வெள்ளி, 26 அக்டோபர், 2012

மாணவர்களே இல்லாத பள்ளிகளில் ஆசிரியர்கள் ஜாலியாக ...வேலை ?

கிருஷ்நகர்:மேற்கு வங்கத்தில், ஒரு மாணவர் கூட படிக்காத, இரண்டு பள்ளிகளில், 12 ஆசிரியர்களும், இரண்டு ஊழியர்களும், மாதம்தோறும் தவறாமல் சம்பளம் வாங்கி வருகின்றனர்.கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் இருந்த, மேற்கு வங்கத்தில், அடிப்படை வசதிகள் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது, தற்போது தெரிய வந்துள்ளது.
நாதியா மாவட்டத்தில், இரண்டு பள்ளிகள் உள்ளன. உமா ஷாஷி நிம்னதரோ உச்சா பாலிகே வித்யாலயா என்ற பெண்கள் பள்ளியும், தாரக் தாஸ் சிக்ஷா சதன் என்ற உயர்நிலைப் பள்ளியும், அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன.நல்ல கட்டடம், மின் வசதி, கழிவறை வசதி, காம்பவுண்ட் சுவர், ஆசிரியர்கள், அவர்களுக்கு, ஆயிரக்கணக்கில் மாதச் சம்பளம் என, அனைத்தும் இருக்கிறது. ஆனால், மாணவர்கள் தான், ஒருவர் கூட கிடையாது. பெண்கள் பள்ளியில், ஏழு ஆசிரியைகளும், இரண்டு உதவியாளர்களும் உள்ளனர்.அதுபோல, உயர்நிலைப் பள்ளியில், ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர்.
விளையாடுவர்:ஆசிரியர்கள், ஊழியர்கள் என, அனைவரும் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வந்து விடுவர். கையில் கொண்டு வரும் செய்தித் தாள்களைப் பிரித்து, உலக நடப்புகளை அலசுதல் அல்லது அவிழ்த்து விட்டிருக்கும் தலை முடியைப் பின்னுதல், ஜாலியாக ஓடிப்பிடித்து விளையாடுதல் என, நேரத்தைப் போக்குகின்றனர்.மாலை, 5:00 மணி ஆனதும், தங்கள் பையைத் தூக்கி, வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்று விடுகின்றனர். இப்படியே, 2009ம் ஆண்டிலிருந்து, கடமையாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, தவறாமல் மாதச் சம்பளம் வந்து விடும். விடுமுறை, விடுமுறை கால பலன்கள், ஓய்வு, கோடை விடுமுறை என, அனைத்தும் கிடைத்து விடுகிறது.
சிக்கிக் கொண்டனர்:ஆனால், மாணவர்களை மட்டும், இவர்களால் சேர்க்க முடியவில்லை. "மாணவர்கள் இல்லாத பள்ளியில், எத்தனை காலம் தான் சும்மா பொழுது போக்குவது, வேறு பள்ளிகளுக்கு மாற்றி விடுங்கள்' என, அவர்கள், மாநில கல்வித்துறைக்கு எழுதிய வண்ணமாகவே உள்ளனர்; ஆனால், அது, இன்னும் கேட்கப்படவில்லை.கடந்த, 2007ம் ஆண்டிலிருந்து, படிப்படியாக, மாணவர்கள் வருகை குறைந்து வந்துள்ளது. அப்போதே, உஷாரான சில ஆசிரியர்கள், ஊழியர்கள், வேறு பள்ளிகளுக்கு, இட மாறுதல் கேட்டுச் சென்று விட, விவரம் இல்லாத ஆசிரியர்கள் மட்டும் சிக்கிக் கொண்டனர்.

இந்த இரு, மாணவர் இல்லாத பள்ளிகள் குறித்து, நாடியா மாவட்ட கல்வி அதிகாரி, பிஸ்வஜித் பிஸ்வாஸிடம் கேட்டபோது, ""எங்களுக்கும் தெரியும், வேறு என்ன செய்வது; ஒன்றும் செய்ய முடியவில்லை. மேலதிகாரிகளிடம் தெரிவித்து விட்டேன். அவர்களாக பார்த்து, ஏதாவது செய்தால் தான் உண்டு. என்னால் எதுவும் முடியாது,'' என்றார்.இது குறித்து, மாவட்ட கலெக்டர், அபினவ் சந்திராவிடம் கேட்டபோது, ""அப்படியா... எனக்குத் தெரியாதே! நடவடிக்கை எடுக்கிறேன்,'' என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக