செவ்வாய், 30 அக்டோபர், 2012

ஏழைகளுக்கில்லை நீதித் தராசு!

படம்: நன்றி தி இந்து
சென்னையில் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி நடந்த மாநகரப் பேருந்து விபத்து ஒன்றை என்றும் மறக்கமுடியாத அளவுக்கு நம் நினைவில் நிறுத்தி வைத்துள்ளன செய்தி ஊடகங்கள். பாரிமுனையிலிருந்து வடபழனிக்கு செல்லும் 17M என்கின்ற பேருந்துதான் விபத்துக்கு ஆளானது. அண்ணா மேம்பாலத்தில் பேருந்து சென்று கொண்டு இருக்கும் போது, இடது வளைவில் திரும்பும் போது, மையவிலக்கு விசையின் தாக்கத்தால் வலது பக்கம் தள்ளப்பட்டு மேம்பாலச் சுவரை உடைத்துக்கொண்டு தலைக்குப்புற கீழே விழுந்தது.
பேருந்தில் இருந்த 40 பயணிகளும் சிறு காயங்களுடன் தப்பினர். ஓட்டுனர் பிராசத் எலும்பு முறிவுகளுடன் பலத்த காயம் அடைந்தார்.

கடமையே கண்ணும் கருத்துமாக உள்ள போக்குவரத்து போலீஸ், ஓட்டுனர் பிரசாத் மற்றும் நடத்துனர் ஹேமகுமார் ஆகியோரை கைது செய்தது, ஓட்டுனர் பிரசாத்தின் ஓட்டுனர் உரிமத்தை கைப்பற்றியது. அவர் மீது, பிரிவு 279 (கண்மூடித்தனமாகவும் கவனக்குறைவாகவும் வண்டி ஓட்டுதல்), பிரிவு 337 (உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்கள் மூலம் பிறரை காயப்படுத்துதல்) பிரிவு 338 (உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்கள் மூலம் பிறரை மோசமாகக் காயப்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
‘ஓட்டுனர் செல்பேசியில் பேசிக் கொண்டே ஓட்டியதால்தான் விபத்து ஏற்பட்டது’ என்று பத்திரிகைகள் வதந்தியை பரப்பியிருந்தாலும், காவல் துறை கைப்பற்றியுள்ள பதிவுகளின் படி ஓட்டுனர் டிப்போவிலிருந்து புறப்படுவதற்கு சற்று முன்பாகவும், விபத்து நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகும்தான் தனது செல்பேசியில் பேசியிருக்கிறார். ‘பேருந்து திரும்பும் போது ஓட்டுனர் இருக்கை நகர்ந்ததால் பேலன்ஸ் இழந்து விட்டதால்தான் விபத்து நடந்தது’ என்றும் ‘பேருந்து தடுப்புக் கம்பியை இடித்ததும், தான் வேகத்தைக் கட்டுப்படுத்தி விட்டதாகவும்’ ஓட்டுனர் கூறியிருக்கிறார்.
போக்குவரத்துக் கழகம் ஓட்டுனர் பிரசாதை 4 மாத காலத்திற்கு தற்காலிக பணி நீக்கம் செய்தது. உண்மைகளை ஆராயந்து நீதி வழங்க தனி விசாரணை கமிஷன் அமைத்தது. விசாரணையின் முடிவில் 22.10.12 முதல் அவரை நிரந்தர பணி நீக்கம் செய்து உள்ளது. ‘உயிர்ச் சேதம் ஏற்படும் விபத்தில் கூட நிரந்தர வேலை நீக்கத் தண்டனை வழங்குவது இல்லை என்ற போதிலும் இந்த விஷயத்தில் செய்தி ஊடகங்கள் செய்த கவன ஈர்ப்பினால் விஷயம் பலமடங்கு பெரிதாகி உயர் அதிகாரிகளின் கவனத்துக்கும் மாநில அரசுக்கும் போய் விட்டதால் இந்த அளவுக்கு தண்டனை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது’ என்று தன் கையறு நிலையை விளக்குகிறது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்.
இந்த வழக்கையும் தீர்ப்பையும் எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப் போவதாக மாநகர போக்குவரத்து கழக தொழிலாளர் முற்போக்கு சங்கம் (MTC EMPLOYEE PROGRESSIVE UNION) உறுதி அளித்து உள்ளது.
தமது சொகுசு கார்களில் போகும் போது நூற்றுக் கணக்கான பயணிகளை சுமந்து கொண்டு பேருந்துகளை ஓட்டிச் செல்லும் ஓட்டுனர்களை கசப்புடன் பார்க்கும் படித்த மேட்டுக் குடியினரில் சிலர் ‘சட்டம் தன் கடமையை சரியாக செய்து உள்ளது’ என்று திருப்திப் பட்டுக் கொள்ளலாம்.
ஆனால், உயிர்ச் சேதம் ஏற்படும் விபத்துகளுக்கு கூட, அதில் சம்பந்தப்பட்ட ஓட்டுனர்களை 90 நாள் மறு பயிற்சிக்கு அனுப்பி, யோகா மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான பயிற்சிகள் அளித்து அவர்களை மீண்டும் வேலையில் அமர்த்திக்கொள்வது தான் போக்குவரத்து கழகத்தின் நடைமுறையாக உள்ளது. உயிரிழப்பு எதுவும் நிகழாத விபத்துக்காக ஓட்டுனர் பிரசாதை நிரந்தர பணிநீக்கம் செய்தது அநியாயமான நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை.
சட்டம் எல்லா தருணங்களிலும் ஒழுங்காக பாரபட்சம் இல்லாமல் தன் கடமையை செய்கிறதா? கடமையைச் செய்யும் வழக்குகளின்  சதவீதம் என்ன? அது யாரைப் பாதுகாக்கிறது?
ஓட்டுனர் பிரசாத் மீது போடப்பட்டிருக்கும் ‘உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்கள் மூலம் பிறரை காயப்படுத்துதல்’ என்ற அதே குற்றத்தை உண்மையாக செய்த பலர் இன்னும் செல்வாக்குடன் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். நமது அதிகார அமைப்பின் நீண்ட கரங்கள் அவர்களைப் பிடிக்க முடியவில்லை.
1984 டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி அன்று நடைபெற்ற போபால் நச்சுவாயு விபத்தில் பல ஆயிரம் மக்களை கொன்று குவித்து, பல ஆயிரக்கணக்கான மக்களை சட்டப் பிரிவு 338ன் படி ஊனமாக்கிய கொலைகாரன் வாரன் ஆண்டர்சனுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது? 26 ஆண்டுகள் கழித்தும் நீங்காத இந்தத் துயரத்திற்கு எந்த சட்டப் பிரிவின் கீழ் நீதி வழங்கப் போகிறது அரசு? கிணற்றில் போட்ட கல்லைப் போல, அசையாமல் இந்த வழக்கு இத்தனை வருடம் அப்படியே இருக்கிறது.
ஜூலை 2010 ஆம் ஆண்டு சென்னை நோக்கியா ஆலையில் நடைபெற்ற விஷவாயு கசிவினால் மயங்கியும், ரத்த வாந்தி எடுத்தும் வாழ்வா சாவா என்று நிலையில் மருத்துவமனையில் போராடிய 200க்கும் அதிகமான ஆண் பெண் ஊழியர்களுக்கு என்ன நியாயத்தை இதுவரை சொல்லி உள்ளது இந்த அரசாங்கம்? 5 ஆண்டுகளாக சுகாதாரத் துறையின் சான்றிதழ் இல்லாமல் இயங்கி வந்த இந்த பன்னாட்டு நிறுவனத்தை அன்று திமுக அரசு காத்து நின்றதைப் போல இன்று அதிமுக அரசு பாதுகாக்கிறது. இந்த விஷயத்தில் எங்கு போனது நீதியின் கடமை உணர்வு?
அண்மையில் ரூ 7,000 கோடி பணத்தை வங்கிகளிடம் இருந்து வாங்கி ஏப்பம் விட்டு, ஊழியர்களுக்கும் பல மாதமாக ஊதியம் தராமல் ஏமாற்றி நாமத்தை போட்டு அவர்களை தற்கொலைக்குத் தள்ளியுள்ள விஜய்  மல்லையாவின் கிரிமினல் நடவடிக்கை ‘பிறருக்கு ஏற்படுத்திய பாதிப்புகளைக்’ குறித்து யாரும் இதுவரை கேள்வி கேட்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
“விபத்து” என்ற சொல்லுக்கு பொருள் புரியாமல், இது என்னவோ திட்டமிட்டு செய்த தவறை போல, ஓட்டுனர் பிரசாதிற்கு அநீதியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொட்டிக் கிடக்கும் திட்டமிட்ட அநியாயச் செயல்களை காற்றில் பறக்க விட்டுவிட்டு ஓட்டுனர் பிரசாதுக்கும் அவர் குடும்பத்திற்கும் கிடைத்து இருக்கும் தண்டனை அநீதியானது! பலிக்கின்றவர்களிடம் மட்டும் சட்டம், நீதி, ஒழுங்கு என்று பேசும் அதிகார வர்க்கத்தின் தான்தோன்றித்தனத்துக்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு தான் இந்த தண்டனை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக