வியாழன், 25 அக்டோபர், 2012

ரெயில்களில் இனி நவீன தொழில்நுட்ப கழிவறை

ரெயில்களில் தற்போது உள்ள கழிவறைகளும் அவற்றை பராமரிக்கும் முறைகளில் ஏற்படும் பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. சாக்கடை, கழிவு நீர் கால்வாய்களில் இறங்கி தொழிலாளர்கள் கழிவுகளை சுத்தம் செய்யக்கூடாது என்பதால் எந்திரம் மூலம் அடைப்புகள் சரி செய்யப்படுகின்றன. ரெயில்வே துறையில் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ரெயில் பெட்டிகளில் கழிவறை முறையாக சுத்தம் செய்வது இல்லை. அதனால் பெட்டிக்குள் துர்நாற்றம் வீசும்.


30 கிலோ மீட்டர் வேகத்திற்கு குறைவாக ரெயில் செல்லும் போது கழிவறையின் கதவு தானாக மூடிக்கொள்ளும். அப்போது கழிவறையை பயன்படுத்தினால்கூட அவை கீழே விழாது. 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் போதுதான் கழிவறையின் கதவு திறக்கும். இந்த வசதி தான் தற்போது தெற்கு ரெயில்வே உள்பட அனைத்து ரெயில்களிலும் உள்ளது.

இத்தகைய முறையினால் மனித கழிவுகள் ஒவ்வொரு பெட்டியிலும் பெருமளவில் தேங்கி விடுகின்றன. பெட்டியை பராமரிக்கும் போது கழிவறையை சுத்தம் செய்யும் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

மேலும் ஓடும் ரெயிலில் கழிவறையை பயன்படுத்தும் போது சிறுநீர், மலம், கழிவுநீர் போன்றவை தண்டவாளத்தில் விழுந்து ‘துரு’ பிடித்து தண்டவாளம் விரைவில் சேதம் அடைகிறது. ரெயில்கள் மேம்பாலத்தை கடக்கும்போது கழிவுகள் கீழே செல்லும் மனிதர்கள் மீது விழுந்து பொது சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்கின்றன.

இதனால் தற்போது உள்ள கழிவறை பராமரிப்பு முறையை அகற்றிவிட்டு நவீன தொழில்நுட்ப முறையில் கழிவறை அமைக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. பாக்டீரியாக்கள் மூலம் கழிவுகளை சுத்தப்படுத்தி துர்நாற்றம் இல்லாமல் கழிவறையை பராமரிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளது.

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) மூலம் புதிய கழிவறை திட்டத்தை செயல்படுத்த உள்ளது. மனித கழிவுகளை சுத்தம் செய்து துர்நாற்றம் வீசாமல் தண்ணீராகவும் கியாசாகவும் மாற்றக்கூடிய சிறப்பு பாக்டீரியாக்களை உருவாக்கி பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பாக்டீரியாக்கள் மனித கழிவுகளை முற்றிலும் தண்ணீராக மாற்றி விடுவதோடு துர்நாற்றம் இல்லாமலும் ஆக்கி விடுகிறது. ஜெர்மனி தொழில்நுட்பத்திலான இந்த நவீன முறையினால் பாக்டீரியாக்கள் மனித கழிவை நாற்றத்தை அழித்து விடுகின்றன.

சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கூடிய இந்த கழிவறையை பராமரிப்பது எளிதானது. கழிவுகள் தண்டவாளத்தில் விழாமல் கியாசாக மாறி விடுகின்றன. பாக்டீரியாக்கள் மூலம் மனித கழிவை சுத்தமாக்கும் இந்த திட்டத்தை பரீட்சார்த்த முறையில் சென்னை-கவுகாத்தி-சென்னை ரெயிலில் முதலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுபோல அனைத்து ரெயில்களிலும் படிப்படியாக கழிவறைகள் மாற்றப்படும் என்று சென்னை டிவிசன் சீனியர் டிவிசனல் மெக்கானிக்கல் என்ஜினீயர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

ரெயில்களில் கழிவறை பராமரிப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இந்தியன் ரெயில்வே முடிவு செய்துள்ளது. மனித கழிவுகளை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள சிக்கலை சரிசெய்வதற்காக சிறப்பு பாக்டீரியாக்கள் மூலம் கழிவுகளில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு துர்நாற்றம் அகற்றப்படுகிறது.

மேலும் கழிவுகள் தண்ணீராகவும் கியாசாகவும் மாறி வெளியேறுகின்றன. இதனால் கழிவறை துர்நாற்றம் இல்லாமல் சுத்தமாக இருக்கும். அவற்றை சுத்தப்படுத்துவதும் எளிது. கழிவுகள் சுகாதாரமான முறையில் வெளியே வரும். புதிதாக விடப்படும் ரெயில் பெட்டிகளிலும் ஏற்கனவே உள்ள பெட்டிகளிலும் இந்த கழிவறைகள் அமைக்கப்படும் இன்னும் 5 வருடத்தில் அனைத்து ரெயில்களிலும் இந்த வசதி செய்யப்படும். இதனால் தண்டவாளத்தில் ஆயுட்காலம் நீடிக்கும். ‘துரு’ பிடிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக