வெள்ளி, 5 அக்டோபர், 2012

உதயகுமார்: "மீடியா'க்களில் தோன்ற ஆசை. சாலைகளை தோண்டி "சீன்'

திருநெல்வேலி: கூடங்குளம் செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில், இதுவரை போராட்டம் என்ற பெயரில், "சீன்' காட்டிக் கொண்டிருந்த, வெளிநாட்டு கைக்கூலி உதயகுமார் மற்றும் ஆதரவாளர்கள், தற்போது, செய்வதறியாமல் திகைக்கின்றனர். மேலும், 8ம் தேதி, பெரிய அளவில் போராட்டம் நடத்தவும், அன்று, வன்முறையில் இறங்கவும் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலமாவது, தங்கள் பெயர் பத்திரிகைகளில் பெரிய அளவில் வெளிவரும் என்ற ஆசையில் உள்ளனர்.
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு அணு உலைகளில், முதலாவது அணு உலையில், மின் உற்பத்திக்காக, யுரேனியம் நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும், 45 நாட்களில், மின் உற்பத்தி செய்யத் துவங்கும் நிலையை அணு உலை எட்டி விடும். இந்நிலையில், வரும், 8ம் தேதி, கூடங்குளம் அணு உலையை, கடல் வழியே முற்றுகையிட, போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.
யுரேனியம் நிரப்பப்பட்டு விட்டதால், இனியும், போராட்டங்களை வெறுமனே இழுத்தடிக்க இவர்கள் விரும்பவில்லை. போராட்டத்தை வலுப்படுத்தும் பணியில், மும்முரமாக இறங்கியுள்ளனர். குறிப்பாக, இடிந்தகரை, பெருமணல், கூத்தங்குழி, உவரி உள்ளிட்ட, பல்வேறு கடலோர பகுதிகளிலிருந்து, படகுகளில் மக்களை திரட்டி வர திட்டமிட்டுள்ளனர். இதற்காக பணம் வினியோகித்து வருகின்றனர். செப்., 10ல் நடந்தது போல, போலீசாரை இடையூறு செய்வதோடு, அவர்களுக்கு மன ரீதியாக, "டென்ஷன்' ஏற்படுத்தினால் தான், தங்களை விரட்டுவர், "எங்களுக்கு எதிரான தாக்குதல், மனித உரிமைக்கு எதிரான சம்பவம் இது' எனக் கூச்சல் போடலாம் என, திட்டமிட்டுள்ளனர்.

கடந்த முறை போராட்டக்காரர்கள் அணு உலைக்கு அருகே, 300 மீட்டர் தொலைவில், கடற்கரை வழியே நெருங்கி வந்தபோது, பெண் போலீசார் உட்பட நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவித்தனர். இரண்டு நாட்கள், முழுமையாக அங்கேயே இருந்த போலீசாருக்கு, அவ்வப்போது உணவு, குடி நீர் போன்றவற்றை, போலீஸ் வாகனங்களில், காட்டு வழியே எடுத்துச் சென்றனர். ஆனால், இந்த முறை அந்த வழியே போலீசார் வரக்கூடாது என்பதற்காக, வைராவிக் கிணறு வழியே, கடற்கரைக்கு செல்லும் ரோட்டின் குறுக்கே, இயந்திரங்கள் மூலம், பள்ளம் தோண்டிப் போட்டுள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் தந்த புகாரை அடுத்து, கூடங்குளம் போலீசார், போராட்டக் குழுவை சேர்ந்த புஷ்பராயன், ஜேசுராஜ் உள்ளிட்டவர்கள் மீது, "வழக்கம்'போல வழக்குப் பதிவு செய்துள்ளனர். 8ம் தேதி போராட்டத்தை, "இறுதிப் போராட்டம்' என, அறுதியிட்டுள்ள நிலையில், அணு உலைக்கோ, போலீசுக்கோ பாதிப்பு வராமல், பாதுகாக்கும் முயற்சியில், போலீசார் இறங்க வேண்டும். இடிந்தகரையை சுற்றிலும் போலீஸ் நிற்கிறது எனவும், வைராவி கிணறு, கூடங்குளம், தாமஸ் மண்டபம் என, எல்லா பகுதிகளும், போலீசாரின் கட்டுக்குள் இருப்பதாக கூறும் இப்பகுதிக்குள், போலீசாரின் கவனத்தில் வராமல், மண் அள்ளும் இயந்திரம் எப்படி நுழைந்தது, பாதையில் குழி தோண்டியது எப்படி என்பது ஆச்சரியமாக உள்ளது. "இயந்திரத்தின் உதவியுடன், சாலையைப் பாழ்படுத்தியுள்ள போராட்டக்காரர்கள் மீது, வழக்குப் பதிவு செய்ய வேண்டும்' என, அப்பகுதியில் உள்ள மக்கள் கூறுகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக