திங்கள், 8 அக்டோபர், 2012

புலிகளின் வதை முகாம்களில் துன்புற்ற தோழர் மணியம்


 http://www.thenee.com/html/081012-2.html
புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (68)
68. புலிப் புலனாய்வுப் பிரிவினரின் பெயர் விபரங்களும், மரணிக்கப்பட்டவர்களின் ஓலத்தால் மிரண்ட புலியும்!
புலிகளின் கிளிநொச்சிப் பொறுப்பாளனாக இருந்த திசை என்பவன், தனது பொறுப்பிலிருந்த கைதிகளுக்குச் செய்த சித்திரவதைகள் எண்ணிலடங்காதவை. பொதுவாகவே புலிகளால் கைது செய்யப்படுபவர்கள் அடித்துத் துவைத்து சித்திரவதை செய்யப்படுவது சர்வசாதாரண விடயம். இந்தச் சித்திரவதைகளின் போது தாம் நினைத்தவாறு கைதி ஒருவர் நடந்து கொள்ளவில்லையென்றால், அவர் சாகடிக்கப்படுவதும் சாதாரண விடயம்.
இந்தத் திசை என்பவன் இவற்றைத் தவிர சில பிரத்தியேக நடைமுறைகளும் வைத்திருந்தான். அவனது பொறுப்பில் இருந்தவர்களுக்கு ஒரு நாளைக்கு இரு நேரம்தான் உணவு (அதை என்று உணவு சொல்வதே நாம் மனம் அறிந்து சொல்லும் பொய்யாகும்) வழங்கப்படும். உணவருந்தும் வேளைகளில் ஒரு குவளை தண்ணீர் மட்டுமே குடிப்பதற்கு வழங்கப்படும். இடையில் தண்ணீர் கேட்டால், பெரும் இழுத்தடிப்புக்குப் பின்னர் ஒரு குவளை தண்ணீர் மட்டும் வழங்கப்படும். அதுவும் தூசண வார்த்தைகளால் வசைமாரி பொழிந்த பின்னரே வழங்கப்படும்.ஒரு நாளைக்கு ஒரு தடைவ மட்டுமே மலசலம் கழிக்கச் செல்லலாம். இடையில் கழிக்க வேண்டிவந்தால், சிறைச்சாலைக்குள் உள்ள சட்டி ஒன்றுக்குள்தான் கழிக்க வேண்டும். கழுவுவதற்கான வசதிகள் இருக்காது. காலையில் பல் விளக்குவதற்கு எந்தவித வசதிகளும் கிடையாது. முகம் கழுவுவதற்கு மட்டும் ஒரு குவளை தண்ணீர் வழங்கப்படும். குளிப்பதற்கு மாதத்தில் இரு தடவைகள் மட்டும் வாய்ப்பு வழங்கப்படும். சிலவேளைகளில் அதுவும் ஒரு தடவை மட்டுமே.

சிறைக்குள் இருக்கும் நேரங்களில் கைதிகள் ஒருவருக்கொருவர் கதைக்கக்கூடாது. மலசலம் கழிப்பது, சாப்பிடுவது தவிர்ந்த நேரங்களில் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டியபடி இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் கண்களைக் கட்டிய துணிகளை விலக்கினாலோ அல்லது மற்றவர்களுடன் கதைத்தாலோ, அடி, உதை வழங்கப்படுவதுடன், அவரது கைகளும் பின்புறமாகக் கட்டப்படும்.

இந்த நிலைமைகளை (கொடுமைகளை) எண்ணிப் பார்க்கையில், கொடுங்கோலன் ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரின் சிறைகளிலோ, அல்லது இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை அடித்துத் துவைத்த பிரிட்டிஸ் இந்தியாவின் அந்தமான் போன்ற இடத்துச் சிறைகளிலோ கூட, இந்த மாதிரி நடந்திருக்குமா என்றுதான் எண்ணத் தோன்றியது.

இந்தத் திசை என்பவன் ஒருநாள் நாம் இருந்த ஆனைக்கோட்டை வதை முகாமுக்கு வந்தபோது. என்னை விசாரணை செய்து கொண்டிருந்த தயாபரனிடம் வந்து என்னைப் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்த பின்னர், “ஐயாவை என்னுடைய விருந்தாளியாகக் கொஞ்ச நாளைக்கு அனுப்பி வையன்” என தயாபரனிடம் ‘நகைச்சுவை’யாகக் கூறிவிட்டு, “என்ன ஐயா, உங்களுக்கு வர விருப்பம் தானே?” என்னிடமும் ‘பெரிய ஜோக’; அடித்துவிட்டுச் சென்றான்.

புலிகளினால் நடாத்தப்பட்டு வந்த பல டசின் கணக்கான வதை முகாம்களுக்கப் பொறுப்பாக இருந்த ஒவ்வொருவரும், ஒரு குட்டிச் சர்வாதிகாரிகளாகச் செயற்படுவதற்கு புலிகளின் தலைமைப்பீடம் தாராளமான அனுமதி கொடுத்திருந்ததையே இது காட்டுகிறது. புலிகளின் இன்னொரு சிறையான ஒட்டிசுட்டான் - புதுக்குடியிருப்பு வீதியிலிருக்கும் மன்னாங்கண்டல் பகுதியில் அமைந்திருந்த வதை முகாமில் இருந்து விஜயன் என்றொரு (புலி இயக்கத்திலிருந்த) கைதி எமது ஆனைக்கோட்டை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தான். அவர் சொன்ன தகவல்களின்படி, அங்கும் திசை என்பவனின் கிளிநொச்சி வதை முகாமில் இருந்த நிலைமைகளே இருந்துள்ளன.

இந்த வதை முகாம்களில் விசாரணைகளில் ஈடுபடுபவர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை, புலி விசாரணையாளர்களது நடவடிக்கைகளில் இருந்து அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. சாதாரணமாக சமூகத்தில் இருக்கும் ஒரு மனிதனிடம் இயல்பாகவே சில நல்ல குணங்கள் இருக்கும். அவன் தாய் தகப்பன், தனது ஆசிரியர், ஊர் பெரியவர், மதகுரு, அரச அதிகாரி என் பலருக்கு மரியாதை கொடுப்பவனாக இருப்பான்.

களவு செய்வது, பொய் பேசுவது, பெண்களிடம் ஒழுங்கீனமாக நடப்பது, சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கு அவனுக்கு இலேசில் தற்துணிபு வராது. ஒருவன் தனது குடும்பத்தாரால், சமூகத்தால், நண்பர்களால் என, அனைவராலும் ஏதோ ஒரு காரணத்தால் ஒதுக்கப்படும் போதுதான், அவன் சாதாரண மனித இயல்புகளை இழந்து சில தப்பான வேலைகளில் ஈடுபடுகிறான்.

ஆனால் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் விசாரணையில் ஈடுபடுபவர்களுக்கு, முதலில் இந்த மனிதப் பண்புகள் எல்லாம் இல்லாதொழிக்கப்படுகின்றன. தனது தாய் தந்தையர் உட்பட அனைவரையும் வெறுப்பதற்கு அவனுக்குப் போதிக்கப்படுகிறது. இவ்வாறு மூளைச் சலவை செய்த பின்னர், அவனது கையில் அகப்படும் மனித உயிர்களை எவ்வாறு ஈவிரக்கமற்று வதை செய்வது எனப் பயிற்றுவிக்கப்படுகிறது. மனிதர்களை அடித்துச் சித்திரவதை செய்யவும், கொலை செய்யவும் தயக்கமில்லாத ஒருவனாக, அந்தப் புலி உறுப்பினன் புதிதாக வார்த்தெடுக்கப்படுகிறான்.

இதை நான் புலிகளின் ஆனைக்கோட்டை வதை முகாமில் இருந்த போது நன்கு அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அங்கு பொறுப்பாளன் காந்தியின் தலைமையில் இருந்த சுமார் 20 வரையிலான புலனாய்வு விசாரணையாளர்களில் பெரும்பாலும் எல்லோரிடமும் இந்த மனித விரோதக் குணாம்சத்தை அவதானித்தேன். நான் புலிகளின் வதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு ஏறக்குறைய 20 வருடங்கள் (1991 டிசம்பர் 26 – 1993 ஜூன் 06) கழிந்துவிட்டதால், அந்த வதை முகாமில் விசாரணையாளர்களாக இருந்த ஒரு சிலரின் பெயர்கள் மறந்துபோய்விட்டாலும், பலரின் பெயர்கள் இன்னமும் எனது ஞாபகத்தில் உள்ளன. யம தூதர்களை இலேசில் மறந்துவிட முடியுமா?

அவர்களில் காந்தி தான் தலைக் கடா. அவனைத் தவிர என்னை விசாரித்த தயாபரன், சேவியர் (இவன், எனக்கு சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் உயிரியல் கற்பித்த மருதனார் மடத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் ஆசிரியரின் மகன்), அம்புறோஸ், வால்மீகி, வசீகரன், மெய்யப்பன், விநோதன், சாள்ஸ், இன்பம், சசிகரன், சின்னச்சங்கிலி, பெரிய சங்கிலி, ஆதவன், நல்லதம்பி, சின்னமணி இன்னும் சிலர். உதயன், நீதன், சின்னவன் இன்னும் சிலர் இடையிடையே வந்து போவார்கள்.

இவர்களில் நல்லதம்பி, சின்னமணி இருவரும் கைதிகளை விசாரிப்பதில் ஈடுபடுவதில்லை. அவர்கள் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்குப் புலிகளின் தலைமையால் பயன்படுத்தப்பட்டவர்கள் எனப் பின்னர் அறிந்தேன். சின்னமணி ஆவரங்காலைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். நல்லதம்பி திரிகோணமலை பாலையூற்றைச் சேர்ந்தவன்.

இந்த இருவரும் சில நாட்களில் சிறைச்சாலைக் கதவருகில் வந்து நின்று உள்ளே உள்ள கைதிகளை நோட்டம் விடுவதுண்டு. சிலரைப் பார்த்து, ‘அவனது முகத்தில் கண்களில் பிரேதக்களை இருந்தது’ என்று கூறுவார்கள். அதேபோல இந்த இருவரது கண்களும் இருள்படிந்து, ஒளியிழந்து, மரணக்களையுடன் தான் எப்பொழுதும் இருக்கும். அப்படி அவர்கள் சிறை வாசலில் வந்து நின்று நோட்டம் விட்டால், உள்ளே இருந்த அனுபவமிக்க புலிக் கைதிகள் உடனடியாகவே ஆரூடம் கூறி விடுவார்கள். அதாவது ‘இன்றிரவு யாரோ ஒருவனுக்கோ அல்லது ஒரு சிலருக்கோ ‘மண்டையில் போட’ப் போகிறார்கள்’ என்று.

நல்லதம்பி சிறைச்சாலை வாசலுக்கு வரும் நேரங்களில் முதலாவதாக இருக்கும் அன்சார் என்ற முன்னாள் புலி இயக்க உறுப்பினனை அழைத்து, அவனுடன் சில நிமிட நேரங்கள் உரையாடிவிட்டு, சிறைக்கம்பிகளால் கைகளை நுழைத்து அவனது தலையில் குட்டிவிட்டுச் செல்வது ஒரு வழமை. அவ்வளவு தூரம் அன்சார் மீது அவனுக்கு ஒரு ‘பிரியம்’. (மலையகத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞனான அன்சார், இயக்கத்தில் இருக்கும்போது ஒட்டிசுட்டான் பகுதியில் காவல் கடமைக்குச் செல்லும் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் இருந்த பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த காரணத்தால், கைது செய்யப்பட்டு எம்முடன் அடைக்கப்பட்டிருந்தான்)

நல்லதம்பி அன்சாருடன் கதைக்கும் நாட்களில் என்னுடனும் சிறிது நேரம் உரையாடுவது வழக்கம். இருந்தால் போல் சில நாட்களாக நல்லதம்பியைக் காணவில்லை. சுமார் மூன்று வாரங்கள் கழித்து ஒருநாள் நல்லதம்பியின் தலைக் கறுப்பு சிறை வாசலில் தெரிந்தது. நல்ல பருமனான நல்லதம்பி உருவம் தெரியாத அளவுக்கு துரம்பாக இளைத்துப் போயிருந்தான். குரலில் பழைய உத்வேகம் இல்லை.

வழமைபோல அன்சாருடன் கதைத்த பின்னர் என்னைப் பார்த்துச் சிரித்தான். பொதுவாகப் புலிகளுடன் கண்டபடி யாரும் கதைப்பதில்லை. நல்லதம்பி என்னுடன் ஓரளவு நல்ல முறையில் பழகுவதால், “எங்கை உங்களைக் கொஞ்ச நாளாய் காணேல்லை” என்று கேட்டு வைத்தேன். அவன் உடனும் என்னைச் சைகை மூலம் தன்னருகில் வருமாறு அழைத்தான்.

நான் சற்றுத் தயக்கத்துடன் அவன் அருகே சென்றேன். அவன் மிகவும் மெதுவான குரலில் தனக்குக் கடுமையான சகவீனம் வந்து, படுத்த படுக்கையாகக் கிடந்ததாகச் சொன்னான். வருத்தம் மிகக் கடுமையாக இருந்ததால், பாலையூற்றிலுள்ள தனது குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டு, அவனது தாய் அங்கிருந்து வந்து, ஒரு வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்து, தனக்குச் சமைத்துத் தந்துவிட்டு, இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் பாலையூற்றுக்குத் திரும்பிச் சென்றதாகச் சொன்னான்.

சுகவீனம் என்றால் “என்ன காய்ச்சலா?” என நான் மீண்டும் வினவினேன். சிறிது நேரம் யோசித்தவன் “இல்லை வேறை பிரச்சினை” என்றான். நான் அதற்கு மேல் அவனைத் துருவ விரும்பவில்லை. ஆனால் அவனாகவே விடயத்தைச் சொன்னான். தனக்கு யாரோ செய்வினை செய்துவிட்டான்கள் என்றும், தன்னைப் பேய் பிடித்துவிட்டது என்றும் சொல்லி, தாய் வந்து நாவாந்துறையிலுள்ள ஒருவரிடம் கூட்டிச்சென்று மந்திரித்து கையில் நூல் கட்டிவிட்டது என்று தனது கையிலிருந்த நூலைக் காட்டினான்.

பேய் பிடித்தது என்பதற்கு என்ன அத்தாட்சி என நான் கேட்டேன். தாங்கள் (புலி உறுப்பினர்கள்) சிலர் எம்மை அடைத்து வைத்திருந்த சிறைச்சாலைக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில்தான் தங்குவது வழமை என்று, அந்த வீடு இருந்த திசையைக் கையால் சுட்டிக்காட்டினான். அந்த வளவின் மூலையில் ஒரு புளிய மரம் நிற்கிறது என்றும், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அந்தப் புளிய மரத்திலிருந்து ஆட்கள் அழுவது போன்ற விதம் விதமான ஓலங்கள் கேட்பதாகவும், தான் அதுபற்றி மற்றவர்களுக்கக் கூறியபோது, அவர்கள் தங்களுக்கு அப்படி எதுவும் கேட்கவில்லை என்று சொன்னதாகவும் கூறினான்.

அப்படி அலறல் குரல் கேட்ட ஒர் இரவு தான் தன்னுடன் படுத்திருந்த மற்றவர்களை எழுப்பி விடயத்தைச் சொன்னபோது, அவர்கள் தன்னையும் கூட்டிக்கொண்டு புளிய மரத்தின் அருகே சென்று பார்த்த போது, சில உருவங்கள் தலைகீழாகத் தொங்கியதைக் கண்டு தான் அலறிக்கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்ததாகவும், ஆனால் மற்றவர்கள் அப்படி எதுவும் தங்கள் கண்களுக்குத் தெரியவில்லை எனத் தன்னை நையாணடி செய்ததாகவும் சொன்னான். அதன் பின்னரே தனக்குக் காய்ச்சல் வந்து படுத்த படுக்கையாகக் கிடந்ததாகவும் சொன்னான். காய்ச்சலாகக் கிடந்த நேரத்திலும் கனவில் பலர் தன்னைக் கொல்வதற்கு கத்திகளுடன் துரத்துவது போலக் காட்சிகள் வந்ததாகவும் சொன்னான்.

தனது காய்ச்சல் சுகமான பின்னர், தான் ‘காந்தி அண்ணை’யிடம் சென்று, தன்னை வேறு எங்காவது ஒரு முகாமுக்கு மாற்றிவிடும்படி கேட்டதாகவும், அதற்கு அவன் ‘கொஞ்சநாள் பொறு, பார்ப்போம்’ என்று கூறியதாகவும் சொல்லி முடித்தான் நல்லதம்பி.

நல்லதம்பிக்கு வந்த நோய் என்ன என்பது எனக்கு உடனடியாகவே விளங்கிவிட்டது. புலிகளின் தலைமைப்பீடம் நல்லதம்பி போன்றவர்களின் கைகளால் பலி எடுத்த மனித ஆத்மாக்களின் அவலத்தை நேரில் கண்டு அனுபவித்ததின் விளைவே அவனுக்கு வந்த நோய். அவன் விரும்பாமல் செய்த கொலைகள் நல்லதம்பியின் மன ஆழத்தில் புதையுண்டு கிடந்து கொண்டு, அவ்வப்போது தலைகாட்டுகின்றது என்பதுதான் அவனது நோய்க்கான காரணம்.

பின்னர் நான் ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் விடுதலையாகி வந்த பின்னர், யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி புத்தகக் கடையில் ஒருநாள் இருந்த போது, அவ்வழியால் சென்ற நல்லதம்பி என்னைக் கண்டுவிட்டு என்னிடம் வந்தான். தான் இப்பொழுது கிளாலிக் கடலின் அக்கரையில் (குஞ்சுப் பரந்தன்) ஆட்களையும், பொதிகளையும் பரிசோதிக்கும் கடமையில் இருப்பதாகச் சொன்னான். அப்பக்கம் வந்தால் தன்னை வந்து பார்க்கும்படியும் கூறினான். நோய்வாய்ப்பட்டு இருந்த காலத்தைப் போலல்லாது ஓரளவு பரவாயில்லாத தோற்றத்தில் இருந்தான்.

பின்னர் என்னிடம் இரகசியமான குரலில் தெரிந்த நல்ல சோதிடர் யாராவது இருக்கிறார்களா என விசாரித்தான். ‘ஏன்’ என்று கேட்டேன். தான் இயக்கத்தில் இருந்து விலகுவதற்குத் ‘துண்டு’ கொடுத்துள்ளதாகவும், மேலிடம் இன்னும் ஒரு பதிலும் சொல்லவில்லை என்றும் சொன்ன அவன், தனக்கு எப்பொழுது விடுதலை கிடைக்கும் என்பதை, ஒரு நல்ல சோதிடர் மூலம் அறிய விரும்புவதாகச் சொன்னான்!

என்னைப் போன்ற கைதிகள் தான் புலிகளின் பிடியிலிருந்து விடுதலை பெற ஏங்குகிறோம் என்றால், புலி உறுப்பினர்களும் தமது ‘மேய்ப்பர்களிடமிருந்து’ விடுதலை பெறத் துடிக்கிறார்கள் என்ற விடயம் அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக