிகிறது. மாயாவதியிடம் பல ஐஏஎஸ் அதிகாரிகள் உத்தரவு பெற்று சென்றாலும், அந்த உத்தரவுகளை பிறப்பிப்பவர்கள் மக்களை சுரண்டிக் கொண்டிருக்கும் தரகு முதலாளித்துவ சக்திகளும், நிலப்பிரபுத்துவ பிற்போக்கு வாதிகளும்தான்.
உண்மையில் தலித் மக்களுக்கு விடுதலை பெற வேண்டுமானால், உத்தர பிரதேச மக்கள் தொகையில் 21% (3.5 கோடி பேர்) இருக்கும் தலித் மக்கள் ஒடுக்கப்படும் மற்ற உழைக்கும் மக்களுடன் கை கோர்த்து அரசு அதிகாரத்தை கைப்பற்றும் புரட்சிகர அமைப்புகளில் சேர்ந்து போராட வேண்டும். அப்படித்தான் உழைக்கும் மக்களின் உண்மையான சர்வாதிகாரத்தை நிறுவமுடியும்.
மாறாக தற்போதைய அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ அமைப்பினுள் மாற்றங்களை செய்ய முயற்சிப்பவர்கள் அமைப்பின்  சூத்திரதாரிகளால் இயக்கப்படுபவர்களாகவே சீரழிவார்கள் என்பதுதான் மாயாவதியின் வரலாறு சொல்லும் பாடம்.
பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் மாயாவாதியின் இந்த துரோகப் பாதையையே பல்வேறு தலித் அறிவுஜீவிகள் இயக்கங்கள் நியாயப்படுத்தி வருகிறார்கள். கேட்டால் மற்றவர்கள் யோக்கியமா என்று தனது அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்துகிறார்கள். மற்ற கட்சிகள் இதுவரை சொத்து சேர்த்து அதிகாரத்தை ருசிக்கவில்லையா, இப்போதுதானே நாங்கள் சுவைக்க ஆரம்பித்திருக்கிறோம் என்று வெட்கமில்லாமல் பிழைப்புவாதத்தை சரியென்று கூறுகிறார்கள்.
மாயாவாதி தலித்துகளிடம் காசு திரட்டியிருந்தால் இப்படி 111 கோடி சுருட்டியிருக்க முடியாது. கோடிகளை வழங்கியவர்கள் முதலாளிகள் எனும் போது அந்தக் கட்சி மட்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதாக எப்படி இயங்க முடியும்? உ.பியிலோ, பீகாரிலோ அன்று முதல் இன்று வரை நக்சல்பாரி அமைப்புகள்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் கலங்கரை விளக்காக செயல்படுகின்றன. இதை விடுத்து தேர்தல் அரசியலில் சங்கமிக்கும் எந்த தலித் அமைப்பும் ஆளும் வர்க்கத்தின் அடிமையாக மட்டுமே செயல்படமுடியும். அந்த அடிமைத்தனத்திற்க்காக சொத்தும், ஆடம்பர வாழ்க்கையும் கிடைக்கும் என்றாலும் தலித் மக்களுக்கு எதுவும் கிடைக்காது என்பதோடு அவர்களது விடுதலைக்கான அரசியல் வழி என்பது சாத்தியமில்லை என்றே இவர்கள் உரக்கக் கூறுகிறார்கள். அதனால் தலித் மக்கள் இத்தகைய பிழைப்புவதிகளை அவர்கள் தலித்துக்களே, தலித் கட்சிகளே ஆனாலும் புறக்கணிக்க வேண்டும். புரட்சிகர அமைப்புகளில் அணிதிரளவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக