வெள்ளி, 26 அக்டோபர், 2012

இந்தியாவைக் காண வேண்டுமா? சென்னை அரசு மருத்துவமனைக்கு வாருங்கள்!!

அரசு பொது மருத்துவமனை, சென்னை
ந்தியா எப்பொழுது வல்லரசு ஆகும்? இந்த கேள்விக்கு பதில்  தெரிந்து கொள்ள வேண்டுமா? அவசியம் சென்னை சென்டரல் அருகில் இருக்கும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பாருங்கள். நிச்சயம் விடை கிடைக்கும்.
நாமும் அந்தக் கேள்விக்கு விடை தேடித்தான் மருத்துவமனைக்கு போனோம்.  வளாகத்தில் நுழைந்தவுடன் செட்டிநாடு மருத்துவமனை விளம்பரத்தில் வருவது போல் யாரும் நம்மை கை கூப்பி வரவேற்கவில்லை. அப்போலோ மருத்துவமனையின் ரிசப்ஷன் போன்று பளபள தரையில் பளிங்கு விநாயகர் சிலை, மணக்கும் பூக்கள் இல்லை.
வளாகத்தைச் சுற்றியும் மக்கள், ஏதோ ஒரு நோய், ஏதோ ஒரு கதையுடன், எதிர்காலம் என்னெவென்ற ஒரு கேள்விக் குறியுடன் மக்கள். முதலில் வெளி நோயாளிகளுக்கான பிரிவில் நுழைந்தோம். மக்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். அழுக்குப் படிந்த கட்டிடம், மக்கள் கூட்டம். அவர்களுக்கு சத்தமாக பதில் சொல்லியபடி இருக்கும் ஊழியர்கள்.

வெளியே மக்கள் ஓய்வெடுக்க உட்காரும் மண்டபத்துக்குள் நோயாளிகளும் உடன் வந்தவர்களும் ஈ மொய்க்க படுத்திருக்கிறார்கள். எங்குமே ஒரு கவிச்சி வாடை, கழிவு பொருட்கள், குப்பைகள் சிதறி விழுந்து கிடக்கின்றன. பக்கத்திலேயே ஒரு கோவில் இருக்கிறது. இந்த மருத்துவமனைக்கு வந்தால் யாருக்குமே கடவுள் நம்பிக்கை வந்துவிடும். கடவுள் நம்பிக்கையும் இல்லை என்றால் நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு தங்கள் சாகிற நாள் தெரிந்து மிச்சம் வாழும் நாள் நரகமாகிவிடும்.
பேசினால் நம்முடன் பேசுவார்களா? நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுவார்களா? என்ற தயக்கத்துடன் பேச தொடங்கினோம். ‘யாராவது நம்முடன் பேசமாட்டார்களா? நம் கவலைகளை பகிர்ந்துக்கொள்ளமாட்டோமா’ அவர்கள் ஏங்கியிருப்பார்கள் போல. நாம் பேச ஆரம்பித்தவுடன் மடமட என பேச ஆரம்பித்து விட்டார்கள்.
கிருஷ்ணகிரியிலிருந்து தங்கள் குழந்தையின் கால் நரம்பு பிரச்ச்னைக்கு சிகிச்சை பெற வந்திருந்தவர்களிடம் பேசினோம். அவர்கள் கட்டிட வேலை செய்கிறவர்கள். கிருஷ்ணகிரியிலிருந்து இரவே கிளம்பி விடியற்காலை 2 மணிக்கு கோயம்பேட்டில் இறங்கி 3 மணிக்கு மருத்துவமனை வந்துவிட்டார்கள்.
“விடியகாத்தாலேயே வந்தோம் அப்பவே எங்களுக்கு முன்னாடி பத்து பேர் லைன்ல நிக்கிறாங்க. காத்தாலேயே வந்தா, டாக்டர பாத்துட்டு பொழுதோட வீடு போய் சேரலாம் இல்லையா?” என்றார்கள்.
“கிருஷ்ணகிரி பக்கத்துல ஆஸ்பெத்திரி இல்லையா?”
“இருக்கு சார், பிரைவேட் ஆஸ்பெத்திரி போனா, காசு கொடுத்து கட்டுப்படி ஆகாது, கெவர்ன்மென்ட் ஆஸ்பெத்திரிக்கு போனா அவங்க சீட்டு எழுதி கொடுத்து இங்க வரச் சொன்னாங்க”
‘இங்க நல்ல தான் சார் பாக்கிறாங்க காசு எதுவும் வாங்கல, எல்லாம் ஃப்ரிதான்’
‘எதற்கும் காசு வாங்கவில்லையா? மாத்திரைகள் எல்லாம் ்ப்ரீயா கொடுக்கிறாங்களா?’
‘மருந்தும் ஃப்ரி தான் சார் சில தவிர, ஒரே ஒரு ஸ்கேன் மாத்திரம் வெளியே எடுக்க சொன்னாங்க 2000 ரூபாய் ஆச்சு’.
‘ஏன் அது இலவசம் இல்லையா’
‘ப்ரைவெட்டுக்கு போயிருந்தா எவ்வளவு செலவாயிருக்கும். டாக்டர் நல்லா பாத்துக்கிட்டாரு, கொழந்தைக்கும் குணமாயிடிச்சி’ என்றபடி விடை பெற்றார்.
வடபழனியில் இருந்து வந்திருந்த ஒரு வயதான பெண்மணியை சந்தித்தோம். அவருக்கு சர்க்கரை வியாதியாம். தொடர்ந்து வருகிராறாம், இலவச மருந்துகள் தான் தருகிறார்கள். ஆனால் ஊசியில் தினமும் போட்டுக் கொள்வதற்கான இன்சுலின் மருந்தை மட்டும் வெளியே வாங்கிக் கொள்ள சொன்னார்கள் என்றார். அவரிடம் இருந்த மருந்துகளை விட இன்சுலின் விலை உயர்ந்தது. அவர் முதலில் ஒரு தனியார் மருத்துவமனையில் தான் பார்த்துக்கொன்டிருக்கிறார், ஆனால் அந்த மருத்துவர் இவர் செலவு செய்ய முடியாதவர் என தெரிந்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு போக சொல்லியிருக்கிறார்.
சர்க்கரை வியாதியுடன் கூடிய ரத்த அழுத்த நோய் என்பது உடலை சிறிது சிறிதாக அழித்து வரும் நோய். அதற்கு சிகிச்சை தனியார் மருத்துவமனை என்றால் தடபுடலாக இருக்கும். மருத்துவரை நன்றாக ‘கவனிக்கும்’ மருந்து கம்பனியின் ரத்த அழுத்தம் குறைக்கும் மருந்தை பரிந்துரைப்பார். தனக்கு வருட சுற்றுலா செலவிற்கு பணம் கொடுக்கும் சர்க்கரை குறைக்கும் மருந்தை கொடுப்பார். இங்கே சில மருந்துகள் அரசே கொடுக்கிறது. முக்கிய மருந்தான இன்சுலினை வெளியே வாங்கிக் கொள்ளச் சொல்லி விட்டார்கள்.
அரசு மருத்துவர்களை குறை சொல்ல முடியாது. மருத்துவர்கள் தங்கக் கொடுத்திருக்கும் அறைகளைப் பார்த்தால், அழுக்கு படிந்த ரத்த வாடை அடிக்கும் மருத்துவமனை வளாகம் எவ்வளவோ மேல். மழை நீர் ஒழுகி கறை படிந்து இன்றோ நாளையோ என்று காத்திருக்கும் சுவர். பராமரிக்கப்படாத படிக்கட்டுகள். மருத்துவர்கள் ஒன்று சேவை மனப் போக்கில் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு வேலை செய்ய வேண்டும, இல்லை என்றால் மனதை கல்லாக்கிக் கொண்டு பணம் சம்பாதித்து வெளியே ஜாலியாக வாழ வேண்டும்.
நடுவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அவர்கள் போராடினால் (போராடுகிறார்களா?) அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். ஏதாவது பிரச்சினை வந்து நோயாளிகள் தாக்கினால் மருத்துவர்கள் ஒன்றுபட்டு எதிர்க்கிறார்களே அன்றி மருத்துவமனை மேம்பாட்டிற்காக போராடுவதில்லை.
மருத்துவமனை வளாகத்தின் பின்பகுதியில் இருந்த கான்டினுக்கு சென்றோம். மரத்தடியில் சிமென்ட் சுவர் மீது உட்கார்ந்திருந்தவர்களிடம் பேச்சு கொடுத்தோம். பக்கத்தில் அமரர் ஊர்திகள் நின்றுக்கொண்டிருந்தன. அழுக்குத் துணி போர்த்தி சூம்பிபோன கால்களை கொண்ட ஒரு அனாதை பிணத்தை எடுத்து சென்றார்கள்.
ஒருவரிடம் பேச்சு கொடுக்க அருகில் இருந்த இரண்டு பேரும் சரளமாக பேச ஆரம்பித்தார்கள். அவர்கள் திருவாரூரை அடுத்த புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், விவசாயக் கூலி செய்பவர்கள். தலையில் அடிபட்டு நரம்பு கோளாறுக்குள்ளான தங்கள் நெருங்கிய சொந்தக் காரரின் மருத்துவ சிகிச்சைக்காக வந்திருக்கிறார்கள்.
அவர் சிறு வயதில் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு நரம்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. கவனிக்காமல் விட்டிருக்கிறார்கள். திருமணமாகி குழந்தைகளும் பிறந்து விட்டன. நாளாக நாளாக உடலில் பல குறைகள், நடக்க முடியவில்லை, கால் வலி என்று படுத்த படுக்கையாகி விட்டிருக்கிறார்.
‘திருவாரூர்ல இதே மாதிரி பெரிய ஆஸ்பெத்திரி கட்டிடம் கலைஞர் பீரியட்ல கட்டிட்டாங்க, இங்க ஒவ்வொரு வகை நோய்க்கும் டாக்டரு இருக்கிறாங்க ஆனா அங்க இவ்வளவு டாக்டரு இல்ல. நரம்பு சிகிச்சைக்கு வெளியேதான் பார்த்துக்கணும்னு சொல்லிட்டாங்க’
‘தனியார் ஆஸ்பத்திரிக்கு போனா இருக்குற கோமணத்தையும் வித்தா கூட நோவு குணமாகுமா தெரியாது அதனால, தஞ்சாவூரில இருந்து திருவாரூர் வந்து வாரம் ஒரு முறை நோயாளிகளை பார்க்கிற டாக்டரைப் பார்த்தோம், ஒவ்வொரு முறைக்கும் 100 ரூபாய் பீசு. அவரு தஞ்சாவூரு போய் ஸ்கேன் எடுத்துட்டு வரச் சொன்னார். வழக்கமாக 5,000 ரூபாய் ஆகுமாம், இவர் சொன்னதால 3,000 ரூபாய்க்கு முடிஞ்சது’
நோயாளி படுத்திருக்கும் படுக்கையிலிருந்து ஸ்ட்ரெச்சரில் எடுத்துக் கொண்டு போய் ஆம்புலன்சில் ஏற்றி, ஸ்கேன் மையத்திற்கு கொண்டு போய், திரும்ப வந்து சேரும் ‘ஆடம்பரம்’ இவர்களுக்கு இல்லை.
நோயாளியை கைத்தாங்கலாக ஆட்டோவில் ஏற்றி ரயில் நிலையம் அழைத்துச் சென்று, ரயிலில் ஏற்றி, தஞ்சாவூரில் இறங்கிய பிறகு மீண்டும் ஒரு ஆட்டோவில் ஸ்கேன் மையம் போய் ஸ்கேன் எடுத்து விட்டு ஆட்டோ, ரயில், ஆட்டோ என்று வீடு கொண்டு வந்திருக்கிறார்கள்.
‘ஸ்கேனைப் பார்த்த டாக்டர் ஆப்பரேசன் செய்யச் சொல்லிட்டாரு, தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு போகலாம்’ தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் செய்து கொண்ட இரண்டு பேர் இறந்துவிட்டார்களாம். ‘இறந்தால் பரவயில்லை சார் ஆனால் பொறுப்பா ஒருத்தரு கூட பதில் சொல்றது இல்லை. நரக வேதனையா பொயிடுது’
அதனால் சென்னையில் வேலை பார்க்கும் இன்னொரு உறவினர் மூலமாக சென்னை கொண்டு வந்திருக்கிறார்கள். கூட வந்தவர்களுக்கு இரவு படுக்கையெல்லாம் வெளியே ரோடு, ப்ளாட்பாரத்தில் தான். குளியல் அரசு மருத்துவமனை கழிப்பறையில். உணவு ப்ளாட்பார கடையில். அதுவே காசு அதிகமாகிவிடுகிறது என இரண்டு வேளைதான்  சாப்பிடுகிறார்கள். மெனுகார்ட் பார்த்து ஆர்டர் செய்து சாப்பிடுபவர்களுக்கு ப்ளாட்பார கடையில் விலை கேட்டு கேட்டு சாப்பிடும் அவலம் புரியாது.
இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வராமல் விவசாய வேலை இல்லை. வயலெல்லாம் பிளாட் போட்டு விற்பதில் கட்டிட வேலை கிடைக்கிறது. அங்கு போனால் வேலை சிரமம். 100 நாள் வேலைத் திட்டத்துக்குப் போகலாம். 133 ரூபாய் குறைந்த பட்ச கூலி என்று அரசாங்கம் அறிவித்து விட்ட போதும், இவர்களுக்கு கிடைப்பது கமிஷன் போக 80 முதல் 90 ரூபாய் மட்டும்தான். அதுவும் ஒரு வாரத்துக்குப் பிறகுதான் கொடுக்கிறார்கள்.
’90 ரூபா சம்பாதிச்சா எப்படி பொழைக்கிறது, அரிசி கிலோ 37 ரூபாய்க்கு விக்குது. நாங்க நெல்லை 10 ரூபா ஐம்பது காசுக்கு கொடுக்கிறோம். அதை அரிசியாக்கினா 400 கிராம் தேறும். அதுக்கு வெலை 25 ரூபாதான் வரணும். ஆனா நல்ல அரிசி 45 ரூபாய்க்கு விக்குது’
‘ரேஷன் அரிசியை வாங்கி மனுசன் சாப்பிட முடியாது, தஞ்சாவூரில் நாங்க விளைத்து கொடுக்கிற சன்ன ரக அரிசி எல்லாம் தனியார் வியாபாரிகளுக்கு போய் விடுகிறது. எங்களுக்கு மோட்டா அரிசிதான் போடுகிறார்கள்’
’நாம் சோற்றில் கை வைக்க விவசாயி சேற்றில் கால் வைக்க வேண்டும்’ஆனால் உண்மை நிலமை நாம் பிட்சாவில் கை வைக்க விவசாயி புதை சேற்றில் கால் வைத்து புதைந்துவிடுகிறான். இப்படி வாழ்க்கையில் புதைந்துக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு மருத்துவ சிகிச்சை ஒரு கேடா?
இவர்களிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து, நம்முடன் பேச முனைகிறார் ஒரு வயதானவர். அவரிடம் பேசினோம். இவர் வேலூர் அருகில் இருக்கும் திருப்பத்தூரை சார்ந்தவர். தன் மகனுக்கு சிகிச்சை எடுக்க வந்திருக்கிறார். கூலி விவசாயியா? கூலித் தொழிலாளியா? என்று வரையறுத்து அவரால் கூற முடியவில்லை.
”விவசாய வேலைக்கு கூப்பிட்டா போவேன், எல்லா நாளும் கெடைக்காதில்ல, அப்பயெல்லாம் ஏதாவது கூலி வேலைக்கு போவேன். மூட்டை கூட தூக்குவேன்”என்றார். மகனுக்கு விபத்தில் சிக்கி ஒரு பக்கம் உடல் செயலற்று போயிருக்கிறது. எல்லோரும் சொன்னார்கள் என்று கும்பகோணத்தில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போய் சிகிச்சை பார்த்ததில் சொந்தமாக இருந்த நிலத்தை விற்ற மூன்று லட்ச ரூபாய் செலவாகி விட்டிருக்கிறது.
அதன் பிறகு இப்போது இங்கு எடுத்து வந்திருக்கிறார்கள்.
”மூணு நாளா இங்கியே விழுந்து கிடக்கிறேன். பொண்டாட்டி நகை வச்சி கொண்டுவந்த காசு தீந்து போச்சு. இப்ப டாக்டரு ஸ்கான் ஒண்னு எடுக்கணும், வெளியே எடுத்தா 5,000 ஆகும், நான் சொல்லுற இடத்துல எடுத்தா 3,000 தான்னு சொன்னாரு. என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டிருக்கேன்” என்றார்.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முகத்தில் கேள்வியுடன் ஒரு நிச்சயமற்றத் தன்மையுடன்  அவர் அரசு மருத்துமனையை சுற்றி சுற்றி வருகிறார். ‘ஏதாவது வழி கிடைத்து விடாதா, யாராவது வழி காட்டி விட மாட்டார்களா’ என்ற தவிப்பு முகத்தில்.
அவருக்கு நியாய விலையில் உணவு கொடுக்க விரும்பாத அரசு, அவருக்கு வேலைக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாத சமூகம், அவரை இப்படி உதிரி பாட்டாளியாய் அலையவிட்ட இந்த அரசு  எப்படி அவருக்கு நல்ல மருத்துவ சிகிச்சை மாத்திரம் அளித்துவிடும் என்பதை அவருக்கு எப்படி புரிய வைக்க?
அரசு மருத்துமனை முழுவதும் அனைவரிடமும் ஒரு சோகமும், நிச்சயமற்றத்தன்மையும் காண முடிகிறது. ‘இலவசமாக கிடைக்கிறது, கிடைப்பதை நன்றியுணர்வுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்ற எண்ணம்தான் இருக்கிறது. மருத்துவ வசதிகள் தமது அடிப்படை உரிமை அவற்றுக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் சுத்தமாக இல்லை.
‘நல்ல மருத்துவ சேவை எப்படி இருக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் தேவையான மருத்துவ சேவை எப்படி கொடுக்க வேண்டும்’ இதெல்லாம் அரசுக்கு கவலையளிக்கும் விசயமல்ல. மருத்துவத்துறையை தனியார்மயமாக்கிவிட்டொம். பணம் இருப்பவர்களுக்கு தரமான சிகிச்சை என்ற மாயை. பணம் இல்லாதவர்களுக்கு அந்த மாயையும் இல்லை.
4 வருடங்களுக்கு முன்பு நண்பன் ஒருவனுக்கு காலில் அடிபட்டுவிட்டது. லேசான காயம் தான். அப்பலோ மருத்துவமனையில் ஒரு மைனர் ஆபரேஷன். அவன் உயர் மத்தியவர்க்க குடும்பத்தைச் சார்ந்தவன். நான் தான் அன்று அவனுடன் இருந்தேன். காலை 8 மணிக்கு சென்று ஒரு அறையில் அட்மிட் ஆக சொன்னார்கள். இவன் டிலக்ஸ் அறை ஒன்றை புக் செய்தான் அப்பொழுதே நாள் வாடகை 3,000 ரூபாய் என்று நினைக்கிறேன்.
அந்த அறை குளிரூட்டப்பட்ட அறை, அழகிய டிவி, அட்டாச்சட் பாத்ரூம் இருந்தது. உணவுக் கட்டுப்பாடு பெரிதாக இல்லை என்பதால் இருவரும் தின்பண்டங்களை கொரித்தப்படி டீவி பார்த்தோம். அன்பாக பேசும் உதவியாளர்கள். மத்தியானம் ஒரு ஸ்டெரச்சரில் அழைத்துக்கொண்டு போய், 1 மணிநேரத்தில் அனுப்பிவிட்டார்கள். மாலை டிஸ்சார்ஜ் ஆகலாம் என சொல்லிவிட்டார்கள். அறையில் பினாயில் வாசனை கூட இல்லை. அவ்வளவு சுத்தம்.
புறப்படும் நேரம் வந்த போது, என் நண்பன் ‘இருடா அறைக்கு இன்னும் நேரமிருக்கு ஜாலியா இன்னும் கொஞ்ச நேரம் டீவி பார்க்கலாம்’ என்றான்.
நான் இதை நினைத்தப்படியே அரசு மருத்துவமனையை பார்த்து கொண்டிருந்தேன். எல்லா வகையிலும் வஞ்சிக்கப்படும் உழைக்கும் மக்களுக்கு மருத்துவ வசதி கூட ஒரு தர்மம் போல பிச்சையாகத்தான் போடப்படுகிறது.
சிறு நீர் கழிக்க வேண்டும் என்று கழிவறை தேடினோம். கட்டண கழிவறை. வெளியே 2 ரூபாய் கட்டும் இடத்தில் குளியல் சோப்பு, ஷாம்பூ, துணி துவைக்கும் சோப்பு, என்ணேய் எல்லாம் விற்பனைக்கு இருந்தது. காசு வாங்கும் இடத்தில் அமர்ந்திருந்தவர், கழிவறைக்கு வந்த ஒரு பெண்மணியிடம் சண்டை போட்டபடி இருந்தார். அந்த பெண்மணி சரியாக பணம் கொடுப்பதில்லை போலும், சிறுநீர் என்று சொல்லிவ்ட்டு 2 ரூபாய் கொடுத்துவிட்டு கழிவறைக்கு சென்றுவிடுவாராம் இது தான் சண்டையின் சாரம்.
ஒருவர் ஒரு நாளைக்கு 2 முறை சிறு நீர் கழிப்பார் என்றால், சர்க்கரை வியாதிக்காரருக்கு 4 அல்லது5 முறை ஆகிவிடும். அத்தனை முறை 2 ரூபாய், கழிவறைக்கு 5 ரூபாய் குளிக்க 10 ரூபாய் என்று போனால் ஒரு நாளைக்கு இதற்கு மாத்திரம் 20 ரூபாய் செலவாகிவிடும். 10 ரூபாய்க்கு சாப்பிட்டு 20 ரூபாய்க்கு கழித்து, இதற்கெல்லாம் பணத்திற்கு எங்கே போவது!
கழிவறையோ இன்னும் மோசம். அங்கே சென்றால் இல்லாத நோய்கள் நம்மை தாக்க்கும். இதில் அங்கேயே துணியும் துவைத்துக் கொள்ளலாமாம். ஒரு செட் துணிக்கு 10 ரூபாய் தான். சிறுநீர் கழிக்கக் கூட பொய் சொல்லி ஏமாற்ற வேண்டிய நிலையில் தான் அரசு மருத்துமனைகள் உள்ளன.
ஒருவரின் உயிர் வாழும் உரிமை கூட அவரிடம் இருக்கும் பணத்தை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. மாரடைப்பு வந்து விட்டால் பணம் இல்லாத ஏழைகள் உயிரை விட்டு விட வேண்டியதுதான். ஓரிரு லட்ச ரூபாய்கள் வைத்திருப்பவருக்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்ட் செய்து சரி செய்ய முயற்சிக்கலாம். அதிலும் தேறவில்லை என்றால் பல லட்சங்கள் செலவழிக்க முடிய வேண்டும், ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை நடத்துவதற்கு. அதற்கு அடுத்த கட்டமாக சில கோடி ரூபாய்கள் செலவழித்து வெளிநாடுகளுக்கு அழைத்து போகலாம். வசதி இல்லாதவர்களுக்கு உயிர் வாழும் வாய்ப்பு இல்லை, சிம்பிள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக