திங்கள், 22 அக்டோபர், 2012

தினமலருக்கு நன்றி.? திமுகவுக்கு அதிக விளம்பரம் தருவதால்

தி.மு.க., மத்திய இணை அமைச்சர் பழனி மாணிக்கத்திற்கும், தி.மு.க., எம்.பி.,க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலுவுக்கும் இடையே, பகிரங்கமோதல் வெடித்துள்ளது.ஸ்டாலின் ஆதரவாளரான பழனி மாணிக்கத்திற்குபோட்டியாக, தஞ்சாவூர்லோக்சபா தொகுதியை, ஸ்ரீபெரும்புதூர், எம்.பி.,யாக உள்ள டி.ஆர்.பாலு குறி வைத்திருப்பதும், அதற்கு அழகிரி ஆதரவு கொடுத்திருப்பதும் தான்,மோதலுக்கு பின்னணியாகக் கூறப்படுகிறது.இந்தமோதலால், அதிருப்தி அடைந்துள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதி, கடந்த நான்கு நாட்களாக அறிவாலயத்திற்கு வராமல், தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். வரும் லோக்சபா தேர்தலில், "சிட்டிங்' தொகுதியான ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலோ, சென்னை தொகுதிகளிலோ போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என, டி.ஆர்.பாலு கணித்துள்ளார்.
ஏற்கனவே, தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதற்கு தடையாக உள்ள ஸ்டாலின், தலைநகரை ஒட்டியுள்ள பகுதிகளில்போட்டியிட்டால், உள்ளடிவேலை செய்து,தோற்கடித்து விடுவார் என்ற பயமும் உள்ளது.இதனால், கட்சித் தலைவர் கருணாநிதி பாணியில், சொந்த ஊருக்கு இடம் பெயர முடிவு செய்துள்ளார். தஞ்சாவூர்லோக்சபா தொகுதியில் உள்ள, மன்னார்குடி சட்டசபை தொகுதியில், டி.ஆர்.பாலு பிறந்த, தளிக்கோட்டை கிராமம் உள்ளது. எனவே, தஞ்சை தொகுதியில் போட்டியிடுவது என, அவர் முடிவு செய்துள்ளார்.
தன்னைதேர்ந்தெடுத்த, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை விட்டு விட்டு, தஞ்சை மாவட்டத்தில், புதிய ரயில் பாதைகளுக்கான பணிகள், புதிய ரயில்களை இயக்குவதற்கான முயற்சிகளில், டி.ஆர்.பாலு இறங்கினார். ரயில்வே நிலைக்குழு தலைவராக இருப்பதால், இந்த பணியை அவரால் எளிதாக நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது.இவரது இந்த காய் நகர்த்தல், தஞ்சை மாவட்ட, தி.மு.க., செயலரும், மத்திய இணை அமைச்சருமான பழனி மாணிக்கத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தன் தொகுதியைப் பறிக்க, அழகிரி ஆதரவுடன், டி.ஆர்.பாலு செயல்படுவதாக, கட்சித் தலைமையிடம் அவர் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.இதன் உச்சகட்டமாக, பழனி மாணிக்கத்தின் வீட்டருகே, ரயில்வே கீழ்பாலம் அமைக்க, 2.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, டி.ஆர்.பாலு அறிவித்தார். அதற்கு, அப்பகுதி மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்து, பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர். இந்த செயலால், பழனிமாணிக்கம் கடும் விரக்தியடைந்தார்.மேலும், "தஞ்சையிலிருந்து, ஒரத்தநாடு வழியாக பட்டுக்கோட்டைக்கு, புதிய ரயில் பாதை ஆய்வு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது; வரும் ரயில்வே பட்ஜெட்டில், இதற்கான அனுமதி பெற்றுத் தருவேன்' என, டி.ஆர்.பாலு மூன்று நாட்களுக்கு முன் அறிக்கை விடுத்தார். டி.ஆர்.பாலுவின் திடீர் அறிவிப்பையடுத்து, அவருக்கு நன்றி தெரிவித்து, தொகுதி மக்கள், வர்த்தக அமைப்புகள் சார்பில், பிரமாண்டபேனர்கள் வைக்கப்பட்டன. தன் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து, தனக்கு தெரியாமல், அறிக்கை வெளியிட்ட டி.ஆர்.பாலு மீது, பழனி மாணிக்கத்திற்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, பத்திரிகையாளர்களை அழைத்து, "என்னை செயல்படாத எம்.பி., போலவும், தொகுதி நலனில் அக்கறை காட்டாதவர் போலவும் காட்ட, டி.ஆர்.பாலு முயற்சிக்கிறார். எந்தத் திட்டத்தை துவங்கினாலும், அதை முழுமையாக முடிக்காமல், வெறும் விளம்பரத்தை மட்டுமே தேடிக் கொள்ள முயல்கிறார்' என, வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.மேலும், "டி.ஆர்.பாலு, வகையினருக்கு சொந்தமான, வடசேரியில் அமைத்துள்ள சாராய தொழிற்சாலையை மூடவேண்டும். இல்லாவிட்டால், அப்பகுதி மக்கள் நடத்தும் போராட்டத்தில், நானும் பங்கேற்பேன்' என, தெரிவித்தார்.
இது குறித்து, டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி எம்.எல்.ஏ.,வுமான டி.ஆர்.பி.ராஜா கூறுகையில்,""மக்களுக்கு சேவை செய்வது குற்றம் என்றால், அந்த குற்றத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்,'' என, தெரிவித்துள்ளார்." டி.ஆர்.பாலுவின் மீது, நடவடிக்கை எடுக்கவேண்டும்' என, கருணாநிதியை வலியுறுத்துவதற்காக, பழனிமாணிக்கம்,நேற்றிரவு சென்னை வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டி.ஆர்.பாலு - பழனி மாணிக்கம் இடையேயான பகிரங்கமோதலால், கருணாநிதி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால், கடந்த நான்கு நாட்களாக, கருணாநிதி அறிவாலயம் வராமல், தன் அதிருப்தியை அவர் வெளிப்படுத்தி வருவதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மோதிக்கொள்ளும் இருவரும், ஸ்டாலின் - அழகிரி ஆதரவாளர்களாக இருப்பதால், யார் மீது நடவடிக்கை எடுப்பது என்ற குழப்பத்தில் கருணாநிதி உள்ளதாகவும், அதனால், "யாரும் என்னை சந்திக்கவேண்டாம்' என தெரிவித்து விட்டதாகவும், தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

-நமது சிறப்பு நிருபர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக