திங்கள், 8 அக்டோபர், 2012

கடும் மழையால் அவசரமாக அதிகமாக காவிரி திறக்கப்பட்டது

மேட்டூர்: காவிரியில் நீர் திறக்க, கர்நாடகா முரண்டு பிடித்துக் கொண்டிருந்த நிலையில், வருண பகவான் கருணையால், நேற்று மாலை, மேட்டூர் அணை நீர் வரத்து, வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
மேட்டூர் அணையில் இருந்து, செப்டம்பர், 17ம் தேதி, பாசனத்துக்கு நீர் திறந்ததால், டெல்டா மாவட்டங்களில், 12.18 லட்சம் ஏக்கரில், விவசாயிகள், சம்பா சாகுபடி ஆயத்த பணிகளை துவங்கினர். வினாடிக்கு, 14 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில், நீர் வரத்து குறைந்ததால், மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிய துவங்கியது.செப்டம்பர், 17ம் தேதி, 84 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று மதியம் 71 அடியாகவும், 47 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு நேற்று, 33 டி.எம்.சி.,யாகவும் சரிந்தது.
கடந்த, 20 நாட்களில் நீர்மட்டம், 14 அடியும், நீர் இருப்பு, 13 டி.எம்.சி.,யும் சரிந்தது. இதனால், டெல்டா விவசாயிகள் கவலையடைந்தனர்.
தமிழகத்துக்கு தினமும், 9,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று, கர்நாடகா அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகா விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.போராட்ட உணர்வு தீவிரமாக உள்ள சூழ்நிலையில், நேற்று காலை வினாடிக்கு, 11 ஆயிரம் கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர் வரத்து, திடீரென மதியம் வினாடிக்கு, 26 ஆயிரம் கன அடியாகவும், மாலை, 4 மணிக்கு வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது.

கர்நாடகா அணைகளில் இருந்து, காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறந்தால், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு, முறைப்படி தகவல் தரப்படும். நேற்று விடுமுறை நாள் என்பதால், கர்நாடகாவில் இருந்து தகவல் எதுவும் கிடைக்காத நிலையில், எதிர்பாராமல் மேட்டூர் அணை நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்தது.கர்நாடகா அரசு, 9,000 கன அடி தண்ணீர் மட்டுமே காவிரியில் திறந்த நிலையில், கபினி, கே.ஆர்.எஸ்., அணைக்கு இடைப்பட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதியில், பெய்த திடீர் மழையால் மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்திருக்கும். காட்டாற்று வெள்ளம் என்பதால், நீர்வரத்து விரைவில் குறைய வாய்ப்புள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடுதல் நீர் வரத்தால் நேற்று மதியம், 71 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று மாலை, 4 மணிக்கு, 71.100 அடியாக உயர்ந்தது. 20 நாட்களுக்கு பின், மேட்டூர் அணை நீர்மட்டம், ஒரு அடி உயர்ந்துள்ளது.காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க, கர்நாடகா முரண்டு பிடித்த நிலையில், வருண பகவான் கருணையால், நேற்று, எதிர்பாராத விதமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும், டெல்டா விவசாயிகளும் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக