புதன், 10 அக்டோபர், 2012

ஜெயந்தி நடராஜன் புகார், எனது அதிகாரத்தில் ப.சிதம்பரம் எப்படி தலையிடலாம்?

டெல்லி: பெரிய முதலீடுகள் தொடர்பாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் கொண்டு வந்துள்ள புதிய திட்டம், பிற அமைச்சர்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் ஜெயந்தி நடராஜன் பிரதமருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மூத்த காங்கிரஸ் அமைச்சர் மீது மற்றொரு காங்கிரஸ் அமைச்சர் குறை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் நிதியமைச்சரானது முதல் அடுத்தடுத்து பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை அமலாக்கி வரும் சிதம்பரம் தனது அடுத்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

பெரிய அளவில் முதலீடுகளை கொண்ட திட்டங்களுக்கு மிக விரைவாக ஒப்புதல் அளிக்கும் வகையில் நிதியமைச்சகத்தின் கீழ் தேசிய முதலீட்டு வாரியம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளார்.
பிற அமைச்சகங்களிடமிருந்து திட்டங்களுக்கு மிக விரைவான ஒப்புதலைப் பெறுவது இந்த வாரியத்தின் பணியாகும். திட்டங்களுக்கு இந்த வாரியம் ஒப்புதல் அளித்து விட்டால் வேறு எந்த துறையும் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க முடியாது.
இந்த வாரியம் முழுக்க முழுக்க நிதியமைச்சரின் கீழ் செயல்படும். இது குறித்து பல்வேறு அமைச்சகங்களுக்கும் சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
தங்களது அதிகாரத்தில் ப.சிதம்பரம் தலையிட இந்த வாரியம் வழி வகுக்கும் என்றாலும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் மிக நெருக்கமான சக்தி வாய்ந்த அமைச்சர் என்பதால் சிதம்பரத்துக்கு எதிராக பிற துறை அமைச்சர்கள் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
இந்த வாரியம் அமைக்கப்படுவது பிடிக்காவிட்டாலும் மனதுக்குள் புலம்பிக் கொண்டு அமைதி காத்து வருகின்றனர்.
இந் நிலையில் சிதம்பரத்தின் இந்தத் திட்டத்தால் மிக அதிகமாக பாதிக்கப்படப் போவது ஜெயந்தி நடராஜன் தான். பெரிய அளவிலான எந்தத் திட்டம் என்றாலும் அதற்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி நிச்சயம் தேவைப்படும். இந்தத் துறையை கையில் வைத்துள்ள ஜெயந்தி, சிதம்பரத்தின் திட்டத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், இந்தத் திட்டத்தை ஏற்க முடியாது. இது பல்வேறு அமைச்சகங்களில் எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். சுற்றுச் சூழல் அமைச்சர் எடுக்கும் முடிவை இந்த வாரியம் ரத்து செய்தால், நாடாளுமன்றத்தில் இது குறித்து பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு யாருடையது? என்று கேள்வி எழுப்பி, கடுமையான வாசகங்களுடன் இந்தக் கடிதத்தை ஜெயந்தி அனுப்பியுள்ளார்.
மூத்த காங்கிரஸ் அமைச்சர் மீதே இணையமைச்சர் இத்தகைய கடுமையான வாசகங்களை கொண்ட கடிதத்தை எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயந்திக்கு அமைச்சராக இருக்க பிடிக்கவில்லையோ?!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக