ஞாயிறு, 14 அக்டோபர், 2012

விஜயகாந்த் பா.ஜ.,வுடன் கூட்டணி தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோக்சபா தேர்தலுக்கு, தே.மு.தி.க.,வை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில், தி.மு. க., - காங்.,
கட்சிகள் இறங்கியுள்ள நிலையில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, விஜயகாந்த் காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே, தி.மு.க., - காங்., கூட்டணியில் விரிசல் விழத் துவங்கியது."டெசோ' மாநாடு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு, எரிபொருள் விலை உயர்வுக்கு கண்டனம் என, மத்திய அரசுக்கு எதிராக, தி.மு.க., தலைமை தெரிவிக்கும் கருத்துக்கள், காங்கிரசை கழட்டி விட, அடுத்தடுத்து அரங்கேறும் காட்சிகளாக பார்க்கப்படுகிறது.மேலும், அமைச்சரவை மாற்றத்தில் இடம்பெற மாட்டோம் என்று கூறி, காங்கிரஸ் மேலிடத்தின் அழைப்பையும், தி.மு.க., தலைமை நிராகரித்துள்ளது. அதேநேரத்தில், லோக்சபா தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்ற தகவல் கசிந்து வரும் நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளிலும், தி.மு.க., தலைமை இறங்கியுள்ளது.
காங்கிரசை, கழற்றிவிட்டு, தே.மு.தி. க.,வுடன் கைகோர்க்க, அக்கட்சி காய் நகர்த்தியது. லோக்சபா தேர்தலில், 12 சீட்கள் வரை தருவதாக, முக்கியப்புள்ளி ஒருவர் மூலம், விஜயகாந்திற்கு நெருக்கமானவருக்கும் அக்கட்சி தூது அனுப்பியது.
அதற்கு போட்டியாக, மத்திய அமைச்சர், மாநில நிர்வாகி ஒருவர் மூலம், தே.மு.தி.க.,வை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை, காங்கிரஸ் கட்சியும் துவங்கியது. அரசியல் மட்டத்தில், இது பரபரப்பை ஏற்படுத்தியது.உள்ளாட்சித் தேர்தலில் கழற்றி விட்டதாலும், அதன் பிறகு நடந்த பல்வேறு சம்பவங்களாலும், ஆளும் அ.தி.மு.க., மீது, உச்சக்கட்ட கடுப்பில் இருக்கும் விஜயகாந்த், அவர்களுக்கு பாடம் புகட்ட, எதிரணியில் சேருவதை விரும்புவார் என்ற எதிர்பார்ப்பு தான் இரு கட்சிகளும் அவருக்கு வலை விரிக்க காரணமாக அமைந்தது.ஆனால், தனது ரிஷிவந்தியம் தொகுதியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்ற தே.மு.தி.க., தலைவர், இந்த கூட்டணி ஹோஷ்யங்களுக்கு திடீரென முற்றுப்புள்ளி வைத்தார்.

அ.தி.மு.க., - தி.மு.க., - காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுமே, "பிராடு' கட்சிகள் என்று கூறிய அவர், அந்த கட்சிகளுக்கு லோக்சபா தேர்தலில் ஓட்டுப் போடக்கூடாது என, வெளிப்படையாக பேசி, பரபரப்பை ஏற்படுத்தினார்.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அமைக்கும் கூட்டணியில், பங்கேற்கக் கூடாது என்ற தனது மன நிலையை அவர், இந்த பேச்சின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். அதற்காக, நான் பா.ஜ.,வோடு சேருவேன் என்று நினைத்து விடக்கூடாது என்ற கருத்தையும் சொல்லி, ஒட்டு மொத்த நிர்வாகிகளையும் குழப்பி விட்டார் விஜயகாந்த். ஆனால், விஜயகாந்தின் மன ஓட்டத்தை அறிந்த, முன்னணி தே.மு.தி.க., நிர்வாகிகள், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என்று உறுதிப்படுத்துகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: மத்தியில் நடந்த ஆட்சிகளில், வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ., ஆட்சி தான் சிறந்தது என, தனக்கு நெருக்கமானவர்களிடம் விஜயகாந்த் அடிக்கடி கூறுவதுண்டு. மதவாத கட்சியுடன் கூட்டணி வைப்பதா என்ற பிரசாரத்தை, தி.மு.க.,வோ அல்லது அ.தி.மு.க.,வோ முன்னிலைப்படுத்த முடியாது.ஏனென்றால், இவ்விரு கட்சிகளும், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து, பதவி சுகத்தை ருசித்த கட்சிகள். எனவே, அரசியல் ரீதியாக, பா.ஜ.,வை தீண்டத்தகாத கட்சி என்று இரு கழகங்களும் கூற முடியாத நிலை உள்ளது. அதனால், பா.ஜ.,வுடன் இணைந்து, லோக்சபா தேர்தலை சந்திப்பதையே விஜயகாந்த் முன்னிலைப்படுத்துகிறார். மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகள் ஆளும் அ.தி.மு.க.,வுக்கு எதிராக உள்ளது. ஸ்பெக்ட்ரம், உட்கட்சி விவகாரம் போன்றவற்றால் தி.மு.க., ஏற்கனவே பலவீனமடைந்துள்ளது. இந்த இரு கட்சிகளும் ஒதுக்கி விட்டால், காங்கிரசின் நிலை, கவலைக்கிடமானதாக மாறி விடும்.எனவே, தேசிய கட்சியான பா.ஜ.,வுடன் அணி அமைப்பது, சர்ச்சைகளை உருவாக்காது.

மேலும், தமிழக பா.ஜ.,விற்கு என அதிக அளவில் தொகுதிகளை ஒதுக்க வேண்டியதில்லை. பெரும்பான்மை தொகுதிகளில் தே.மு.தி.க.,வே போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.தேசியக் கட்சி என்ற முறையில், பா.ஜ.,வின் "உதவி'களும் கிடைக்கும். இதைக் கருத்தில் கொண்டுதான், கேப்டன் யோசிக்கிறார். எங்களைப் பொறுத்தவரை, மூன்று கட்சிகளை வேண்டாம் என கழட்டிவிட்டது போல், பா.ஜ.,வையும் உதறி விடக்கூடாது. "தெய்வத்தோடும், மக்களோடும் கூட்டணி' என்ற பழைய, "டயலாக்'கை முன் நிறுத்தினால், ஏற்கனவே நொந்து போயுள்ள கட்சி நிர்வாகிகள், பாதுகாப்பான மாற்றிடம் தேடி, ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். இதை உணர்ந்து, கட்சித் தலைமை முடிவெடுக்கும் என்று நம்புகிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக