புதன், 10 அக்டோபர், 2012

கோவில்களை விட கழிப்பறைகள் கட்டுவதே முக்கியம்''.. ஜெயராம் ரமேஷ்

டெல்லி: நாட்டில் கோவில்கள் கட்டுவதை விட கழிப்பறைகள் கட்டுவதே மிகவும் முக்கியமானது, அவசியமானது என்று கூறியுள்ளார் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ்.
அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜெயராம் ரமேஷ் பேசுகையில், நமது நாட்டில் கழிப்பறைகளை விட கோவில்களே அதிகமுள்ளது. கோவில்களை விட கழிப்பறைகள் மிக முக்கியம். நாட்டில் எத்தனை கோயில்கள் உள்ளன என்பது முக்கியமல்ல. கழிப்பறைகளுக்கும், சுகாதாரத்துக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள், கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில், மத நம்பிக்கையின் அடிப்படையில் கோயில்களைக் கட்டுவது என்பதும், கழிவறைகளை அமைப்பது என்பதும் வெவ்வேறு விஷயங்கள். இந்தியா பல்வேறு மதங்களை உள்ளடக்கிய நாடு. கோயில், மசூதி, குருத்வாரா, தேவாலயம் ஆகிய மக்களால் புனிதமான இடங்களாகக் கருதப்படுகின்றன. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்களை தொடர்புபடுத்தி அமைச்சர் பேசியிருப்பது பெரும் தவறு.
மேலும் கழிவறைகளை அரசு அமைத்துக் கொடுத்து சுகாதாரத்தை பேண முடியும். அதனைச் செய்வதை விட்டுவிட்டு மக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் பேசுவதை ஜெய்ராம் ரமேஷ் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று என்றார் அவர்.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியும் கருத்து தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், எங்கள் கட்சி அனைத்து மதங்களின் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளது. எந்த சூழ்நிலையில், எதை வலியுறுத்துவதற்காக ஜெய்ராம் ரமேஷ் அப்படி பேசினார் என்பது சரியாகத் தெரியவில்லை. நாங்கள் அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்கின்றோம் என்று விளக்கினார் திவாரி.
இதற்கிடையே, ரமேஷ் வீடு முன்பு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி எதிர்ப்பைத் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக