புதன், 17 அக்டோபர், 2012

ஜிண்டால்-ஜி நியூஸ்: ஊழல் மோதல்!

ஜி நியூஸ்நிலக்கரி வயல் ஒதுக்கீட்டு ஊழலில் ஜிண்டால் குழுமத்தைப் பற்றி விவாதிப்பதை குறைத்துக் கொண்டு தப்ப வைப்பதற்கு ரூ 100 கோடி ரூபாய் கேட்டதாக’ ஜீ டிவி மீது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் ஜிண்டாலுக்குச் சொந்தமான ஜிண்டால் பவர் நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் போலீசில் புகார் பதிவு செய்துள்ளார். ஜீ நியூஸ் தொலைக்காட்சியின் ஆசிரியர் சுதீர் சௌத்ரி மீதான அந்த புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போலீசார் மாநிலங்களுக்கிடையேயான குற்றப்பிரிவுக்கு அதனை விசாரணைக்கு அனுப்பியுள்ளனர்.
மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய ஜனநாயக முன்னணி நிலக்கரி வயல்களை தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கியதில் பல தனியார் கார்ப்பரேட்டுகள் ஆதாயம் அடைந்துள்ளனர். இதன் மூலம் நாட்டுக்கு ரூ 1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இவர்களில் இப்போதைய மத்திய அமைச்சரான நவீன் ஜிண்டால் தலைமையிலான ஜிண்டால் பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு அதிக பட்ச ஆதாயம் கிடைத்திருக்கிறது. ஜிண்டால் பவருக்கு 2,580 மில்லியன் டன் அளவிலான நிலக்கரிப் படுகைகளைக் கொண்ட வயல்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. நிலக்கரியை குறைந்த விலைக்குப் பெற்றாலும், உற்பத்தி செய்யும் மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ 3.85, ரூ 4.80 என்று அதிக விலைக்கு விற்றிருக்கிறது ஜிண்டால் பவர்.  இதே காலத்தில் பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி ஒரு யூனிட் ரூ 2.20க்கு மின்சாரத்தை வழங்கியிருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.vinavu.com

கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதி தில்லியின் லா மெரிடியன் ஹோட்டலில் நிலக்கரி வயல் ஒதுக்கீடு தொடர்பாக கேள்வி கேட்ட ஜீ தொலைக்காட்சி நிருபரைப் பிடித்துத் தள்ளி தனது வெறுப்பைக் காட்டியிருக்கிறார் நவீன் ஜிண்டால்.
நவீன் ஜிண்டால் ஹரியானா மாநிலத்தில் குருக்ஷேத்திரா தொகுதியின் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர். நவீன் ஜிண்டாலின் தந்தை ஓ பி ஜிண்டால் ஹரியானா மாநில அமைச்சராக இருந்தவர்,  தாய் சாவித்ரி ஜிண்டால் ஹரியானா சட்ட மன்ற உறுப்பினராக இருக்கிறார். நவீன் ஜிண்டால் நாட்டிலேயே அதிகம் சம்பளம் பெறுபவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறார். 2011-12ம் ஆண்டில் அவரது சம்பளமான ரூ 73.42 கோடி சென்ற ஆண்டை விட ரூ 6 கோடி அதிகம்.
‘ஆண்டுக்கு ரூ 20 கோடி வீதம் 5 ஆண்டுகளில் ரூ 100 கோடி விளம்பரங்கள் கொடுப்பதாக ஒத்துக் கொண்டால் நிலக்கரி வயல் ஒதுக்கீட்டில் அதன் ஈடுபாட்டைப் பற்றி பேசுவதை நிறுத்தி விடுவதாக ஜீ தொலைக்காட்சி’ சொன்னதாக ஜிண்டால் பவர் புகார் அளித்திருக்கிறது. இது தொடர்பான தொலைபேசி பதிவுகளையும், தில்லியின் ஹையத் ரீஜன்சி ஹோட்டலில் செப்டம்பர் 13, 17, 19 தேதிகளில் நடந்ததாக சொல்லப்படும் சந்திப்புகளில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களையும் ஜிண்டால் நிறுவனம் போலீசுக்குக் கொடுத்துள்ளது.
இந்தப் புகாரில் ஜீ டிவியின் சொந்தக்காரர்களான எஸ்ஸல் குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா, அவரது மகன் புனீத் கோயங்கா ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜிண்டால் நிறுவனத்தின் புகாரின்படி:
  • செப்டம்பர் 7ம் தேதிக்கும் 13ம் தேதிக்கும் இடையில் ஜீ நியூஸ் தொலைக்காட்சி வேண்டுமென்றே ஜிண்டால் பவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ஒளிபரப்பியது.
  • இதைத் தொடர்ந்து ஜிண்டால் பவர் நிறுவனம் ஜீ ஊழியர்களை சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டது. ஹையத் ஹோட்டலில் 13ம் தேதி ஜீ பிசினஸ் தொலைக்காட்சியின் ஆசிரியர் சமீர் அலுவாலியா ஜிண்டால் பவரின் மூன்று மேலாளர்களை சந்தித்தார். அந்தக் கூட்டத்தில் அலுவாலியா ரூ 20 கோடி விளம்பரத் தொகையாகக்  கொடுத்தால் ஜிண்டால் பவரைப் பற்றிய செய்திகளை குறைத்துக் கொள்வதாகச் சொன்னாராம்.
  • இதைப் பற்றி மேலிடத்தில் விவாதித்து விட்டு பதில் சொல்வதாகச் சொன்ன ஜிண்டால் மேலாளர்கள் மீண்டும் 17ம் தேதி ஜீ தொலைக்காட்சி மேலாளர்களை சந்தித்திருக்கின்றனர்.
  • அப்போதும் பேரம் படியாததால் 19ம் தேதி இன்னொரு முறை சந்தித்து விட்டு கடைசியில் தில்லியின் குற்றவியல் காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செயதிருக்கின்றனர்.
‘ஜிண்டால் பவர் நிறுவனம் தனது மேலாளர்களுக்கு ரூ 100 கோடி லஞ்சம் கொடுப்பதாக சொன்னது’ என்று ஜீ டிவி எதிர்க் குற்றச்சாட்டை முன் வைக்கிறது. ‘நிலக்கரி வயல் ஒதுக்கீடு பற்றிய செய்திகளை தவிர்த்தால், ஆண்டுக்கு ரூ 20 கோடி வீதம் 3 ஆண்டுகளுக்குத் தருவதாகச் சொன்னார்கள்’ என்கிறது அது.
இப்படி ஊடகத் துறையின் உள் நடைமுறைகளை பொதுவில் போட்டு உடைப்பதைக் குறித்து பிராட்காஸ்ட் எடிட்டர்ஸ் அசோசியேஷன் (ஒளிபரப்பு ஆசிரியர்கள் கூட்டமைப்பு) கவலைப்படுகிறது.  அதைப் பற்றி விசாரிப்பதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்திருக்கிறது.
தொலைக்காட்சி நிறுவனங்களும், பத்திரிகைகளும் ஊழல்களை அம்பலப்படுத்துவது அவர்கள் சொல்லிக் கொள்வது போல ‘பொது வாழ்க்கையை தூய்மைப் படுத்துவதற்காக’ இல்லை, மாறாக அவர்களது ‘சொந்த நிதி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதற்காகத்தான்’ என்று இதன் மூலம் தெரிகிறது.
விளம்பரப் பணம் கொடுப்பது அல்லது தவிர்ப்பது மூலம் ஊடகஙளை ஆட்டிப் படைக்கும் கார்ப்பரேட் முதலாளிகள், வழக்கமாக தங்கள் பெயர் முன்னுக்கு வராமல் பார்த்துக் கொள்வார்கள். இந்த விவகாரத்தில் நடந்த பேரத்தை அம்பலப்படுத்தி ஜீ டிவிக்கு ஒரு பாடம் கற்பித்துத் தர ஜிண்டாலும் ஆளும் கும்பலும் முடிவு செய்திருக்கின்றன.
இது போன்ற பேரங்களும் செய்திகள் அமுக்கப்படுதலும் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஊடக நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கும் இடையே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
படிக்க:
1. ஜிண்டால் குழுமம் முதல் தகவல் அறிக்கை பதிவு  -
2. ஜீ டிவியின் எதிர்வினை - 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக