வியாழன், 11 அக்டோபர், 2012

லண்டன் ஹீத்ரோ ஏர்போர்ட்டில் ஆணும் பெண்ணும் கைது! போட்டோகிராபர் கடத்தலுடன் தொடர்பு?


Viruvirupu
லண்டன் ஹீத்ரோ ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய இருவர், தீவிரவாத குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இருவரும் 26 வயதான, ஒரு ஆண், ஒரு பெண், எகிப்து தலைநகர் கய்ரோவில் இருந்து வந்திறங்கியபோது நேற்றிரவு 8.30 மணிக்கு கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது. இருவரும் பிரிட்டிஷ் பிரஜைகள்.
இருவரும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக சிரியா சென்றுவிட்டு திரும்புகிறார்கள் என்பதே குற்றச்சாட்டு. சிரியாவில் வைத்துக் கடத்தப்பட்ட பிரிட்டிஷ் போட்டோகிராபர் ஒருவரின் கடத்தலுடன் இவர்கள் தொடர்புடையவர்களா என விசாரிக்கப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது.

சிரியாவில் யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் செய்தி சேகரிக்கச் சென்ற பிரிட்டிஷ் போட்டோகிராபர் ஜான் கான்ட்லி, அவரது சக போட்டோகிராபர் நெதர்லாந்தைச் சேர்ந்த ஜெரோவென் ஆர்லிமென்ஸ் ஆகிய இருவரும், சிரியாவில் தீவிரவாத அமைப்பினரால் கடத்தப்பட்டார்கள். இது, கடந்த ஜூலை 19-ம் தேதி நடைபெற்றது.
இருவரும் தாம் அடைத்து வைக்கப்பட்ட இடத்தில் இருந்து தப்பியோட முயன்றபோது, ஒருதடவை சுடப்பட்டு, பிடிக்கப்பட்டனர். ஆனால், அதே போன்ற மற்றொரு முயற்சியில், தப்பித்து வந்து சேர்ந்தனர். இரண்டாவது தடவை அவர்கள் தப்பியதற்கு, தீவிரவாத அமைப்பில் இருந்த சிலர் உதவியதாக கூறியிருந்தனர்.
பணயக் கைதியாக இருந்து தப்பித்த பிரிட்டிஷ் போட்டோகிராபர் ஜான் கான்ட்லி லண்டன் திரும்பியபின், தம்மை கடத்தியவர்கள் பற்றிய விபரங்களை தெரிவித்தார். அப்போது, தாம் பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்தபோது, மருத்துவ சிகிச்சை வழங்கிய டாக்டர் ஒருவர் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
“சிரியாவில் தீவிரவாதிகளுடன் இருந்த அந்த டாக்டர், பிரிட்டிஷ் உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசினார். அவரது ஆக்ஸன்ட், பக்கா ஈஸ்ட் லண்டன் பாணியில் இருந்தது. நான் பேச்சுக் கொடுத்தபோது, தாம் லண்டனில் NHS டாக்டராக இருந்தவர் என்று அவர் கூறினார். அவர் பயன்படுத்திய சலைன் ட்ரிப்ஸில் NHS லோகோ இருந்தது” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து ஸ்காட்லாந்து யார்ட், ஈஸ்ட் லண்டன் பகுதியில் இருந்த குறிப்பிட்ட வயது NHS டாக்டர்களில் யார்யாரெல்லாம் நீண்ட நாட்களாக வெளிநாடு சென்றிருக்கிறார்கள்? யாருக்கு என்ன பின்னணி உள்ளது? என்ற ரீதியில் ரகசியமாக விசாரித்து தகவல்களை எடுத்து தயாராக வைத்திருந்தது.
தற்போது லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் சிக்கிய இருவரும் யார் என்பது குறித்த அடையாளங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. ஆனால், நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டபின், ஈஸ்ட் லண்டனில் உள்ள இரு வீடுகள் இன்று தீவிரவாத எதிர்ப்பு போலீஸால் சோதனையிடப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் சென்ட்ரல் லண்டன் போலீஸ் ஸ்டேஷனில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் அநேகமாக டாக்டராக இருக்கலாம் என ஊகிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக