திங்கள், 15 அக்டோபர், 2012

ஜெயாவின் ஜால்ரா பாண்டியனே காவல்துறையை வறுத்துவிட்டார்

காவல்துறையின் செயல்பாடு குறித்து தா.பாண்டியனே 'சர்டிபிகேட்' கொடுத்து விட்டார்... 
 தா.பாண்டியன் ::தமிழகத்தில் தற்போது காவல்துறையின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் காவல்துறையினர் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பொய் வழக்குகளை பதிவு செய்வது அதிகரித்துள்ளது
சென்னை: அதிமுகவுடன் அன்பும், நட்பும் பாராட்டி நெருக்கமாக இருந்து வரும் தா.பாண்டியனே தமிழக காவல்துறை குறித்து கடுமையான கருத்தை தெரிவித்திருப்பதிலிருந்தே, தமிழக காவல் துறையின் செயல்பாடுகள் எந்த திசையை நோக்கி இறங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை யூகித்துக்கொள்ளலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:
கேள்வி: நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற, இந்திய குடியரசு தலைவர் யோசனை தெரிவித்திருக்கிறாரே?
பதில்: மக்களவையிலும், மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் சிலர், சில விஷயங்களில் மிகவும் ஆவேசமாக நடந்துகொள்கின்றனர். இதனால் நாள்தோறும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்குகின்றன. இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட ஒருமித்த கருத்து வேண்டும். இதற்கு தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்வது குறித்து, நாடாளுமன்ற-மாநிலங்களவை உறுப்பினர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். அப்பொழுது தான் மக்களுக்கு உரிய முறையில் பணியாற்ற முடியும் என்று உத்தரபிரதேச பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசு தலைவர் யோசனை தெரிவித்திருக்கிறார்.
குடியரசு தலைவர் அவர்கள் தெரிவித்துள்ள இந்த யோசனை நல்ல யோசனைதான் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே, அனைத்து கட்சியினரும் கலந்துபேசி, கருத்தொற்றுமை கண்டு, சட்டதிருத்தத்தை மேற்கொண்டால் நமது நாட்டு ஜனநாயகம் வளம் பெறுவதற்கு பேருதவியாக இருக்கும்.
கேள்வி: தமிழகத்தில், அடுத்த ஆண்டு ஜுன் மாதத்தில்தான் மின்வெட்டு தீரும் என்று தமிழக மின்துறை அமைச்சர் பேசியிருக்கிறாரே?
பதில்: தமிழகத்தில், அடுத்த ஆண்டு ஜுன் மாதத்தில்தான் மின்வெட்டு தீரும் என்றும், மின்வெட்டு பிரச்சினை நீடிப்பதற்கு மத்திய அரசுதான் காரணம் என்றும் அவர் பேசியிருக்கிறார். மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மின்சாரத்தில் 1100 மெகாவாட் மின்சாரத்தை குறைத்து விட்டதோடு, வழங்க வேண்டிய நிலக்கரியில் 30 சதவீதத்தை குறைத்துவிட்டது என்றும் பேசியிருக்கிறார்.
எனவே, மத்திய அரசு மீதும் மற்றவர்கள் மீதும் குற்றம்சாட்டுவதை நிறுத்திக் கொண்டு நீண்டு கொண்டிருக்கும் இருளில் நித்தமும் தவிக்கும் மக்களின்மீது பரிவு கொண்டு, மின்வெட்டை வெகுவாகக் குறைப்பதற்கும், நீக்குவதற்கும் தேவையான முயற்சிகளை ஆழ்ந்த சிந்தனையோடு அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டும் என்பதே வாக்களித்த மக்களின் விருப்பமாகும்.
கேள்வி: தமிழக காவல்துறையை பற்றி என்ன கருதுகிறீர்கள்?
பதில்: தமிழகத்தின் காவல் துறை எப்படி செயல்பட்டு வருகிறது என்பதை பற்றி ஆதாரங்களோடு பலமுறை விளக்கி சொல்லியிருக்கிறேன்.
கோவையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தமிழகத்தில் தற்போது காவல்துறையின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் காவல்துறையினர் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பொய் வழக்குகளை பதிவு செய்வது அதிகரித்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார். 
அதிமுகவுடன் அன்பும், நட்பும் பாராட்டி நெருக்கமாக இருந்து வரும் தா.பாண்டியனே இப்படி கடுமையான கருத்தை தெரிவித்திருப்பதிலிருந்தே, தமிழக காவல் துறையின் செயல்பாடுகள் எந்த திசையை நோக்கி இறங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை யூகித்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக